இந்தக் கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல; ஆட்சியாளர்களுக்கு வேட்டாகவும் மாறும்: விஜய்
மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.
Live Updates
- 21 Aug 2025 9:53 AM IST
தவெக மாநாட்டில் 600 பேர் கொண்ட மருத்துவ குழு
மதுரையில் நடைபெற உள்ள தவெக மாநாட்டிற்கு நியமிக்கப்பட்டுள்ள 600 பேர் கொண்ட மருத்துவ குழு வருகை தந்துள்ளது.
குழுவில் 250 டாக்டர்கள் மற்றும் 250 செவிலியர்கள் செயல்படுவார்கள் என்று மாநாட்டு மருத்துவ குழு பொறுப்பாளர் பிரபு தகவல் தெரிவித்துள்ளார்.
- 21 Aug 2025 9:53 AM IST
தவெக மாநாடு - சுங்க கட்டணம் இன்றி வாகனங்கள் அனுமதி
மதுரை தவெக மாநாட்டிற்கு செல்லும் வாகனங்கள் எலியார்பத்தி சுங்கச்சாவடியில் கட்டணம் இன்றி இலவசமாக அனுமதிக்கப்படுகின்றன. இதுவரை 40,000 வாகனங்கள் சுங்கச்சாவடியை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- 21 Aug 2025 9:50 AM IST
காலியாக கிடக்கும் திடல்
தவெக மாநாட்டு திடலில் பாதியளவுக்கு மட்டுமே போடப்பட்டுள்ள இருக்கைகள். கடைசி நேரத்தில் ஒப்பந்ததாரர்கள் பின் வாங்கியதால் நாற்காலிகள் இல்லாமல் திடல் காலியாக உள்ளது.
- 21 Aug 2025 9:46 AM IST
தவெக மாநாட்டில் புதிய பாடல் வெளியாகிறது
‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது' என்ற தீமில் தவெகவின் புதிய தீம் பாடல் இன்று(ஆக.21) வெளியிடப்படுகிறது. தவெக கொடிப்பாடலுக்கு இசையமைத்த தமன், மாநாட்டு பாடலுக்கும் இசையமைத்துள்ளார். 1967, 1977-ல் திமுக, அதிமுக ஆட்சி அமைத்தது குறித்து விஜயின் பேச்சும் பாடலில் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- 21 Aug 2025 8:55 AM IST
நீ அரியணை ஏறும் நாள் வரும்... - விஜய்க்கு ஷோபா சந்திரசேகர் வாழ்த்து
தவெக தலைவர் விஜய்க்கு அவரது தாயார் ஷோபா சந்திரசேகர் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
திரையில் உன்னை பார்த்து உயர்த்திய தாய்மார்கள், தம்பி தங்கைகள் அரசியல் வெற்றிக்கு துணை நிற்கட்டும்.
வரவிருக்கும் தேர்தல் உன் இமாலய வெற்றியை காட்டும், நீ அரியணை ஏறும் நாள் வரும்.. அது உன் தொண்டர்களின் திருநாள்
தமிழக வெற்றிக் கழகம் தடைகளை வெல்லும் கழகம் என்று காட்டு, நேர்மையான தலைவன் என்பதற்கு நீதான் எடுத்துக்காட்டு
உன்னோடு வரும் தொண்டர் படை இந்த நாட்டில் வேறு யாருக்கும் இல்லை, உன் வெற்றிக்கு வானமே எல்லை.. வாழ்த்துகள் விஜய்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 21 Aug 2025 8:51 AM IST
தொண்டர்கள் வெள்ளத்தில் தவெக மாநாட்டுத்திடல்..
மாநாட்டுக்கான பந்தல் அமைப்பு பணி உள்பட அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் நேற்று இரவில் இருந்தே மதுரையில் குவியத் தொடங்கி உள்ளனர்.
விடியற்காலையிலேயே ஏராளமான தொண்டர்கள் மாநாட்டு மேடைக்கு முன்பாகத் திரண்டுள்ளனர். வெளியூர்களிலிருந்து வருகை தந்த தொண்டர்கள், தங்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் உணவுப் பொட்டலங்கள் போன்றவற்றைத் தாங்களே கொண்டு வந்துள்ளனர்.
மாநாட்டில் 15 லட்சம் முதல் 20 லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது. வாகனம் பார்க்கிங் இடங்கள், குடிநீர் வசதி, மருத்துவ குழு, சுகாதார வசதிகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளது. தொண்டர்கள் அமர்வதற்கு 60 பாக்ஸ்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு பாக்ஸ்களிலும் சுமார் 2,500 பேர் அமரும் வசதி உருவாக்கப்பட்டு உள்ளது.
குடிநீர் பற்றாக்குறை ஏற்படாத வண்ணம் பூமிக்கடியில் குழாய்கள் பதிக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்க ராட்சத குடிநீர் தொட்டிகள் மாநாடு பந்தலை சுற்றிலும் அமைக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று மாநாட்டுக்கு வரும் வழி நெடுகிலும் ஆங்காங்கே உணவு பொட்டலங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மாநாட்டில் பாதுகாப்பு பணிக்காக சுமார் 3 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தவெக சார்பில் 2 ஆயிரம் தனியார் பாதுகாவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். 300 பெண் பவுன்சர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே மாநாட்டு பந்தலில் அமைக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்களுக்கான மருத்துவ மாணவர்கள் தற்போது வருகை தந்துள்ளனர்.
