அமேதியில் இருந்து ஓடிய ராகுல் காந்திக்கு வயநாடும் கடினமாக இருக்கும்: ரவிசங்கர் பிரசாத்


அமேதியில் இருந்து ஓடிய ராகுல் காந்திக்கு வயநாடும் கடினமாக இருக்கும்: ரவிசங்கர் பிரசாத்
x

முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அதிகம் உள்ளதால் வயநாடு தொகுதியை ராகுல் காந்தி தேர்வு செய்திருப்பதாக ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

புதுடெல்லி:

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார். வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றார். அமேதி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தார்.

இந்த தேர்தலில் அமேதியில் பா.ஜ.க. சார்பில் ஸ்மிருதி இரானி மீண்டும் போட்டியிடுகிறார். ஆனால் காங்கிரஸ் இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. 2019 தேர்தலில் தோல்வி அடைந்ததால் இந்த முறை ராகுல் காந்தி அமேதியில் போட்டியிட தயக்கம் காட்டலாம் என தெரிகிறது.

இந்நிலையில், பா.ஜ.க. மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத், பீகார் தலைநகர் பாட்னாவில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஏன் அமேதியை விட்டு ஓடினார்? இதற்கு முன்பு அவர் அந்த தொகுதியில் வெற்றி பெற்றவர்தான். முன்னதாக, அந்த தொகுதியில் அவரது தந்தை மற்றும் மறைந்த மாமா சஞ்சய் காந்தி ஆகியோர் வெற்றி பெற்றிருந்தனர். அதனால் இந்த முறையும் போட்டியிடும் தைரியம் ராகுல் காந்திக்கு இருந்திருக்க வேண்டும்.

ராகுல் காந்தி வயநாடு தொகுதியை ஏன் தேர்வு செய்தார் தெரியுமா? ஏனென்றால் அங்கு முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அதிகம் உள்ளனர். ஆனால், இந்த முறை அவருக்கு அங்கும் கடும் போட்டி இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

பாட்னா சாகிப் மக்களவை தொகுதியின் எம்.பி.யான ரவி சங்கர் பிரசாத், மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். நாளை நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார்.


Next Story