ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியா புறப்பட்ட சரக்கு கப்பலை சிறைபிடித்த ஈரான்: அதிகரிக்கும் பதற்றம்

சரக்கு கப்பலில் உள்ள மாலுமிகளில் 17 பேர் இந்தியர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2024-04-13 13:08 GMT

தெஹ்ரான்,

காசா முனையை நிர்வகித்துவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 100க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளது. எஞ்சிய பணய கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது.

அதேவேளை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது போர் அறிவித்து காசா முனை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 33 ஆயிரத்து 634 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 450க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேல் - ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இடையேயான போரில் ஹமாசுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. மேலும், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த சிரியா, லெபனானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஈரான் ஆயுத உதவி வழங்கி வருகிறது.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரான் தூதரகம் மீது கடந்த 1ம் தேதி இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஈரான் புரட்சிப்படை மூத்த தளபதி முகமது ரிசா சகிதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனால், இஸ்ரேல் - ஈரான் இடையே போர் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், அரபிக்கடலில் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பலை ஈரான் இன்று சிறைபிடித்துள்ளது. போர்ச்சீகல் நாட்டை சேர்ந்த இக்கப்பல் இஸ்ரேலிய பணக்காரர் அங்கம் வகிக்கும் நிறுவனத்திற்கு சொந்தமானதாகும்.

சரக்கு கப்பல் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது அதை ஈரானிய கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். ஹெலிகாப்டர் மூலம் கப்பலுக்குள் ஆயுதங்களுடன் இறங்கிய ஈரானிய கடற்படை கமெண்டோக்கள் அதை சிறைபிடித்தனர். இந்த கப்பல் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து புறப்பட்டு இந்தியா நோக்கி வந்துகொண்டிருந்தது. அப்போது, கப்பல் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. சரக்கு கப்பலில் உள்ள மாலுமிகளில் 17 பேர் இந்தியர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. 

இஸ்ரேலுடன் தொடர்புடைய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்துள்ள நிலையில் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது. அதேவேளை, பிராந்தியத்தில் மோதலை தூண்டுவதற்காக ஈரான் மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்