மதச்சார்பற்ற சமூகநீதியே சமத்துவ சமுதாயம் அமைய வழிவகுக்கும் - விஜய் சுதந்திர தின வாழ்த்து
நாடு முழுவதும் 79-வது சுதந்திர தினம் இன்று கொண்டாட்டப்படுகிறது. இந்த நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
மதச்சார்பற்ற சமூகநீதியே சமத்துவ சமுதாயம் அமைய வழிவகுக்கும். மதச்சார்பின்மை, சகோதரத்துவம், நல்லிணக்கம் நீடிக்க அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள். இத்திருநாளில், நம் தேசத்தின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தன்னலமற்ற தலைவர்கள், தியாகிகள் மற்றும் வீரர்களின் தியாகத்தைப் போற்றி வணங்குவோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
சுதந்திர தின விழா உரையில் 9 அறிவிப்புகளை வெளியிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்தியாவின் 79-வது சுதந்திர தின விழா இன்று (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் பிரமாண்டமாக நடந்தன.
ஜார்ஜ் கோட்டை முகப்பில், புதுப்பிக்கப்பட்ட கொடி கம்பத்தில் மூவர்ண தேசியக்கொடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது கொடிக்குள் வைக்கப்பட்டு இருந்த பூக்கள் காற்றில் பறந்து வந்து விழுந்தன. மூவர்ணத்தில் பலூன்களும் பறக்கவிடப்பட்டன. தேசியக்கொடி ஏற்றப்பட்டபோது போலீஸ் பேண்டு வாத்தியக் குழுவினர் தேசிய கீதத்தை இசைத்தனர்.
14 ஆண்டுகளுக்கு பிறகு இரட்டை இலக்கத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சி - மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சுதந்திர தின விழாவில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “14 ஆண்டுகளுக்கு பிறகு இரட்டை இலக்கத்தில் தமிழ்நாடு வளர்ச்சி அடைந்துள்ளது. ஒன்றிய-மாநில அரசுகளுக்கு இடையான அதிகாரம் மற்றும் நிதிப் பகிர்வில் மாநில அரசின் பங்கை மீட்டெடுத்திட அரசியல் சட்டபூர்வமான நடவடிக்கை எடுப்பதுதான் ஒரே தீர்வு.
இதை நிறைவேற்றி முடிப்பதற்கான நேரம் வந்துவிட்டது என இவ்விடுதலை நாளில் உறுதியாக நம்புகிறேன். விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு அரசு வழங்கும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.22ஆயிரமாக உயர்த்தப்படும். தியாகிகளுக்கான மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் ரூ.12 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
கட்டப்பொம்மன் உள்ளிட்ட தியாகிகளின் வழித்தோன்றல் பெறும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.11 ஆயிரமாக உயர்த்தப்படும். 2ஆம் உலகப்போரில் பங்கேற்ற தமிழ்நாட்டின் வீரர்களுக்கு மாதாந்திர நிதியுதவி ரூ.15ஆயிரமாக உயர்த்தபடும்.
2ஆம் உலகப் போரில் பங்கேற்ற வீரர்களின் கைம்பெண்களுக்கு மாதாந்திர நிதி ரூ.8,000ஆக உயர்த்தப்படும். முன்னாள் படை வீரர்கள் வசதிக்காக சென்னை மாதவரத்தில் தங்கும் விடுதி அமைக்கப்படும் முன்னாள் படை வீரர்கள் தங்கும் விடுதி 33 ஆயிரம் சதுர அடி பரப்பில் ரூ.22 கோடியில் அமைக்கப்படும்” என்று தெரிவித்தார்.
தியாகிகள் ஓய்வூதியம் உயர்வு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மாநில அரசு விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு தற்போது வழங்கிவரும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 22,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும், அவர்களின் குடும்பங்களுக்கு தற்போது வழங்கிவரும் மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் ரூ.12,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சுதந்திர தின விழாவில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்து சுதந்திர தினவிழாவில் உரையாற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “தேசியக் கொடியை ஏற்றி வைக்கும் உரிமையை முதல்-அமைச்சர்களுக்கு பெற்றுத் தந்தவர் கலைஞர். அனைவருக்குமான நாடாக இந்தியா இருக்க வேண்டும் என தலைவர்கள் கனவு கண்டனர்.
