பாஜக முடிவை எதிர்பார்த்து அதிமுக காத்திருக்கட்டும் - பாஜக துணைத்தலைவர் நாராயணன்


பாஜக முடிவை எதிர்பார்த்து அதிமுக காத்திருக்கட்டும் - பாஜக துணைத்தலைவர் நாராயணன்
x

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27-ம் தேதி நடைபெற உள்ளது.

சென்னை,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்படுகிறது.

தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கிய நிலையில் பிப்ரவரி 7-ந் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளில் 4 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதனிடையே, இடைத்தேர்தல் நெருக்கி வருவதால் அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இதேபோன்று தேமுதிக சார்பில் ஆனந்த், அமமுக சார்பில் சிவபிரசாந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளது. அதிமுக வேட்பாளர் யார்? என்பதை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்னும் அறிவிக்கவில்லை.

ஆனாலும், 100க்கும் மேற்பட்டோர் அடங்கிய தேர்தல் பணிக்குழுவை அமைத்த அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக தொண்டர்கள், கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை, தேர்தல் கள நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இரட்டை இலை சின்னம் தொடர்பாகவும், இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வு தொடர்பாகவும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இது தொடர்பான தீர்ப்பு விரைவில் வெளியாகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதேவேளை, இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளரை அறிவித்தால் நாங்கள் இடைத்தேர்தலில் போட்டியிடாமல் விட்டு தருவோம் இல்லையேல் வேட்பாளரை நிறுத்துவோம் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுமா? எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவு தருமா? ஓ.பன்னீர் செல்வம் தரப்பிற்கு ஆதரவு தருமா? என்பதில் தொடர்ந்து குழப்பாமான சூழ்நிலையே நிலவி வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் அக்கட்சியின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த கூட்டத்தில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக தனித்து வேட்பாளரை களமிறக்கலாமா?, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் களமிறங்க உள்ள அதிமுக வேட்பாளருக்கு பாஜக ஆதரவு தரலாமா?, ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வேட்பாளருக்கு பாஜக ஆதரவு தரலாமா?, தேர்தலில் போட்டியிடாமல் விலகலாமா? என பல்வேறு வழிமுறைகள் குறித்து அண்ணாமலை தலைமையில் தீவிர ஆலோசனை நடைபெற்றது.

இந்த ஆலோசனைக்கு பின் பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிடுகிறோம் என்று கட்சி நிர்வாகிகள் பலர் எங்களிடம் கேட்கின்றனர். இடைத்தேர்தலில் பாஜக நிலைப்பாடு என்ன? என்பது குறித்து இன்னும் 2 நாட்களில் அறிவிக்கப்படும்.

ஓபிஎஸ், ஈபிஎஸ், ஜான்பாண்டியன் தரப்பில் இருந்து அனைவரும் இங்கு வந்து அவர்கள் நினைப்பாட்டை கூறியுள்ளனர். அவர்களுடன் கலந்து ஆலோசித்தோம். கட்சி தலைமையோடு ஆலோசித்து முடிவு செய்வோம். பண்பட்ட கட்சி புண்பட வைக்காது. இரட்டை இலை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் உள்ள வழக்கிற்கும் எங்களுக்கும் சம்பந்தம் கிடையாது. நாங்கள் தேர்தல் களத்தில் மிக வேகமாக இருக்கிறோம்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் இடைத்தேர்தலில் உறுதியாக இருப்பார்' என்றார்.

பாஜக முடிவை எதிர்பார்த்து தான் அதிமுக காத்திருக்கிறது என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த நாராயணன், அதுபரவா இல்லை... காத்திருக்கட்டும்... அதனால் என்ன இருக்கிறது... தவறல்ல..

வேட்பு மனு தாக்கல் இன்று தான் தொடங்கியுள்ளது இன்னும் 7 நாட்கள் உள்ளது கவலையில்லை... ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகவுக்கு எதிராக பிரசாரம் நடந்துகொண்டிருக்கிறது. வீடு வீடாக சென்று திமுக வரக்கூடாது என்று பாஜகவினர் பிரசாரம் செய்கின்றனர்.

திமுகவை எதிர்த்து பலமான வேட்பாளர் யாரோ அவர்களுக்கு கண்டிப்பாக வாக்களிக்க சொல்வோம். 2 நாட்களில் உறுதியாக எங்கள் முடிவை கூறுவோம்' என்றார்.


Next Story