இலங்கை மீன்பிடி கப்பலை கடத்திய கடற்கொள்ளையர்கள் - 6 பேரின் நிலை என்ன?


இலங்கை மீன்பிடி கப்பலை கடத்திய கடற்கொள்ளையர்கள் - 6 பேரின் நிலை என்ன?
x

நடுக்கடலில் இலங்கை மீனவர்கள் 6 பேர் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அவர்களை கடற்கொள்ளையர்கள் கடத்தி சென்றனர்.

கொழும்பு,

இலங்கையை சேர்ந்த 6 மீனவர்கள் கடந்த சனிக்கிழமை அரபிக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். இலங்கையில் இருந்து 2 ஆயிரத்து 40 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு சோமாலியா அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு வந்த கடற்கொள்ளையர்கள் மீனவர்களை சிறைபிடித்தனர்.

பின்னர், 6 மீனவர்களுடன் கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தி சென்றனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த இலங்கை கடற்படையினர் மீட்புப்பணிக்கு விரைந்துள்ளனர்.

அதேவேளை, கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட மீனவர்களின் நிலை என்ன? எங்கு கடத்தப்பட்டுள்ளனர்? உள்ளிட்ட விவரங்களை அறியவும், கடத்தப்பட்டவர்களை விடுவிக்கவும் இலங்கை அரசு சோமாலியா அரசின் உதவியை நாடியுள்ளது.

முன்னதாக, இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு அளிக்கும் வகையில் செங்கடல், அரபிக்கடல், இந்திய பெருங்கடல் பகுதிகளில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதேபோல், சரக்கு கப்பல்களை கடத்தும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி சோமாலியாவை சேர்ந்த கடற்கொள்ளையர்களும் கப்பல்களை கடத்தும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் சரக்கு கப்பல்கள் தாக்கப்படுவதை தடுக்க அமெரிக்கா தலைமையில் பல்வேறு நாடுகள் நடவடிக்கைகள் எடுத்துவரும் நிலையில் இந்த கூட்டணியில் இணைய உள்ளதாக இலங்கை கடந்த 2 வாரங்களுக்கு முன் தெரிவித்தது. இந்த சூழ்நிலையில் சோமாலியா கடற்பகுதி அருகே அரபிக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இலங்கை கப்பலையும் 6 மீனவர்களையும் கடற்கொள்ளையர்கள் கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story