திருநெல்வேலி: தாயை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை
2025-ம் ஆண்டில் மட்டும் இதுவரை 19 கொலை வழக்குகளில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.;
கடந்த 2020-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அருகேயுள்ள செட்டிகுளத்தை சேர்ந்த ராஜன் (வயது 41) என்பவர் சொத்து பிரச்சினை காரணமாக அவரது தாய் ஜெயமணியை(60) கொலை செய்த வழக்கு, திருநெல்வேலி மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ராஜனுக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டு, நீதிபதி ராமலிங்கம், குற்றவாளிக்கு நேற்று தண்டனை வழங்கினார்.
தண்டனை விபரம் பின்வருமாறு:
302 IPC- ஆயுள் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதம்.
324 IPC- 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1,000 அபராதம்.
352 IPC- 3 மாதங்கள் சிறை தண்டனையும், ரூ.500 அபராதம்.
449 IPC- 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம்.
மேற்சொன்ன குற்றச்சாட்டுகளின் கீழ் விதிக்கப்பட்ட சிறைத் தண்டனைகள் அனைத்தும் தொடர்ச்சியாக (Consecutively) அனுபவிக்க வேண்டும் எனவும் அவற்றை அனுபவித்து முடித்த பின், IPC 302-ன் கீழ் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை அமலுக்கு வரும் எனவும், நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் திறம்பட சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த, வள்ளியூர் உட்கோட்ட டி.எஸ்.பி. வெங்கடேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன், கூடங்குளம் காவல்துறையினர், இந்த வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோ ஜெகதா (தற்போது ஈரோடு மாவட்டம்), நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு வழக்கறிஞர் ஜெயபிரபா ஆகியோரை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.
2025-ம் ஆண்டில் மட்டும், இதுவரை 19 கொலை வழக்குகளில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. இதில் ஒரு நபருக்கு மரண தண்டனையும், 64 நபர்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. இதில் சரித்திர பதிவேடு உடைய நபர்கள் 21 பேர் அடங்குவர். நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாட்சிகளை ஆஜர்படுத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் முனைப்பில் தொடர்ந்து, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.