ஸ்டாலின் தொகுதியில் கிச்சடியை பாயசம் போன்று ஊற்றுகிறார்கள்: எடப்பாடி பழனிசாமி பேச்சு

அருப்புக்கோட்டை தொகுதியில் நாடார் சிவன் கோயில் சந்திப்பில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
சாத்தூர், விருதுநகர் சட்டமன்றத் தொகுதிகளில் எழுச்சிப்பயணத்தில் மக்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அடுத்தபடியாக அருப்புக்கோட்டை தொகுதியில் நாடார் சிவன் கோயில் சந்திப்பில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசியதாவது:
அருப்புக்கோட்டை நகரமே குலுங்குகின்ற அளவுக்கு மக்கள் வெள்ளம் காட்சியளிக்கிறது. அடுத்தாண்டு தேர்தலில் இத்தொகுதி வெற்றிக்கு இந்த மக்களின் எழுச்சியே சாட்சி. இந்தப் பகுதி மக்களுக்கு விவசாயம், நெசவு பிரதான தொழில். நெசவாளர்கள் இன்னல்களைக் களைய பல்வேறு திட்டங்கள் கொடுத்தோம். அவற்றில் சிலவற்றை சொல்கிறேன்.
விலையில்லா மின்சாரம், பசுமை வீடுகள் கொடுத்தோம், கைத்தறியில் தொழில்நுட்ப மேம்பாடுக்கு கைத்தறி ஆதரவுத் திட்டம் கொடுத்தோம், கைத்தறி தேங்கியதால் ரிபைட் மானியம் 300 கோடி ரூபாய் கொடுத்தோம், கூட்டுறவு நூற்பாலைகளுக்கு நிதியுதவி, ஜவுளி ஒருங்கிணைந்த கொள்கை, பன்னாட்டு ஜவுளி கண்காட்சி நடத்தினோம். தொடந்து தொழில் செய்ய வழிவகை ஏற்படுத்தினோம். நெசவாளர்களுக்கு உடனுக்குடன் கூலி கொடுத்தோம், மீண்டும் அதிமுக ஆட்சியில் இது நடைமுறைப்படுத்தப்படும். தேர்தல் அறிக்கையில் இன்னும் நிறைய வரும். விவசாயிகளைப் போல நெசவாளர்களுக்கும் குறைந்த வட்டியில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன் கொடுப்போம். பசுமை வீடுகள் தொடர்ந்து கட்டிக்கொடுக்கப்படும். மானம் காக்கின்ற நெசவாளர்களுக்கு அதிமுக துணை நிற்கும்.
அருப்புக்கோட்டை என்றாலே புரட்சித்தலைவர், பொன்மனச்செல்வன் எம்ஜிஆர் ஞாபகம் வரும், எம்ஜிஆர் நின்ற தொகுதி இது. விவசாயிகளுக்கு குடிமராமத்து திட்டம் கொண்டுவந்தோம், இரண்டுமுறை பயிர்க்கடன் தள்ளுபடி, மும்முனை மின்சாரம், பேரிடர் பயிர்க்காப்பீடு மூலம் இழப்பீடு, பேரிடர் நிவாரணம். அரசு பள்ளி மாணவர்களும் மருத்துவர் ஆக 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு கொடுத்து 2,818 பேர் இலவசமாக படித்து இன்று மருத்துவர் ஆகியுள்ளனர். சேலம் ஜலடாபுரத்தில் ஒரே நேரத்தில் 9 பெண்கள் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில் தேர்வாகி மருத்துவம் சேர்ந்திருக்கிறார்கள்.
கிராம மக்கள் ஊரிலேயே சிகிச்சை பெற அம்மா மினி கிளினிக் கொண்டுவந்தோம். விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 68 அம்மா மினி கிளினிக் திறந்தோம். ஆனால் இதனை திமுக அரசு மூடிவிட்டது. மீண்டும் ஆட்சி அமையும்போது இந்தத் திட்டம் தொடரும். இதேபோல் தாலிக்குத் தங்கம், திருமண உதவித் தொகை திட்டம் எல்லாம் நிறுத்தப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கான லேப்டாப் திட்டத்தையும் ரத்துசெய்துவிட்டனர். அனைத்து திட்டங்களும் மீண்டும் செயல்படுத்தப்படும்.
கொரோனா காலத்தில் விலையில்லாமல் ரேஷன் கடையில் பொருட்கள் கொடுத்தோம், அம்மா உணவகம் மூலம் விலையில்லாமல் உணவு கொடுத்தோம். முடக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் தொடரும். ஏழை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். பொங்கல் தொகுப்பும் 2,500 ரூபாய் கொடுத்தோம், அடுத்தாண்டு தீபாவளி அன்று அதிமுக ஆட்சி அமைந்ததும் சேலை வழங்குவோம். பொங்கலன்று கொடுக்கப்பட்டுவந்த வேட்டி, சேலை திட்டமும் கொடுக்கப்படும்.
