டிட்வா புயல் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம்: இந்திய கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை

தமிழகத்தில் மழைநீரில் பயிர்கள் மூழ்கி சேதமடைந்துள்ள விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த நவம்பர் இறுதியில் தொடங்கிய கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இடையில் டிட்வா புயல் தாக்குதலும் சேர்ந்த பேரிடர் தாக்குதலாக தொடர்கிறது. தமிழ்நாடு முழுவதும் பொதுவாகவும் கடலோர மாவட்டங்களும், டெல்டா பாசனப்பகுதி மாவட்டங்கள் குறிப்பாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
வட கிழக்கு பருவமழை, இயற்கை சீற்றங்கள் குறித்த வானிலை அறிக்கைகள் எச்சரிக்கை படியும், வழக்கமான எதிர் பார்ப்பிலும், தமிழ்நாடு அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, சிறப்பான பேரிடர் மீட்புப் நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்தது.
இருப்பினும், நேற்று முன்தினம் வரை (1.12.2025) தமிழ்நாடு முழுவதும் 85 ஆயிரத்து 521 ஹெக்டேர் நிலப்பரப்பில் சாகுபடி செய்திருந்த நெற்பயிரும், தோட்டக்கலைப் பயிர்களும் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாக வருவாய் மற்றும் இயற்கை பேரிடர் மேலாண்மை துறை தகவல் தந்திருப்பாக முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். கள நிலவரத்தை கண்டறிந்தவர்கள் டெல்டா பாசனப் பகுதிகளில் மட்டுமே ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கி அழுகியுள்ளதாக தெரிவிக்கின்றனர். தொடரும் கணக்கெடுப்புப் பணி முடியும் போது உண்மை நிலை அறிய முடியும்.
இந்த நிலையில் மழைநீரில் பயிர்கள் மூழ்கி சேதமடைந்துள்ள விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். இது பாதிக்கப்பட்டவர்களை ஆற்றுப்படுத்தும் முயற்சி எனினும், அறிவிக்கப்பட்ட நிவாரண நிதி இழப்பை ஈடு செய்யாது, மழையால் பாதிக்கப்பட்ட பயிர் சாகுபடி இழப்புக்கு ஏக்கருக்கு தலா ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருவதை தமிழ்நாடு அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.
மழை வெள்ளம் சூழ்ந்துள்ள வயல்களை மறு சாகுபடி செய்ய தயார் செய்ய, விவசாயிகள் பெரும் செலவை எதிர்கொண்டுள்ளனர். இந்த நிலையில், விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் முழுவதையும் விலையில்லாமல் வழங்கி உதவ வேண்டும். பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியதுடன், மனித உயிரிழப்புகள், ஆடுகள், மாடுகள், எருமை உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
குடியிருப்புகளில் வீடுகள் இடிந்தும், சரிந்தும் சேதமடைந்துள்ளன. விவசாயத் தொழிலாளர்கள் வேலையிழந்து, வருமான இழப்புக்கு ஆளாகியுள்ளனர். இவர்களது வாழ்வாதாரத்துக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
தேசிய பேரிடர் நிகழ்வாக கருதத் தக்க இயற்கை பேரிடரை எதிர் கொண்டு, நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் தமிழ்நாடு அரசுக்கு தேவையான நிவாரண நிதியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துவதுடன் மாநில அரசு அறிவித்துள்ள நிவாரண நிதியை மறுபரிசீலனை செய்து, விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் துயர் துடைக்கும் வகையில், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம், விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் என நிவாரண நிதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






