செங்கலை நாடாளுமன்றத்தில் காட்ட வேண்டியதுதானே? - உதயநிதி ஸ்டாலின் மீது எடப்பாடி பழனிசாமி விமர்சனம்


செங்கலை நாடாளுமன்றத்தில் காட்ட வேண்டியதுதானே? - உதயநிதி ஸ்டாலின் மீது எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
x

உதயநிதி ஸ்டாலின் செங்கலை பிடித்துக்கொண்டு மக்களிடம் வித்தை காட்டிக்கொண்டிருக்கிறார் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

திருச்சி,

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ. புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திருச்சியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். திருச்சியில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்துவைத்து தனது பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.

வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள எடப்பாடி பழனிசாமி பிரசார பொதுக்கூட்டத்தில் பேசியதாவது,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 3 கூட்டங்களிலும் ஒன்று பிரதமரை பற்றி விமர்சிப்பார், அதை பற்றி நமக்கு கவலையில்லை, மற்றொன்று என்னை பற்றி விமர்சிப்பார். வேறு எதையுமே மு.க.ஸ்டாலின் பேசுவதில்லை. அவர் பொம்மை முதல்-அமைச்சர், அவரிடம் என்ன எதிர்பார்க்க முடியும். ஒன்னுமே இல்லை. எம்.ஜி.ஆர். இம்மண்ணில் பிறந்ததாலேயே தமிழ்நாடு தப்பியது. மு.க.ஸ்டாலின் குடும்பத்திடமிருந்து தமிழ்நாட்டை தப்பிக்க வைத்தவர் எம்.ஜி.ஆர்., அதை காத்தவர் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் தமிழ்நாட்டிற்கு 4 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை நாங்கள் கொடுத்தோம்.

அ.தி.மு.க. ஆட்சி பொற்கால ஆட்சி என்று மக்கள் பேசுகின்றனர். தி.மு.க. ஆட்சி ஒரு அலங்கோல ஆட்சி, மக்கள் விரோத ஆட்சி என்று மக்கள் பார்க்கின்றனர். 3 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.

ஒரே ஆண்டில் 11 மருத்துவக்கல்லூரிகளை கொண்டுவந்தது அ.தி.மு.க. அரசு. 6 சட்டக்கல்லூரிகளை கொண்டுவந்தோம். பாலிடெக்னிக், பொறியியல், வேளாண் கல்லூரிகள் என எண்ணெற்ற கல்லூரிகளை கொண்டுவந்து தமிழ்நாடு கல்வியில் சிறந்தமாநிலம் என்ற பெயரை எடுத்தோம்.

3 ஆண்டுகால ஆட்சியில் தி.மு.க.வால் ஒரு மருத்துவக்கல்லூரியை கொண்டுவர முடிந்ததா?. ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் ஒரு செங்கலை எடுத்துக்கொண்டிருக்கிறார். அதைத்தான் 3 ஆண்டுகளாக காட்டிக்கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டிற்கு எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டுவரவேண்டுமென ஜெயலலிதா மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கையை ஏற்று மத்திய அரசு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவர ஒப்புக்கொண்டது.

எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவில் கட்டவேண்டுமென மத்திய அரசிடம் நாங்கள் பல முறை வலியுறுத்தியுள்ளோம். ஆனால் தி.மு.க. என்ன செய்தது. செங்கலை நாடாளுமன்றத்தில் காட்ட வேண்டும். ரோட்டில் காட்டி பயனில்லை. செங்கலை ரோட்டில் காட்டி என்ன பயன்? விளம்பரத்திற்காக செங்கலை காட்டுகிறார்.

தி.மு.க.விற்கு 38 நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்கள் தந்தனர். இந்த செங்கலை கொண்டுபோய் நாடாளுமன்றத்தில் காட்டவேண்டியதுதானே? 38 பேரும் நாடாளுமன்றத்தில் செங்கலை காட்டி நிதியை பெற்று மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டியிருக்கலாம். தி.மு.க.விடம் திராணி இல்லை.

கேட்கவேண்டிய இடம் நாடாளுமன்றம் அங்கு இருக்கையை தேய்த்துவிட்டு, வாய்மூடி மவுனம் சாதித்துவிட்டு இங்கு வந்து செங்கலை தூக்கிக்கொண்டிருக்கிறார்.

உண்மையிலேயே மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டவேண்டும் அதற்கு நிதி ஒதுக்கவேண்டுமென்றால் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்திருக்க வேண்டும். நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் அளவிற்கு தி.மு.க.விடம் 38 உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால், தி.மு.க. அதை செய்யவில்லை, அதற்கு தி.மு.க.விடம் திராணி இல்லை. இங்கு செங்கலை பிடித்துக்கொண்டு மக்களிடம் வித்தை காட்டிக்கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டு மக்கள் அறிவாளிகள். உதயநிதி ஸ்டாலின் கூறுவதையெல்லாம் நம்புவதற்கு தயாராக இல்லை.

2010ம் ஆண்டு தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் ஆட்சியில்தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. நீட் தேர்வு கொண்டுவந்தது தி.மு.க. அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ். தி.மு.க.வும் காங்கிரசும் மாறிமாறி பொய்பேசி மக்களை ஏமாற்றுகின்றன.

அரசு பள்ளியில் படித்த மாணவ-மாணவிகளுக்கு மருத்துவக்கல்வியில் 7.5 சதவிகிதம் உள்இடஒதுக்கீடு வழங்கி சட்டம் கொண்டுவந்தது அ.தி.மு.க. அரசு.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story