சென்னை,
சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தபின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஜனவரியில் அதிமுக கூட்டம் நடத்த கரூர் வேலுச்சாமிபுரத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. நீதிமன்றத்துக்கு சென்ற பிறகே எங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
எங்களுக்கு நிராகரித்த இடத்தை தவெகவிற்கு எதற்காக அரசு கொடுத்தது?. அசம்பாவிதம் நடக்க வேண்டும் என திட்டமிட்டு கொடுத்ததாக மக்களும் சந்தேகிக்கின்றனர். கரூர் சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் பேச எங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. நாங்கள் கருத்து கூறியபிறகு முதல்-அமைச்சர் பதிலளிக்க வேண்டும் என பேரவையில் கேட்டோம்; கரூரில் உரிய பாதுகாப்பை கொடுத்திருந்தால் உயிரிழப்புகளை தடுத்திருக்கலாம். கரூர் நெரிசல் விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை. மக்களுக்காகவே பேசுகிறோம்.
தவெக தலைவர் 4 மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்தி உள்ளார். ஏற்கெனவே நான்கு கூட்டங்களுக்கு எவ்வளவு மக்கள் பங்கேற்றார்கள் என உளவுத்துறை, காவல்துறை, அரசுக்கு தெரியும். அதற்கு ஏற்றவாறு இடத்தை ஒதுக்கி இருக்க வேண்டும்.
அவசர அவசரமாக ஒரு நபர் ஆணையத்தை எப்படி அமைக்க முடியும். உடற்கூறு ஆய்வு செய்ததை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. உண்மை சம்பவத்தை மறைக்க அரசு நினைக்கிறது. ஒரு நபர் ஆணையம் முறையாக செயல்பட எந்த உதவியும் செய்யவில்லை. கரூரில் 500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதாக ஏடிஜிபி கூறினார். 660 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதாக முதல்-அமைச்சர் கூறுகிறார்; இதிலேயே முரண்பாடு. இதனால்தான் கரூர் சம்பவத்தில் அரசின்மீது சந்தேகம் எழுகிறது.
சட்டமன்றத்தில் கரூர் விவகாரம் குறித்து முதல்-அமைச்சர் விளக்கம் கொடுத்தார். தவெக தலைவர் அவர்கள் மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் பத்து நிமிடம் பேசியிருப்பார். அப்போது ஒரு செருப்பு வந்து அங்கு விழுகிறது.. விழுந்தது குறித்து முதல்-அமைச்சர் எதுவுமே சொல்லவில்லை. சட்டமன்றதுல பேசினா, நீக்கிவிடுவார்கள்.. அதனால், மக்களுக்கு தெரிவிக்க, ஊடகங்கள் வாயிலாக பேசுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.