பயங்கரவாத தாக்குதல் இனியும் நடைபெறாமல் இருக்கவே "ஆபரேஷன் சிந்தூர்" - ராணுவ அதிகாரிகள் விளக்கம்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. .
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளது. நள்ளிரவு 1.44 மணிக்கு பாகிஸ்தான் மீதும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் இந்தியா தாக்குதல் நடத்தி உள்ளது.
மொத்தம் 9 இடங்களில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு "ஆபரேஷன் சிந்தூர்" என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் முப்படைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது
இந்த தாக்குதலை தொடர்ந்து நீதி நிலைநாட்டப்பட்டது என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ராணுவம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "#பெஹல்காம் பயங்கரவாத தாக்குதல், நீதி நிலைநாட்டப்பட்டது. ஜெய் ஹிந்த். ஆபரேஷன் சிந்தூர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Live Updates
- 7 May 2025 4:05 PM IST
புதுச்சேரி அருகே லாஸ்பேட்டையில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது. இதனை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் தொடங்கி வைத்துள்ளார்.
- 7 May 2025 4:00 PM IST
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மற்றும் சமரசம் மேற்கொள்வதற்கு ஆதரவு தர தயாராக இருக்கிறோம் என இங்கிலாந்து தெரிவித்து உள்ளது. இரு நாடுகளுக்கும் நாங்கள் நண்பனாகவும், நட்புறவு கொண்ட நாடாகவும் இருக்கிறோம் என அந்நாடு தெரிவித்தது.
- 7 May 2025 3:39 PM IST
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து, அனைத்து வித விமான போக்குவரத்துக்கான தன்னுடைய வான்வெளியை பாகிஸ்தான் 48 மணிநேரத்திற்கு மூடியுள்ளது.
இதன்படி, இஸ்லாமாபாத் மற்றும் லாகூர் வான்வெளி மூடப்பட்டதுடன், விமான போக்குவரத்து கராச்சிக்கு திருப்பி விடப்பட்டது. பாகிஸ்தான் விமான போக்குவரத்து அதிகாரிகள் இந்நடவடிக்கையை எடுத்ததும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒட்டுமொத்த வான்வெளியும் 48 மணிநேரத்திற்கு மூடப்பட்டது.
- 7 May 2025 3:10 PM IST
நாடு முழுவதும் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு ஒத்திகையை தொடங்கி உள்ளனர்.
இதன்படி, மேற்கு வங்காளத்தின் சிலிகுரியில் உள்ள பள்ளி ஒன்றில் ராணுவ வீரர்களின் முதல் கட்ட பாதுகாப்பு ஒத்திகை தொடங்கி உள்ளது.
- 7 May 2025 2:39 PM IST
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின்னர், புதுடெல்லியில் பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் மத்திய மந்திரிகள் நிதின் கட்காரி மற்றும் ஜே.பி. நட்டா ஆகியோர் அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை நடத்தினர்.
- 7 May 2025 2:02 PM IST
பாகிஸ்தான் பயணத்தை தவிர்க்குமாறு அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்திய நிலையில், அமெரிக்கா பயண அறிவுரைகளை வழங்கி உள்ளது.
இதன்படி தாக்குதலுக்கு உள்ளான பகுதியில் உள்ள அமெரிக்கர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- 7 May 2025 1:59 PM IST
எல்லையில் உள்ள மாநில முதல்-மந்திரிகளுக்கு உள்துறை அமைச்சகம் அழைப்பு
“ஆபரேஷன் சிந்தூர்” எதிரொலியாக, பாகிஸ்தான் மற்றும் நேபாள எல்லையில் உள்ள மாநில முதல்-மந்திரிகளுக்கு உள்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.
இதன்படி பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் அவசர கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
- 7 May 2025 1:52 PM IST
இந்தியா நடத்திய தாக்குதலில் எனது குடும்பத்தினர் 10 பேர் பலி - மசூத் அசார் அறிக்கை
இந்திய தாக்குதல்களில் மசூத் அசாரின் 10 குடும்ப உறுப்பினர்கள், 4 உதவியாளர்கள் கொல்லப்பட்டதை பிபிசி செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது.
- 7 May 2025 1:18 PM IST
“ஆபரேஷன் சிந்தூர்” : நாளை அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு
பாகிஸ்தானுக்கு எதிராக 'ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையைத் தொடர்ந்து, அனைத்துக் கட்சி கூட்டம் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
இதன்படி நாளை காலை 11 மணிக்கு நடக்க உள்ள கூட்டத்தில், பயங்கரவாதிகள் முகாம்கள் மீதான ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
- 7 May 2025 1:14 PM IST
“ஆபரேஷன் சிந்தூர்” - இருதரப்பு தீர்வுக்கு அழைப்பு விடுத்த ரஷியா
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றங்கள் கவலை அளித்து வருவதாகவும், நிதானம் மற்றும் அமைதியான, இருதரப்பு தீர்வுக்கு அழைப்பு விடுப்பதாகவும் ரஷியா தெரிவித்துள்ளது.