சுதந்திர தினத்தில் விடுதலை வீரர்கள், அவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோரை வணங்குகிறேன். விடுதலைக் காற்றை சுவாசிக்க காரணமாக விளங்கும் தியாகிகளை போற்றுவோம். அனைத்து சமூக மக்களும் ரத்தம் சிந்தி பெற்றது நம் விடுதலை.
1967இல் திமுக ஆட்சிக்கு வரும் முன் தியாகிகளுக்காக 3 நினைவு மண்டபங்கள்தான் இருந்தன. தியாகிகளை தொடர்ந்து போற்றிவரும் அரசாக திராவிட மாடல் அரசு விளங்குகிறது. பெரும்பாலான தியாகிகளுக்கு மனிமண்டபம், சிலைகள் அமைக்கப்பட்டது திமுக ஆட்சியில்தான்” என்று கூறினார்.
“தீபாவளியில் மக்களுக்கு மிகப் பெரிய பரிசு காத்திருக்கிறது..” - பிரதமர் மோடி சுதந்திர தின அறிவிப்பு
79-வது சுதந்திர தினவிழாவில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், “இந்த தீபாவளியை, நான் உங்களுக்கு இரட்டை தீபாவளியாக மாற்றப் போகிறேன். இந்த தீபாவளியில் நாட்டு மக்கள் ஒரு பெரிய பரிசைப் பெறுவார்கள்... அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை நாங்கள் கொண்டு வருகிறோம்.
இது நாடு முழுவதும் வரி சுமையைக் குறைக்கும். தீபாவளிக்கு முன்னதாக இது ஒரு பரிசாக இருக்கும். அதற்கான குழு அமைக்கப்படும். இந்த ஆண்டு தீபாவளி, மக்களுக்கு இரட்டை தீபாவளியாக இருக்கும். இது சாமானிய மக்களுக்குப் பொருட்களின் மீதான வரிகளைக் கணிசமாகக் குறைக்கும். நமது சிறுதொழில் வியாபாரிகள் பெரிதும் பயனடைவார்கள். அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்கள் மலிவாக மாறும், இது நமது பொருளாதாரத்தையும் வலுப்படுத்தும்” என்று பிரதமர் மோடி கூறினார்.
விண்வெளியில் இந்தியாவின் சொந்த ஆராய்ச்சி மையம் விரைவில் அமைக்கப்படும் - பிரதமர் மோடி
79-வது சுதந்திர தினவிழாவில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் கூறியதாவது:-
விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளார். விண்வெளியில் இந்தியாவின் சொந்த ஆராய்ச்சி மையம் விரைவில் அமைக்கப்படும். அதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. விண்வெளி சார்ந்த 300 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தற்போது இந்தியாவில் உள்ளன.
நாட்டின் முன்னேற்றத்திற்கு அனைவரும் பாடுபட வேண்டும். நாம் பெரிதாக கனவு காண வேண்டும். அரசு துணை நிற்கும் நான் உங்களுடன் இருக்கிறேன். வரலாறு படைப்போம்
இவ்வாறு அவர் கூறினார்.
செமி கண்டக்டர் துறையில் இந்தியா முன்னிலை : பிரதமர் மோடி
79-வது சுதந்திர தினவிழாவில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் கூறியதாவது:-
அடிமைத்தனம் தான் நம் நாட்டை ஏழ்மையாக்கியது. நமது திறமையை பாதுகாக்க, மேலும் அதிகரிக்க தன்னிறைவு மிகவும் முக்கியம். ஆபரேஷன் சிந்தூர் - நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு பதிலடி கொடுக்கப்பட்டது.
இந்த யுகம் தொழில்நுட்பத்தால் இயக்கப்பட்டு வருகிறது - தொழில்நுட்பம் தான் வாழ்க்கை. இந்தியாவில் ஏற்கனவே 6 செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைகள் உள்ளன. மேலும் 4 செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைகளை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
செமி கண்டக்டர் துறையில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய சிப்-கள் சந்தைக்கு வந்துவிடும். செமி கண்டக்டர் உற்பத்தி துறையில் இந்தியாவின் வளர்ச்சியை இனி தடுக்கவே முடியாது
10 புதிய அணுமின் உலைகள் அமைக்கப்பட உள்ளன. எரிசக்தி துறையில் நம் நாடு தன்னிறைவு பெற வேண்டியது அவசியம். பெட்ரோல், டீசல், எரிவாயு - இந்தியா தன்னிறைவு பெற வேண்டும். டாலர், பவுண்டுகளை சார்ந்திருப்பது தற்சார்பு அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
79-வது சுதந்திர தினம்: தேசியக்கொடி ஏற்றினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை ஜார்ஜ் கோட்டை முகப்பில், புதுப்பிக்கப்பட்ட கொடி கம்பத்தில் மூவர்ண தேசியக்கொடியை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது கொடிக்குள் வைக்கப்பட்டு இருந்த பூக்கள் காற்றில் பறந்து வந்து விழுந்தன.
