பாமக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோர்ட்டு மறுப்பு: ராமதாஸ் தரப்பில் இன்று மேல்முறையீடு

பா.ம.க., பொதுக்குழுவை கூட்டுவதற்கு அன்புமணிக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுத்து உத்தரவிட்டது.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவருடைய மகன் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், கட்சியின் பொதுக்குழுவை இன்று (சனிக்கிழமை) மாமல்லபுரத்தில் கூட்டுவதாக அன்புமணி அறிவித்தார்.
இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் டாக்டர் ராமதாஸ் தரப்பில், பா.ம.க., பொதுச்செயலாளர் முரளிசங்கர் மனு தாக்கல் செய்தார்.
அதில், ‘பா.ம.க., வின் தலைவராக இருந்த அன்புமணியின் பதவி காலம் கடந்த மே மாதத்துடன் காலாவதியாகி விட்டது. அவருக்கு பொதுக்குழுவை கூட்ட எந்த அதிகாரமும் இல்லை. கட்சியின் நிறுவனத் தலைவரிடம் முறையான அனுமதி பெறாமல் கூட்டப்படும் இந்த பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் அருள் ஆஜராகி வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி. ‘இந்த மனு மீது தீர்ப்பு வழங்க 10 நிமிடம் போதும். ஆனால் அவ்வாறு செய்ய நான் விரும்பவில்லை. டாக்டர் ராமதாசையும், அன்புமணியையும் இன்று (நேற்று) மாலை 5.30 மணிக்கு நேரில் வரச் சொல்லுங்கள். இருவரிடமும் தனித்தனியாக நேரடியாக பேச விரும்புகிறேன். இந்த விசாரணை என்னுடைய அறையில் நடக்கும். அப்போது வக்கீல்கள், பா.ம.க.வைச் சேர்ந்தவர்கள் என்று யாருக்கும் அனுமதி கிடையாது' என்றார்.
அன்புமணி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் என்.எல்.ராஜா, ‘அன்புமணிக்கு தகவல் தெரிவித்து அவரை வரச்சொல்லுகிறேன். அவர் 5.30 மணிக்கு வந்து விடுவார்' என்றார்.
மாலை 4 மணியளவில், நீதிபதி முன்பு ஆஜரான வக்கீல் அருள், ‘உடல்நிலை காரணமாக டாக்டர் ராமதாஸ் நேரில் வரமுடியவில்லை. அவர் காணொலி காட்சி வாயிலாக ஆஜராக தயாராக உள்ளார் என்றார். இதையடுத்து இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷின் அறையில் வைத்து விசாரிக்கப்பட்டது.
அப்போது அன்புமணி நேரில் ஆஜரானார். காணொலி காட்சி வாயிலாக டாக்டர் ராமதாஸ் ஆஜரானார். இருவரிடம் சுமார் அரைமணி நேரம் விசாரணை நடந்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இரவு 8.30 மணிக்கு தீர்ப்பு அளித்தார். அதில் அவர் கூறுகையில், “இந்த வழக்கு தந்தைக்கும் மகனுக்கும் இடையே உள்ள ‘ஈகோ' பிரச்சினையாகும். இது துரதிர்ஷ்டவசமானது. கட்சியின் நிறுவன தலைவராக தந்தையும், மகன் தலைவராகவும் உள்ளனர். பல்வேறு காரணங்களால் இவர்கள் ஒருவரது கண்களை ஒருவர் பார்க்க முடியாத அளவுக்கு நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் கட்சிக்குள் பிரிவினை ஏற்பட்டுள்ளது.
ஒரு பிரிவினர் நிறுவன தலைவருக்கும், மற்றொரு பிரிவினர் அன்புமணி ராமதாசுக்கும் ஆதரவு தெரிவிக்கின்றனர். மனுதாரரை பொறுத்தவரை அன்புமணி சட்ட விரோதமாக பொதுக்குழுவை கூட்டுகிறார் என்கிறார்.
ஆனால் இந்த பொதுக்குழு, முறையாக அறிவிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச்செயலாளர் மூலம் கட்சியின் விதிகளை பின்பற்றி நடத்தப்படுவதாக அன்புமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த பொதுக்குழு, சட்டப்படி அறிவிக்கப்பட்டுள்ளதா? என்பதை இந்த ரிட் வழக்கில் பரிசீலிக்க முடியாது.
இது முழுக்க முழுக்க இரு நபர்களுக்கிடையே உள்ள தனிப்பட்ட பிரச்சினை. இந்த விவகாரத்தில், இந்த ஐகோர்ட்டு தலையிட வேண்டிய அவசியம் இல்லை. இந்த பொதுக்குழு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் விவகாரம் குறித்து சிவில் வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்.
தந்தைக்கு மகனுக்கும் உள்ள இந்த விவகாரத்தில் ரிட் வழக்கில் எந்த நிவாரணம் வழங்க முடியாது. தனி நபருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கே உகந்ததல்ல. இதில் பொது விவகாரம் எதுவும் இல்லை. அதேநேரம் இந்த பொதுக்குழு கூட்டம் போலீசாரின் அனுமதி இல்லாமல் நடப்பதால், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால் கூட்டரங்கத்திற்குள் நடைபெறுகின்ற இந்த கூட்டத்திற்கு போலீஸ் அனுமதி தேவையில்லை. ஒருவேளை ஏதாவது சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் அதை போலீசார் சட்டப்படி கையாண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே மனுதாரரின் கோரிக்கையில் ஏற்க முடியாது. மனுவை தள்ளுபடி செய்கிறேன்” என்று நீதிபதி கூறினாஅர்.
இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் இன்று மேல்முறையீடு செய்யப்போவதாக ராமதாஸ் தரப்பு வக்கீல் வி.எஸ்.கோபு தெரிவித்தார்.






