சமூக நீதியை வென்றெடுப்பதற்கான பயணத்தில் வி.பி.சிங் துணை நிற்பார்: அன்புமணி ராமதாஸ்


சமூக நீதியை வென்றெடுப்பதற்கான பயணத்தில் வி.பி.சிங் துணை நிற்பார்: அன்புமணி ராமதாஸ்
x
தினத்தந்தி 27 Nov 2025 11:12 AM IST (Updated: 27 Nov 2025 11:53 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் சாதிவாரி சர்வேயின் அடிப்படையில் அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க வி.பி.சிங் நினைவு நாளில் உறுதியேற்போம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை

முன்னாள் இந்தியப் பிரதமர் வி.பி.சிங் நினைவு நாளையொட்டி பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 40 ஆண்டுகளுக்கும் மேலாக மறுக்கப்பட்டு வந்த இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதியை வழங்கிய சமூகநீதிக் காவலர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் 17-ம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் அவரை போற்றி வணங்குகிறேன்; சமூகநீதியில் அவர் கொண்டிருந்த அக்கறையை அனைவர் மத்தியிலும் கொண்டு சென்று பரப்ப நான் உறுதியேற்கிறேன்.

மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தாம் வழங்கிய 27 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு சமூக அநீதி சக்திகள் நீதிமன்றங்களின் மூலமாக போட்ட முட்டுக்கட்டைகள் தகர்க்கப்பட்ட பிறகும், இட ஒதுக்கீட்டை மத்திய அரசு நடைமுறைப்படுத்தாத நிலையில், அதை மீட்டெடுத்தே தீருவேன் என்று முழங்கியவர் அவர். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் வரை தலைநகர் தில்லிக்குள் நுழைய மாட்டேன் என்று சபதம் ஏற்று 1993-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியேறிய அவர், 1994-ம் ஆண்டு மார்ச் இறுதியில் 27 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு, அதன்படியான முதல் பணி நியமன ஆணை ராஜசேகரஆச்சாரி என்பவருக்கு வழங்கப்பட்டதும் தான், 2.4.1994-ம் நாள் தில்லிக்குள் நுழைந்தார்.

சமுக நீதிக்கான போராட்டத்தில் அவர் கொண்டிருந்த நம்பிக்கையையும், உறுதியையும் நாமும் கடைபிடிப்போம்; இந்த போராட்டத்தில் வி.பி.சிங் அவர்கள் நமக்கு துணை நிற்பார். அவரது துணையுடன் தமிழ்நாட்டில் சாதிவாரி சர்வே, அதனடிப்படையில் அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான இட ஒதுக்கீடு ஆகியவற்றை வென்றெடுக்க வி.பி.சிங் அவர்களின் நினைவு நாளில் உறுதியேற்போம்!.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story