இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட வடமாநில வாலிபர் உயிரிழப்பு: கொலை வழக்குப்பதிவு; 2 பேர் கைது

அம்பத்தூர் பகுதியில் வடமாநில வாலிபர் ஒருவர், தனது நண்பருடன் நடந்து சென்றபோது அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள், அவர்கள் இருவரையும் வழிமறித்து தகராறு செய்தனர்.
மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்தவர் ராபின் பிரஷா (வயது 35). இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஐ.டி நிறுவன உணவகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார். கடந்த 14-ம் தேதி இரவு அம்பத்தூர் அத்திப்பட்டு, ஐ.சி.எப். காலனி, பாரதிதாசன் குளம் அருகே தனது நண்பர் அபினேஷ் என்பவருடன் நடந்து சென்றார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த தீனா(19) என்பவர் இவர்கள் இருவரையும் வழிமறித்து தகராறு செய்தார். பினனர் இரும்பு கம்பியால் ராபின் பிரஷாவின் தலையில் ஓங்கி அடித்து விட்டு தப்பிச் சென்றார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரது தலையில் 7 தையல்கள் போடப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து தீனாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ராபின் பிரஷா நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதனையடுத்து போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய தீனாவின் உறவினரான கிரி(27) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.






