'சுப்ரீம் கோர்ட்டை பொறுத்தவரை 'ஏ1'...' - முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா குறித்து பாஜக அண்ணாமலை அதிரடி பேச்சு


சுப்ரீம் கோர்ட்டை பொறுத்தவரை ஏ1... - முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா குறித்து பாஜக அண்ணாமலை அதிரடி பேச்சு
x

சுப்ரீம் கோர்ட்டை பொறுத்தவரை ‘ஏ1’, குற்றச்சாட்டுகளை முடித்துவைத்துள்ளனர் காரணம் மேல்முறையீடு செல்லும்போது அவர்கள் ஆண்டவரிடம் சேர்ந்துவிட்டனர் என்று அண்ணாமலை தெரிவித்தார்.

சென்னை,

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா குறித்து அவரது பெயரை குறிப்பிடாமல் பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களுக்கு முன் ஆங்கில செய்தித்தாளுக்கு பேட்டி அளித்தார்.

இந்த நிகழ்வை தொடர்ந்து அதிமுக - பாஜக கூட்டணி இடையேயான மோதல் உச்சகட்டம் அடைந்துள்ளது. இரு கட்சி மூத்த தலைவர்களும் ஒருவர் மீது ஒருவர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

நான் ஆங்கிலே நாளேட்டிற்கு கொடுத்துள்ள கருத்துக்களை குறிப்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அதை தவறாக புரிந்துகொண்டு விமர்சனம் செய்துள்ளனர்.

ஊழலை எதிர்த்து தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறேன் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. தவறாக புரிந்துகொண்டு தரம்தாழ்ந்த கருத்துக்களை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். அந்த அளவிற்கு நான் கருத்துக்களை தெரிவிக்கப்போவதில்லை.

தமிழ்நாடு நம்பர் 1 ஊழல் மாநிலமாக மாறியுள்ளது. அதை மாற்ற நாம் முயற்சியெடுக்க வேண்டும் அது தான் ஆக்கப்பூர்வமான அரசியல் என கூறியுள்ளேன்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா குறித்து பல இடங்களில் நான் பல கருத்துக்களை தெரிவித்துள்ளேன். ஜெயலலிதாவின் ஆளுமை குறித்து பல இடங்களில் நான் பேசியுள்ளேன். நான் உண்மையை உண்மையாக கூறியுள்ளேன்.

ஸ்பிரே ஊழலில் சர்காரியா கமிஷனில் நேரடியாக அப்போது இருந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியை நேரடியாக குற்றஞ்சாட்டி சர்காரியா கமிஷனில் இறுதி அறிக்கை உள்ளது.

யாரை பற்றியும் நான் தவறாக தரம் தாழ்ந்து பேசவில்லை. ஜெயலலிதாவை பொறுத்தவரை அவர் தொடர்பான என் கருத்துக்கள் பொதுத்தளத்தில் உள்ளது. அவருடைய ஆளுமையை பற்றி பாராட்டி பேசியுள்ளேன். அவரை போன்ற தலைவராக நான் வரவேண்டும் என்று கூறியுள்ளேன். அதற்கும் சிலர் கோபமடைந்தீர்கள்.

அதனால் தவறாக புரிந்துகொண்டு அவமானப்படுத்திவிட்டனர் என்று அவர்கள் (முன்னாள் அமைச்சர்) கூறுவதை ஏற்றுக்கொள்ளமாட்டேன். அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்லது. அதற்கு பல அரசியல் காரணங்கள் இருக்கலாம்.

கோர்ட்டில் நடந்த விஷயங்களை தான் நான் கூறியுள்ளேன். அதனால் ஜெயலலிதாவை பற்றி நான் தவறாக பேசினேன் என்று அவர்கள் (அதிமுக முன்னாள் அமைச்சர்கள்) கூறியதற்கு நேற்று நான் என் அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்.

தலைமை செயலகத்தில் 2 முறை விசாரணை அமைப்புகள் சோதனை நடத்தியது இந்திய வரலாற்றில் எங்கும் நடைபெறவில்லை தமிழ்நாட்டில் நடந்துள்ளது.

தமிழ்நாட்டில் ஊழல் புரையோரிப்பொய் இருக்கிறது. இதை கூட்டணியில் இருக்கும்போதும் நான் பேசுகிறேன் இல்லாதபோதும் பேசுகிறேன்.

எனது நிலைப்பாட்டில் எந்தவித குழப்பமும் கிடையாது. கூட்டணிக்குள் இருக்கிறோம் ஒருவரை ஒருவர் மதிக்கின்றோம். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. நடந்த விஷத்தை நான் கூறியுள்ளேன், அதை யாரையும் புண்படுத்தி கூறவில்லை.

ஜெயலலிதாவின் ஆளுமையை பார்த்து பல இடங்கள் வியந்து நான் பேசியுள்ளேன். ஏழை மக்களுக்காக அவரின் சேவையை பாராட்டியுள்ளேன். இதனால் இதை முடிச்சுப்போட்டு பேசுவது தவறு என்பது என்னுடைய கருத்து.

சுப்ரீம் கோர்ட்டை பொறுத்தவரை ஏ1 குற்றச்சாட்டுகளை முடித்துவைத்துள்ளனர் காரணம் மேல்முறையீடு செல்லும்போது அவர்கள் (ஜெயலலிதா) ஆண்டவரிடம் சேர்ந்துவிட்டனர் இங்கு இல்லை. இப்போது அதை பல கட்டங்களில் பேசலாம். அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு பதியப்பட்ட வழக்கு என்று சிலர் கூறலாம். அதற்குள் செல்ல நான் விரும்பவில்லை.

ஏனென்றால் அது என் வேலையும் கிடையாது. மறைந்த ஒருவரை பற்றி இன்று நாம் ஆராய்ந்து பேசுவது என் தகுதிக்கு சிறப்பாக இருக்காது. நான் உண்மையை உண்மையாக கூறியுள்ளேன். ஜெயலலிதா பற்றி ஒரு இடத்திலும் கடுகளவு நான் மோசமாக பேசமாட்டேன். பேசுவதற்கு எனக்கு அருகதையும் இல்லை.

தமிழ்நாட்டில் ஊழல் என்ற விஷயத்தை மட்டுமே நான் பேசியுள்ளேன். இந்த மாநிலம் இதற்கு மேலும் தாங்காது. ஜெயலலிதாவை பற்றி நான் எங்கேயும் தவறாக பேசவில்லை. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவறாக புரிந்துகொண்டுள்ளனர்' என்றார்.







Next Story