டாஸ்மாக் என்றால் 10 ரூபாய் செந்தில் பாலாஜி தான் ஞாபகத்துக்கு வருவார். மதுக்கடையில் 10 ரூபாய் அதிக வசூல் செய்து, அது மேலிடத்துக்கு போகிறதாம். வருடத்துக்கு 5,400 கோடியும், நான்காண்டுகளில் 22 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்துள்ளனர். அமலாக்கத்துறையே ஊழல் நடந்ததாக விசாரிக்கிறது. 40 ஆயிரம் கோடி என்பதாக செய்தி வந்திருக்கிறது. விலைவாசி உயர்வு விண்ணை முட்டிவிட்டது. வருமானம் இல்லை, செலவு அதிகம். ஸ்டாலினுக்குக் குடும்பம்தான் முக்கியம். எந்தக் கட்சியிலும் இல்லாத வகையில் குடும்பமே கட்சிக்குள் இருக்கிறது. முக்கிய பதவிகளை எல்லாம் குடும்பமே எடுத்துக்கொண்டது. மத்தியிலும் மாநிலத்திலும் குடும்பம்தான் அதிகாரத்தில் இருப்பார்கள்.
ஆனால் அதிமுகவில் சாதாரண தொண்டர் முதல்வராகவும், பொதுச்செயலாளராகவும் ஆக முடியும் என்பதற்கு நானே உதாரணம். உழைப்பவருக்கு வீட்டுக் கதவைத் தட்டி பதவி கொடுத்தோம். திமுகவில் மற்றவர்கள் உழைப்பை உறிஞ்சி ஒரு குடும்பம் தான் வாழ்கிறது. இங்கு உழைப்பை கொடுப்பவர்களின் குடும்பத்தை வாழவைப்போம். ஸ்டாலின் காலை உணவு திட்டம் பற்றி பேசுகிறார், வரும்போது வலைதளத்தில் பார்த்தேன், முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில், சமூகநல விடுதியில் தரமில்லாத உணவு கொடுக்கிறார்கள், கிச்சடியை பாயாசம் போன்று ஊற்றுகிறார்கள்.
தூய்மைப் பணியாளர்கள் அதிமுக ஆட்சியில் போராடியபோது அவர்களுக்கு ஆதரவு கொடுத்துவிட்டு, இப்போது கண்டுகொள்ளவில்லை. அப்போது கமிஷனருக்கு கடிதம் எழுதினார், பணி நிரந்தரம் செய்யுங்கள் என்று கடிதம் கொடுத்தார். இப்போது என்ன செய்கிறார்? எதிர்க்கட்சியாக இருக்கும்போது குறை கேட்டார், தேர்தல் வாக்குறுதி கொடுத்தார். ஆனால் அதை ஏன் நிறைவேற்றவில்லை.
மின்கட்டணம், வரிகள் எல்லாம் உயர்த்திவிட்டனர். கொரோனா காலத்தில் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆல் பாஸ் போட்டோம். தொழில் முதலீட்டாளர் மாநாடு அதிமுக ஆட்சியில் இரண்டுமுறை நடத்தி நூற்றுக்கணக்கான ஒப்பந்தங்கள் போட்டு, லட்சக்கணக்கான வேலைவாய்ப்பை உருவாக்கினோம். திமுக அரசும் முதலீட்டாளர் மாநாடு நடத்தியது, ஆனால் அது குறித்து வெள்ளை அறிக்கை கேட்டால் கொடுக்கவில்லை. தொழில் முதலீட்டில் தவறான செய்திகளை திமுக வெளியிட்டு வருகிறது.
அரசுப் பணி வேலை வாய்ப்பு ஐந்தரை லட்சம் பேர் நிரப்புவோம் என்று சொல்லிவிட்டு வெறும் 50 ஆயிரம் பேர்தான் நிரப்பினார்கள். 196 அரசு கலை அறிவியல் கல்லூரி இருக்கிறது. இதில் 96 கல்லூரிக்கு பேராசிரியர்கள் இல்லை, முதல்வர் இல்லை. மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லை, மருந்து இல்லை. சளிக்கு போனால் நாய்க்கடி ஊசி போடுகிறாகள். அதிமுக ஆட்சியில் இரண்டு கையில்லாதவருக்கு கைகள் கொடுத்தோம். திமுக ஆட்சியில் காலோடு போனால் கால் இல்லாமலும், உயிரோடு போனால் உயிர் இல்லாமலும் வருகிறார்கள்.
கால்நடைகளுக்கும் மருத்துவ முகாம் நடத்தினோம், கால்நடை ஆராய்ச்சி நிலையம் அமைத்தோம். அதிமுக திட்டம் என்பதற்காக அதை முடக்கலாமா? மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அத்திட்டங்கள் எல்லாம் தொடரும்.
அதிமுக ஆட்சியில் அருப்புக்கோட்டையில், ஆண்கள் பெண்கள் கலைக் கல்லூரி, வட்டார போக்குவரத்து அலுவலகம், மகளிர் காவல்நிலையம், கூட்டுக்குடிநீர் திட்டம், 200 பசுமை வீடுகள், பாலங்கள், பள்ளிகள் தரம் உயர்த்தல், புறவழிச்சாலை திட்டம் போன்றவை செய்துகொடுத்தோம். நீங்கள் கொடுத்திருக்கும் கோரிக்கைகளும் நிறைவேற்றித் தரப்படும். மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம். பைபை ஸ்டாலின்”.
இவ்வாறு அவர் பேசினார்.






