காஷ்மீர் மீது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் - இடைமறித்து அழித்த இந்திய ராணுவம்

ஜம்மு காஷ்மீரில் முழு உஷார் நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்,
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது.
இதைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது. இதற்கிடையில் இந்தியாவில் உள்ள 15 நகரங்கள் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டதாகவும், பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், காஷ்மீர் மீது பாகிஸ்தான் இன்று மீண்டும் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் விமான நிலையத்தை குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. டிரோன் தாக்குதலை முன்னிட்டு அக்னூர் பகுதியில் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டன.
மேலும் பஞ்சாபின் பதான்கோட்டில் உள்ள விமானப்படை தளத்தையும் குறிவைத்து தாக்க பாகிஸ்தான் முயற்சி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் பகுதியில் இருந்து வந்த டிரோன்களை இந்தியாவின் எஸ்-400 மற்றும் ஆகாஷ் வான் தடுப்பு அமைப்புகள் நடுவானிலேயே தாக்கி அழித்தன.
இதற்கிடையில், பாதுகாப்பு காரணமாக ஜம்மு பகுதியில் மின்சாரம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் முறியடிக்கப்பட்ட நிலையில் ஜம்மு காஷ்மீரில் முழு உஷார் நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியே நடமாட வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. தொலைபேசி மற்றும் இணைய சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.






