இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 26-10-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 26 Oct 2025 1:07 PM IST
தினமும் நெல் கொள்முதல் நடைபெறுகிறது: தமிழக அரசு தகவல்
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
பாடுபட்டு உழைத்து விவசாயிகள் உற்பத்தி செய்திடும் நெல்லில் ஒரு நெல்மணி கூட வீணாகக் கூடாது என்று கூறி விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லை பாதுகாப்புடன் சேமித்திட வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார். அந்த அடிப்படையில் கடந்த 4 ஆண்டுகளில் முந்தைய ஆட்சிக்காலத்தை விடக் கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்துள்ளது.
வேளாண்மை உழவர் நலத்துறை என பெயர் சூட்டி விவசாயிகளின் நலன்களுக்கு தனி முக்கியத்துவம் தந்தார்கள். இந்தியாவிலேயே முதல்முறையாக வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கைகளை வழங்கி விவசாயத்தை மேம்படுத்தியதுடன் விவசாயப் பெருமக்களையும், அவர்களது வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தி வருகின்றார்கள்.
- 26 Oct 2025 1:04 PM IST
நெல் கொள்முதலில் திமுக அரசு படைத்திருப்பது சாதனை அல்ல... கொடும் வேதனை - அன்புமணி ராமதாஸ்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாட்டில் விவசாயிகளிடம் அதிமுக ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்டதை விட மிகவும் அதிகமாக ஆண்டுக்கு சராசரியாக 42 லட்சத்து 61 ஆயிரத்து 386 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாகவும், இது பெரும் சாதனை என்றும் திமுக அரசு கூறியிருக்கிறது. அரும்பாடுபட்டு விளைவித்த நெல்லை கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் வேதனையை தங்களின் சாதனை என திமுக அரசு தம்பட்டம் அடித்துக் கொள்வது கண்டிக்கத்தக்கது.
காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்யப்படாததாலும், மழையில் நனைந்து நெல் வீணாணதாலும் உழவர்கள் கண்ணீரில் மிதந்து கொண்டிருக்கின்றனர். அதைத் துடைக்க திமுக அரசு எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை. மாறாக கடந்த கால புள்ளிவிவரங்களை காட்டி திமுக அரசு புளங்காகிதம் அடைந்து கொள்கிறது. இந்த வெற்று புள்ளிவிவரங்களால் காவிரி பாசன மாவட்ட உழவர்களுக்கு எந்த பயனும் இல்லை.
எனவே, ஒன்றுக்கும் உதவாத கணக்குகளைக் கூறுவதை விடுத்து காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதலை தீவிரப்படுத்தி, உழவர்களின் கண்ணீரைத் துடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 20 நாள்களுக்கும் மேலாக கண்ணீரில் மிதக்கும் காவிரி பாசன மாவட்ட விவசாயிகள் விடும் சாபம் திமுக ஆட்சியாளர்களை சும்மா விடாது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
- 26 Oct 2025 12:40 PM IST
’சாவா’ சாதனையை முறியடித்த காந்தாரா சாப்டர் 1
உலகளாவிய பாக்ஸ் ஆபீஸில், காந்தாரா சாப்டர் 1 இப்போது ரூ. 818 கோடியைத் தாண்டியுள்ளது.
விக்கி கவுஷல் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த சாவா திரைப்படம் மொத்தம் ரூ. 807 கோடி வசூலித்த நிலையில். காந்தாரா தற்போது அதனை முந்தியுள்ளது.
- 26 Oct 2025 12:39 PM IST
விஜய் தேவரகொண்டாவுடன் சிறப்புப் பாடலில் நடிக்கத் தயார்...51 வயது நடிகை பேச்சு
51 வயதான பிரபல நடிகை, விஜய் தேவரகொண்டாவுடன் சிறப்புப் பாடலில் நடிக்கத் தயாராக இருப்பதாகக் கூறுகிறார்.
- 26 Oct 2025 12:37 PM IST
ஆட்சிக்கு வந்த 20 மாதங்களில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை - தேஜஸ்வி யாதவ்
பீகார் மாநிலத்தில் வருகிற நவம்பர் மாதம் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தல், 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும் என்பதால் மொத்த நாடும் தேர்தலை உற்று நோக்கி வருகிறார்கள்.பீகார் அரசியல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் - பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி, தேஜஸ்வியின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸின் இந்தியா கூட்டணி, பிரசாந்த் கிசோரின் ஜன்சுராஜ் கட்சி 3 முனை போட்டி நிலவுகிறது. இந்தியா கூட்டணி சார்பில் தேஜஸ்வி யாதவ் முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தேசிய தலைவர்கள் தொடங்கி மாநில தலைவர்கள் வரை பீகாரில் முகாமிட்டுள்ளனர். இந்தியா கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி மாறி மாறி வாக்குறுதிகளை வழங்கி வருகிறார்கள். பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் தேஜஸ்வி யாதவ் மற்றும் அமித்ஷா ஒரே நாளில் பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.
