காசா மீதான இஸ்ரேல் தாக்குதலை இந்தியா தடுத்து நிறுத்தவேண்டும் - ஈரான் அதிபர் வேண்டுகோள்
இந்திய பிரதமர் மோடியுடன், ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி பேச்சுவார்த்தை நடத்தினார்.
தெஹ்ரான்,
இஸ்ரேல் மீது கடந்த மாதம் 7ம் தேதி ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1,405 பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேலில் இருந்து 200க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பிணைக்கைதிகளாக காசாவுக்குள் பிடித்து சென்றனர்.
இதனை தொடர்ந்து இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஹமாஸ் மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. மேலும், காசாமுனையில் ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் நிலைகளை குறிவைத்து தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் பொதுமக்கள் உள்பட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, காசாமுனை மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலை நிறுத்தக்கோரி பல்வேறு நாடுகளில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வளைகுடா நாடுகளில் இஸ்ரேலுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளை, பிணைக்கைதிகளை மீட்டு, ஹமாஸ் ஆயுதக்குழுவை முற்றிலும் ஒழிக்கும்வரை போரை நிறுத்தப்போவதில்லை என்று இஸ்ரேல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனால், ஒருமாதமாக நீடித்து வரும் இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் மேலும் பல வாரங்கள் நீடிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி இந்திய பிரதமர் மோடியை நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, காசாமுனையில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை தடுத்து நிறுத்த இந்தியா தனது முழு திறனையும் பயன்படுத்தவேண்டுமென பிரதமர் மோடியிடம் ஈரான் அதிபர் ரைசி வேண்டுகோள் விடுத்தார்.
இந்திய பிரதமர் மோடியுடன் அதிபர் ரைசி நடத்திய பேச்சுவார்த்தை தொடர்பாக ஈரான் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று ஒடுக்கப்பட்ட காசா மக்கள் மீது இஸ்ரேல் நடத்தும் குற்றங்களை முடிவுக்கு கொண்டுவர இந்தியா தனது முழு திறனையும் பயன்படுத்தும் என எதிர்பார்க்கிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.