தமிழக சட்டசபை தேர்தலில் போட்டி 3 முனையா?, 4 முனையா? - எது யாருக்கு சாதகம்?
அரசியலில் யாரும் நிரந்தர நண்பனும் இல்லை; எதிரியும் இல்லை.;
சென்னை,
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆளுங்கட்சியான தி.மு.க. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளவும், எதிர்க்கட்சியான அ.தி.மு.க. ஆட்சியை பிடிக்கவும் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகின்றன.
ஆளுங்கட்சியான தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மக்கள் நீதி மய்யம் என பல கட்சிகள் வரிசை கட்டி நிற்கின்றன. எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க., த.மா.கா. உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன.
இதுபோக, சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துவிட்டது. புதிய வரவான நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், கூட்டணிக்கு பிற கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தாலும் முதல்-அமைச்சர் வேட்பாளர் விஜய்தான் என்று கூறிவருகிறது.
தற்போதைய நிலையில், தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில் 4 முனைப் போட்டிக்கே அதிகம் வாய்ப்பு இருக்கிறது. தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணி, அ.தி.மு.க. தலைமையில் மற்றொரு கூட்டணி, நடிகர் விஜய் தலைமையில் புதிய கூட்டணி, நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி என்று 4 முனைப் போட்டி நிலவுகிறது.
இதே 4 முனைப் போட்டி நிலவினால் யாருக்கு சாதகம்? என்பதை முதலில் பார்ப்போம். கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது தி.மு.க. கூட்டணியில் தி.மு.க. 37.70, காங்கிரஸ் 4.28, விடுதலை சிறுத்தைகள் கட்சி 1.3, இந்திய கம்யூனிஸ்டு கட்சி 1.09, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 0.85, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 0.48 சதவீதம் என வாக்குகளை பெற்றன. தற்போது தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ள நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் அப்போது தனித்து போட்டியிட்டு 2.45 சதவீத வாக்குகளை பெற்றது.
அ.தி.மு.க. கூட்டணியில் அ.தி.மு.க. 33.29, பா.ம.க. 3.81, பா.ஜ.க. 2.63, தே.மு.தி.க. 0.43 சதவீத வாக்குகளை பெற்றன. தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 6.85 சதவீதமும், டி.டி.வி.தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 2.4 சதவீதமும் வாக்குகளை பெற்றது.
இந்த 5 ஆண்டு இடைவெளியில் கட்சிகளின் வாக்கு சதவீதம் மாறியிருந்தாலும் சற்று ஏற்ற, இறக்கத்துடனே இருக்க வாய்ப்பு இருக்கிறது.
இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது, தமிழகத்தில் 4 முனைப்போட்டி நிலவினால், தற்போதைய ஆளுங்கட்சியான தி.மு.க.வுக்கே அதிக வெற்றி வாய்ப்பு உள்ளது. நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் அதிக அளவு வாக்குகளை பெறும் என்று கணிக்கப்பட்டாலும், அது எத்தனை இடங்களில் வெற்றிக்கனியை பறிக்கும் என்பது கேள்விக்குறிதான்.
அடுத்து 3 முனைப்போட்டி என்று வந்தால் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பதை பற்றி பார்ப்போம். தற்போது, நடிகர் விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை இழுக்க வெளிப்படையாகவே அ.தி.மு.க. முயன்று வருகிறது. திரை மறைவில் காங்கிரஸ் கட்சியும் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த 2-ல் எது நடந்தாலும் கூட்டணி கணக்கில் பெரும் மாற்றம் ஏற்படும்.
அ.தி.மு.க. கூட்டணிக்கு தமிழக வெற்றிக் கழகம் வந்தால், பா.ஜ.க. வெளியேறும் சூழ்நிலை ஏற்படும். அதே நேரத்தில், பா.ம.க., தே.மு.தி.க., தி.மு.க. கூட்டணியில் உள்ள சில கட்சிகள் ஒன்றிணையவும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இதுபோன்று ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், வெற்றி வாய்ப்பும் மாறும் நிலை உருவாகலாம்.
அதேபோல், தமிழக வெற்றிக்கழகம், காங்கிரஸ் கூட்டணி உருவாகினாலும், தி.மு.க. கூட்டணியில் உள்ள ஒரு சில கட்சிகள் இணையும் என்று கூறப்படுகிறது. ஆனால், வெற்றி வாய்ப்புதான் மதில் மேல் பூனையாகவே இருக்கும் என தெரிகிறது.
இப்படி, தமிழகத்தில் நடைபெற உள்ள 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி வாய்ப்பு என்பது கூட்டணியை பொறுத்தே இருக்கிறது. எந்த வகையில் கூட்டணி அமைய இருக்கிறது என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம். காரணம், அரசியலில் யாரும் நிரந்தர நண்பனும் இல்லை. எதிரியும் இல்லை. கடந்த கால அரசியலே இதற்கு சாட்சி.