இதனைத்தொடர்ந்து தமிழக மக்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின உரையாற்றி வருகிறார்.
முன்னதாக சென்னை கோட்டை கொத்தளத்திற்கு வருகை தந்து, முப்படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார்.
"சிந்து நதி ஒப்பந்தத்தை ஏற்க முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
79-வது சுதந்திர தினவிழாவில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் கூறியதாவது:-
சிந்து நதி நீரை முழுமையாக பயன்படுத்தும் உரிமை இந்திய விவசாயிகளுக்கு மட்டுமே உள்ளது. தண்ணீரும், ரத்தமும் ஒன்றாக ஓடும் வகையிலான ஒப்பந்தத்தை ஏற்க முடியாது. எதிரி நாட்டு விவசாய நிலங்களுக்கு நமது தண்ணீர் கிடைக்க கூடாது. அதனால் ஒப்பந்தத்தை ரத்து செய்தோம்.
இந்த சுதந்திர தினத்தில் நாட்டின் 140 கோடி மக்களுக்கும் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். லட்சக்கணக்கான வீரர்களின் தியாகங்களால் நம் தேசம் விடுதலை பெற்றது
நாட்டின் விடுதலையில் ஏராளமான தேசத் தலைவர்கள் தங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளனர். இன்று நமது அரசியல் சாசனத்திற்கு தலை வணங்கி மரியாதை செலுத்துகிறேன். ஒரே நாடு ஒரே சாசனம் என்பது நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவை நேசிப்பவர்கள், இந்தியாவின் நண்பர்களுக்கு என் இதயத்தில் இருந்து வணக்கத்தை தெரிவிக்கிறேன். அணுஆயுத மிரட்டல்களை ஒரு போதும் பொருட்படுத்தமாட்டோம். சிந்து நதி இந்தியர்களுக்கு மட்டும் தான் சொந்தமானது.
இவ்வாறு அவர் கூறினார்.
என் கண்களுக்கு முன்னால் ஒரு மினியேச்சர் இந்தியாவை நான் காண்கிறேன் - பிரதமர் மோடி
79-வது சுதந்திர தினவிழாவில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் கூறியதாவது:-
இன்று, செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து, நாட்டை வழிநடத்தி, நாட்டிற்கு வழிகாட்டும் அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியவர்களுக்கு எனது மரியாதைக்குரிய மரியாதையை செலுத்துகிறேன். இன்று நாம் டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் 125வது பிறந்தநாளையும் கொண்டாடுகிறோம்.
இந்திய அரசியலமைப்பிற்காக தியாகம் செய்த நாட்டின் முதல் சிறந்த மனிதர் டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி. அரசியலமைப்பிற்காக தியாகம் செய்தவர். 370வது பிரிவின் சுவரை இடிப்பதன் மூலம் ஒரே நாடு, ஒரே அரசியலமைப்பு என்ற மந்திரத்தை உயிர்ப்பித்தபோது, டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜிக்கு உண்மையான அஞ்சலி செலுத்தினோம்.
இன்று செங்கோட்டையில் பல சிறப்பு பிரமுகர்கள் உள்ளனர். தொலைதூர கிராமங்களைச் சேர்ந்த பஞ்சாயத்து உறுப்பினர்கள், துரோண் தீதியின் பிரதிநிதிகள், லக்பதி தீதியின் பிரதிநிதிகள், விளையாட்டு உலகத்தைச் சேர்ந்த பிரமுகர்கள், தேசத்திற்கும் வாழ்க்கைக்கும் ஏதாவது ஒன்றைக் கொடுத்த சிறந்த மனிதர்கள் இங்கே உள்ளனர். ஒரு வகையில், என் கண்களுக்கு முன்னால் ஒரு மினியேச்சர் இந்தியாவை நான் காண்கிறேன். இன்று, செங்கோட்டை தொழில்நுட்பம் மூலம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.