அ.தி.மு.க.தான் உண்மையான எதிர்க்கட்சி என்பது மக்களுக்கு தெரியும் - ஜெயக்குமார்
‘கட்சியை வளர்ப்பதற்காக என்ன வேண்டுமென்றாலும் சொல்வதா?’ என்றும், ‘அ.தி.மு.க.தான் உண்மையான எதிர்க்கட்சி என்பது மக்களுக்கு தெரியும்’ என்றும் அண்ணாமலைக்கு, முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
யார் எதிர்க்கட்சி?
'பா.ஜ.க.வைதான் எதிர்க்கட்சியாக தி.மு.க. நினைக்கிறது' என்று அண்ணாமலை பேசியுள்ளார். அவர் ஆயிரம் சொல்லட்டும். தனது கட்சியை வளர்க்க அவர் அப்படிதான் தெரிவிப்பார். உண்மையான எதிர்க்கட்சி யார்? என்று மக்களுக்கு தெரியும். ஆளும் கட்சியின் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, விலைவாசி பிரச்சினை, சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு போன்றவை இந்த ஆட்சியின் அவல நிலைகளாக உள்ளன. 3 மாவட்டங்களில் கடுமையான வெள்ள பாதிப்பு இருக்கும் என்கிறார்கள். அதில் ஒன்று சென்னை என்கிறார்கள். ஆனால் சென்னையில் இன்னும் முழுமையான பணிகள் நடைபெறவில்லை. சென்னைக்கு ஒரு பெரும் ஆபத்து ஏற்படும் நிலைமை இந்த அரசால் நிச்சயம் ஏற்படும்.
கட்சியில் இல்லாத ஒருவருக்கு (ஓ.பன்னீர்செல்வம்) சட்டசபையில் அ.தி.மு.க. வரிசையில் இடம் ஒதுக்கக்கூடாது. எனவே இதுகுறித்து சபாநாயகருக்கு கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார். எனவே சபாநாயகர் சட்டசபையில் மரபை காக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஆளும் கட்சியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒன்றுதான். இரண்டையும் பிரிக்க முடியாது. சபாநாயகர் இந்த விஷயத்தில் நடுநிலையோடு இருப்பார் என்று நம்புகிறேன்.
புறக்கணிக்கப்பட்ட சக்திகள்
தி.மு.க.வை அழிக்க அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க தயார் என்று டி.டி.வி.தினகரன் கூறியிருக்கிறார். அவர் எந்த அடிப்படையில் இதை சொல்கிறார் என்று எனக்கு தெரியவில்லை. வேண்டுமானால் ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவுடன் கூட்டு வைத்துக்கொண்டு அவர் தேர்தலை சந்திக்கட்டும். தொண்டர்களால் புறக்கணிக்கப்பட்ட சக்திகள் சசிகலாவும், டி.டி.வி.தினகரனும். அதேபோல ஓ.பன்னீர்செல்வம் மக்களால் புறக்கணிக்கப்பட்ட சக்தி. அவர்கள் யாரோடு வேண்டுமானாலும் நட்பு வைத்துக்கொள்ளட்டும். எங்களுக்கு அது தேவையில்லை.
மழைநீர் வடிகால் குளறுபடியை பொதுமக்கள் குற்றம்சாட்டினால் அவர்களை தி.மு.க. பிரமுகர்கள் மிரட்டுகிறார்கள். மாநகராட்சியின் இணையதளத்தில் புகார் அளிப்போரை, வீடு தேடி சென்று அடியாட்கள் மிரட்டுகிறார்கள். இதுபோன்ற நிலைமையில்தான் அரசு நடந்துவருகிறது. இம் என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம்.
சிறையில் அடைத்தாலும் கவலையில்லை
ஊடகங்கள் பேசக்கூடாது. நான் பேசக்கூடாது. நீங்கள் எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போடுங்கள். எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் சிறையில் அடையுங்கள். எதை பற்றியும் எங்களுக்கு கவலையில்லை.
எம்.ஜி.ஆர். அனுபவிக்காத சோதனையா? ஜெயலலிதா அனுபவிக்காத சோதனையா? சோதனை அனைத்தையும் தாங்கி சாதனை படைத்த இயக்கம்தான் அ.தி.மு.க.
இவ்வாறு அவர் கூறினார்.