திருநெல்வேலியில் கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலியில் 2025-ம் ஆண்டில் இதுவரை 17 கொலை வழக்குகளில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, குற்றவாளிகளில் ஒரு நபருக்கு மரண தண்டனையும், 60 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், மானூர், உக்கிரன்கோட்டை பகுதியில் கடந்த 2018ம் ஆண்டு பணப் பிரச்சினை காரணமாக மகாராஜன் என்பவர் அதே ஊரைச் சார்ந்த சண்முகசுந்தரம்(எ) சின்னையா (வயது 42) என்பவரை கொலை செய்தார். இந்த வழக்கின் விசாரணை திருநெல்வேலி முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றவாளியான மகாராஜனுக்கு (40) எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டு, நீதிபதி செல்வம் இன்று குற்றவாளிக்கு தண்டனை வழங்கினார்.
கொலை குற்றத்திற்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும், முறையின்றி தடுத்தல் குற்றத்திற்கு ஒரு மாத சிறை தண்டனையுடன் ரூ.500 அபராதமும், ஆபாசமாக பேசிய குற்றத்திற்கு மூன்று மாத சிறை தண்டனையுடன் ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்டது. மேற்சொன்ன தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் திறம்பட சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த திருநெல்வேலி ஊரக உட்கோட்ட டி.எஸ்.பி. ரகுபதிராஜா, போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், மானூர் காவல்துறையினர், இவ்வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் (தற்போது தூத்துக்குடி மாவட்டம்), நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு வழக்கறிஞர் கருணாநிதி ஆகியோரை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.
2025-ம் ஆண்டில் மட்டும் இதுவரை 17 கொலை வழக்குகளில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. இதில் ஒரு நபருக்கு மரண தண்டனையும், 60 நபர்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. இதில் 20 நபர்கள் சரித்திர பதிவேடு உடைய குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த ஆண்டில் மட்டும் சரித்திர பதிவேடு உடைய நபர்கள் 23 பேருக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. அதில் கொலை வழக்கில் 20 நபர்களுக்கும், கொலை முயற்சி வழக்கில் 2 நபர்களுக்கும், போக்சோ வழக்கில் 1 நபருக்கும் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது.
நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாட்சிகளை ஆஜர்ப்படுத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் முனைப்பில் தொடர்ந்து உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.