- 26 Oct 2025 11:58 AM IST
முதல்-அமைச்சர் முழுநேர சினிமா விமர்சகராக மாறிவிட்டார்; எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
தஞ்சை மாவட்டத்தில் தற்போது குறுவை அறுவடை பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்வதற்காக ஆங்காங்கே உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனைக்காக கொட்டி வைத்து காத்துக்கிடக்கிறார்கள்.
இந்த நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக விளைநிலங்களில் மழை நீர் வடியாததால் பெரும்பாலான இடங்களில் பயிர்கள் அனைத்தும் அழுகி நெல்மணிகள் முளைக்க தொடங்கி விட்டது. இதனால் விவசாயிகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்து முளைத்து வீணாகி வரும் நெல் குவியல்களை பார்வையிட அ.தி.மு.க பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தஞ்சாவூருக்கு வருகை புரிந்தார்.
பின்னர் அவர் தஞ்சை அருகே காட்டூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு வந்தார். அங்கு கூடியிருந்த ஏராளமான விவசாயிகளிடமும் கொள்முதல் தாமதம் காரணமாக குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள் நனைந்து முளைத்து வரும் நிலை குறித்தும், தொடர் மழையால் மூழ்கி பாதிப்படைந்த நெற்பயிர்கள் விவரங்கள் குறித்தும் கேட்டு அறிந்தார்.
- 26 Oct 2025 11:31 AM IST
ஸ்ரீலீலாவின் ’மாஸ் ஜதாரா’ பட டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
தெலுங்கில் அடுத்து வெளியாக இருக்கும் பெரிய படம் மாஸ் ஜதாரா. ரவி தேஜா கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தை பானு போகவரபு இயக்கி இருக்கிறார். ஸ்ரீலீலா கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்தப் படம் வருகிற 31-ம் தேதி வெளியாக உள்ளது.
- 26 Oct 2025 11:17 AM IST
முன்கூட்டியே உருவாகிறது புயல்; வானிலை ஆய்வு மையம் தகவல்
புயல் நாளை உருவாகும் என கணிக்கப்பட்டு இருந்த சூழலில், ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் இன்று மாலை 5.30 மணிக்கு புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று காலை வெளியிட்ட தகவல் தெரிவிக்கின்றது. இதற்கு ஏற்கனவே அட்டவணையில் தாய்லாந்து நாடு பரிந்துரைத்த மோன்தா என்ற பெயர் சூட்டப்பட உள்ளது. இதனால், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
தொடர்ந்து அது வடக்கு வடமேற்கே நகர்ந்து, ஆந்திர பிரதேசத்தின் மசிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் பகுதிகளுக்கு இடையே வருகிற 28-ந்தேதி அன்று மாலை அல்லது இரவில் காக்கிநாடா அருகே தீவிர புயலாக கரையை கடக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- 26 Oct 2025 10:35 AM IST
பண ஆசை...குறுக்கு வழியில் சம்பாதித்து மாட்டிக்கொள்ளும் கதாநாயகன் - ஓடிடியில் ஒரு அரசியல் திரில்லர்
சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான இந்த படம் மிதமாக ஓடியது. அதன் சுவாரஸ்யமான கதைக்களத்தால் பார்வையாளர்களை நன்றாகக் கவர்ந்தது. இந்த படம் தமிழிலும் தெலுங்கிலும் நல்ல வசூலைப் பெற்றது.
- 26 Oct 2025 10:19 AM IST
கர்நாடகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு: 15 லட்சம் பேர் புறக்கணிப்பு என தகவல்
பெங்களூருவை பொறுத்தவரை மாநகர எல்லையில் 39 லட்சம் வீடுகள் உள்ளன. இதுவரை 19 லட்சம் வீடுகளில் மட்டுமே கணக்கெடுப்பு பணி நடைபெற்றுள்ளது. 5 லட்சம் வீடுகளில் வசிப்போர் தங்களது கணக்கெடுப்பு விவரங்களை வழங்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. தட்சிணகன்னடா, உத்தரகன்னடா மாவட்டங்களில் தலா 50 ஆயிரம் பேர் தகவல்களை வழங்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. பல வீடுகள் பல நாட்களாக பூட்டியே கிடப்பதாகவும், இதனால் கணக்கெடுப்பு நடத்த முடியவில்லை. ஒட்டு மொத்த மக்கள் தொகையில் பெங்களூருவில் 20 சதவீதம் மக்கள் உள்ளனர் என்றும் மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் தயானந்த் கூறினார்.
















