கொலை, கொலை முயற்சி வழக்கில் 14 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை 27 கொலை வழக்குகளில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது.
கொலை, கொலை முயற்சி வழக்கில் 14 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
Published on

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி காவல் நிலைய சரகம், காசிநாதபுரம் பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு, ஒரே சமூகத்தை சேர்ந்த இருபிரிவினரிடையே கோவில் கொடை விழாவின் போது ஏற்பட்ட பிரச்சினையின் முன்விரோதம் காரணமாக, காசிநாதபுரம் பகுதியைச் சேர்ந்த மணிவேல் (வயது 45) என்பவரை புதுப்பட்டியைச் சேர்ந்த விநாயகம்(47), காசிநாதபுரத்தைச் சேர்ந்த உலகநாதன்(48), சிவசுப்பிரமணியன்(38) உட்பட 17 பேர் சேர்ந்து கொலை செய்தனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக, பாப்பாக்குடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணையின் முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து, வழக்கின் விசாரணையானது, தென்காசி இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிமன்ற விசாரணை நடந்த காலகட்டத்திலேயே குற்றவாளிகளான முத்துக்குமார், பிச்சையா, முத்துராஜ் ஆகிய 3 பேர் இறந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற குற்றவாளிகளான சரித்திர பதிவேடு குற்றவாளி விநாயகம்(47), சரித்திர பதிவேடு குற்றவாளி உலகநாதன்(48), சிவசுப்பிரமணியன்(38), சுடலை(29), சுப்பிரமணியன்(60), சந்தானம்(30), சரித்திர பதிவேடு குற்றவாளி சிவன்சேட்(42), மாணிக்கராஜ்(எ) மாரி(29), வேல்துரை(43), கருப்பையா(57), ரமேஷ்(30), பண்டாரம்(73), மணிவேல்(43), கலைவாணன்(29) ஆகிய 14 பேருக்கும் எதிரான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு நீதிபதி மனோஜ்குமார் இன்று (3.12.2025) குற்றவாளிகளுக்கு கொலை குற்றத்திற்காக தலா ஒரு ஆயுள் தண்டனையும், கொலை முயற்சி குற்றத்திற்காக தலா ஒரு ஆயுள் தண்டனையும் என மொத்தம் இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.41 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கில் நீதிமன்ற விசாரணை நடைபெற, சிறப்பாக கண்காணிப்பு செய்த அம்பாசமுத்திரம் உட்கோட்ட டி.எஸ்.பி. கணேஷ்குமார், அம்பாசமுத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் பாப்பாக்குடி காவல்துறையினர், இந்த வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் செந்தாமரைக்கண்ணன் (தற்போது உதவி ஆணையர், திருநெல்வேலி மாநகர காவல்), பாலமுருகன் (தற்போது தென்காசி மாவட்டம்), ஆதிலிங்க போஸ் (தற்போது சிவகங்கை மாவட்டம்), நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு வழக்கறிஞர் வேல்சாமி ஆகியோரை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.

2025-ம் ஆண்டில் மட்டும் இதுவரை 27 கொலை வழக்குகளில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. இதில் ஒரு நபருக்கு மரண தண்டனையும், 98 நபர்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. இதில் சரித்திர பதிவேடு உடைய நபர்கள் 28 பேர் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த ஆண்டில் மட்டும் சரித்திர பதிவேடு உடைய நபர்கள் 35 பேருக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. அதில் கொலை வழக்கில் 28 நபர்களுக்கும், கொலை முயற்சி வழக்கில் 2 நபர்களுக்கும், போக்சோ வழக்கில் 4 நபர்களுக்கும், கூட்டுக் கொள்ளை வழக்கில் 1 நபருக்கும் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது.

நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாட்சிகளை ஆஜர்ப்படுத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் முனைப்பில் தொடர்ந்து, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com