- 21 Aug 2025 8:46 AM IST
தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பாரா விஜய்..?
தவெக மாநாட்டில் தொண்டர்களை நடந்து சென்று விஜய் பார்க்கும் வகையில், 300 மீட்டர் தூரத்திற்கு 'ரேம்ப் வாக்' நடைமேடை அமைக்கப்பட்டு உள்ளது. மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. நிறைவாக கட்சி தலைவர் விஜய் சிறப்புரை ஆற்றுகிறார். சிறப்புரையில் முக்கிய அறிவிப்பை விஜய் வெளியிடுகிறார்.
விஜய் பேச்சுடன் விழா நிறைவு பெறுகிறது. தன் மீதான விமர்சனங்கள் உள்ளிட்டவற்றிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விஜய் பேச்சு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அளவில் எந்த ஒரு அரசியல் கட்சி மாநாடும் இதுவரை நடந்திராத வகையில் நாடே திரும்பி பார்க்கும் மாநாடாக இந்த மாநாடு இருக்கும் என்று தவெகவினர் தெரிவித்தனர்.
- 21 Aug 2025 8:42 AM IST
புஸ்சி ஆனந்த் தலைமையில் சிறப்பு யாகம்
பெண்கள் அதிக அளவில் மாநாட்டில் பங்கேற்பார்கள் என்பதால், அவர்களை வழிநடத்தும் வகையில் 50 பெண் பவுன்சர்கள் உள்பட 550 பவுன்சர்கள் நேற்று கேளராவில் இருந்து வந்தனர். இதுதவிர, தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தின் சார்பில் 2 ஆயிரம் பேரும், காவல்துறை சார்பில் 3 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
மாநாடு நடைபெறும் பகுதியை சுற்றி உள்ள 14 மதுபான கடைகளை மூட வேண்டும் என மதுரை மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தி இருந்தார். பின்னர், அந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்று மழை குறுக்கிடு இருக்கக்கூடாது என வேண்டி நேற்று த,வெ,க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. அதன்பின்னர், புனித நீரானது, மாநாட்டு மேடை மற்றும் திடல் பகுதிகளில் தெளிக்கப்பட்டது.
- 21 Aug 2025 8:39 AM IST
தொண்டர்களுக்கு ‘ஸ்நாக்ஸ் பாக்ஸ்’ : வருகையைபதிவு செய்ய கியூஆர் கோடு
தவெக மாநாட்டு திடல் சிறு சிறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றிலும் சுமார் 2500 பேர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. 2500 பேருக்கு ஒன்று என ஒவ்வொரு பகுதியிலும் பிரமாண்டமான எல்.இ.டி. டி.வி.க்களும் பொருத்தப்பட்டுள்ளன. அதில் விஜய் பேசுவதையும், நடந்து சென்று மக்களை பார்ப்பதையும் நேரலையில் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட நடமாடும் கழிப்பறைகள் வைக்கப்பட்டுள்ளன.
மாநாட்டு திடலில், 20 முதல் உதவி மையங்களும் உள்ளன. 100-க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்களும் வந்துள்ளனர். 30-க்கும் மேற்பட்ட தனியார் ஆம்புலன்சுகளும் அணிவகுத்து நிறுத்தப்பட்டன.
மாநாட்டின்போது யாருக்காவது மருந்துகள் தேவைப்பட்டால் அதனை உடனடியாக வழங்குவதற்கு டிரோன்களும் பயன்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
மேடையின் பின்பகுதியில் வி.ஐ.பி.க்களுக்கான தனித்தனி ஏ.சி. குடில்கள் உள்ளன. இதுபோல், விஜய் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்காக 5 கேரவன்கள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுமக்கள் அமரும் இடத்தில் பச்சை கம்பளமும், வி.ஐ.பி.க்கள் உட்காரும் இடத்தில் சிவப்பு கம்பளமும் விரிக்கப்பட்டு உள்ளன
2 லட்சம் தொண்டர்களுக்கு தண்ணீர் பாட்டில், பிஸ்கெட், குளுக்கோஸ் போன்றவை அடங்கிய ‘ஸ்நாக்ஸ் பாக்ஸ்’ வழங்கப்படும் என தெரிகிறது. தொண்டர்கள் வருகையைபதிவு செய்ய கியூஆர் கோடு வசதியும் செய்யப்பட்டு இருந்தது.
- 21 Aug 2025 8:37 AM IST
தொண்டர்களுக்கு உத்தரவிட்ட விஜய்
இந்நிலையில் மாநாட்டில் பங்கேற்பதற்காக த.வெ.க. தலைவர் விஜய் சென்னையில் இருந்து நேற்று மதியம் காரில் புறப்பட்டார். இரவு 7 மணியளவில் மதுரை வந்தடைந்தார்.
பின்னர், சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார். தொடர்ந்து அவர், பாரபத்திக்கு வந்து, மாநாட்டு பணிகளை பார்வையிட்டார். மேலும், சரிந்து விழுந்த 100 அடி கொடிக்கம்பம் குறித்து அங்கிருந்த நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.
ஒவ்வொரு பகுதியில் செய்துள்ள சிறப்பு ஏற்பாடுகள் குறித்து நிர்வாகிகள் அவருக்கு விளக்கினர். தொண்டர்களுக்கு எந்த இடையூறும் வராத வகையில் மாநாட்டை நடத்த வேண்டும் என கட்சியினருக்கு உத்தரவிட்டார்.




















