திருநெல்வேலியில் 2025-ல் போக்சோ வழக்குகளில் 289 பேர் கைது


திருநெல்வேலியில் 2025-ல் போக்சோ வழக்குகளில் 289 பேர் கைது
x

திருநெல்வேலி மாவட்டத்தில் 2025-ம் ஆண்டில் 28 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வழக்கானது சென்ற ஆண்டில் பதிவான 35 வழக்குகளுடன் ஒப்பிடும்போது 20 விழுக்காடு குறைவானதாகும்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் 2025-ம் ஆண்டு பொதுவாக பெரிய அளவில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏதுமின்றி அமைதியாக இருக்க காவல்துறை பல்வேறு துரித நடவடிக்கைகள் எடுத்துள்ளது. கொலை மற்றும் காய வழக்குகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது தனிக்கவனம் செலுத்தி உடனுக்குடன் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற வழக்குகளில் காவல்துறையின் துரித நடவடிக்கையினால் மாவட்டத்தில் பெரிய அளவில் எவ்வித சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் இல்லை.

சிறு சிறு பிரச்சினைகளிலும் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்த காரணத்தால் அது மாவட்டத்தின் இதர பகுதிகளுக்கு பரவாமலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமலும் இருந்தது. மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் அதிகமான விழிப்புணர்வு ஏற்படுத்தியதும், காவல் நிலையத்தில் பெறப்படும் அனைத்து குற்ற சம்பவங்கள் தொடர்பான மனுக்கள் மீது உடனடியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்ட காரணத்தினாலும் 2025-ம் ஆண்டு சட்டம் ஒழுங்கு மிகவும் சிறப்பாக பராமரிக்கப்பட்டது.

2025-ம் ஆண்டில் 27 கொலை வழக்குகளில் 1 குற்றவாளிக்கு மரண தண்டனையும், 96 குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனையும் வாங்கி தரப்பட்டுள்ளது. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். திருநெல்வேலி மாவட்டத்தில் இது போன்று அதிகமான வழக்குகளில் தண்டணை பெற்றுத் தரப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். மேலும் 14 கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்ட 21 குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தரப்பட்டுள்ளது. அதே போல் 1 கூட்டுக் கொள்ளை வழக்கிலும், 2 கொள்ளை வழக்குகளிலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தரப்பட்டுள்ளது.

கொலை வழக்குகள்:

2025-ம் ஆண்டில் 28 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வழக்கானது சென்ற ஆண்டில் பதிவான 35 வழக்குகளுடன் ஒப்பிடும்போது 20 விழுக்காடு குறைவானதாகும். இந்த ஆண்டில் நடந்த கொலை வழக்குகளில் சம்பந்தபட்ட 114 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 21 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினர் அனைத்து மட்டங்களிலும் எடுத்த கடுமையான நடவடிக்கைகளின் காரணமாக, திருநெல்வேலி மாவட்டத்தில், 2025-ம் ஆண்டு சாதி ரீதியான படுகொலைகள் ஏதும் நடைபெறவில்லை.

மேலும் நடக்கவிருந்த 12 கொலைகள் காவல்துறையினரின் துரித மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தடுக்கப்பட்டு 37 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சொத்து வழக்குகள்:

2025-ம் ஆண்டில் பதிவான சொத்து வழக்குகளில் 70 சதவீத வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, 868 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சுமார் ரூ.2 கோடியே 25 லட்சம் மதிப்பிலான களவு சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் சம்பந்தப்பட்ட 7 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போக்சோ வழக்குகள்:

2025-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட போக்சோ சட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட 289 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த ஆண்டில் 28 போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 29 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடத்தக்க வகையில் ஒரு குற்றவாளிக்கு தூக்கு தண்டனையும், ஒரு குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், இரண்டு சரித்திர பதிவேடு குற்றவாளி உட்பட நான்கு நபர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனையும், 4 நபர்களுக்கு ஆயுள் தண்டனையும் பெற்று தரப்பட்டுள்ளது.

கஞ்சா போன்ற போதைபொருள் வழக்குகள்:

திருநெல்வேலி மாவட்டத்தில் கஞ்சா போன்ற போதைபொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க தேவையான அனைத்து கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது. 2025-ம் ஆண்டின் 272 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 281.488 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளிகளின் 38 வாகனங்களை கைப்பற்றியும், அவர்களின் 46 வங்கி கணக்குகளை முடக்கியும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 19 நபர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி கைப்பற்றப்பட்ட 25.910 கிலோ கஞ்சா போதை பொருள் அழிக்கப்பட்டது. அதே போல் குட்கா வழக்குகளில் 305 நபர்கள் கைது செய்யப்பட்டு, 3810.510 கிலோ எடையுள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, 12 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மணல் திருட்டு வழக்கு:

திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் மணல் திருட்டில் ஈடுபட்ட 183 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, மணல் திருட்டிற்கு உபயோகப்படுத்திய 132 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சாலை விபத்துக்கள்:

2025-ம் ஆண்டு நடந்த சாலை விபத்துக்களில் கடந்த 2014-ம் ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டில் 18 விழுக்காடு விபத்துகள் குறைந்துள்ளன. மேலும் 17 விழுக்காடு மரணங்கள் குறைந்துள்ளன.

குண்டர் தடுப்பு காவல் சட்டம்:

2025-ம் ஆண்டு மொத்தம் 159 சமூக விரோதிகள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவற்றில், 107 நபர்கள் போக்கிரிகள் ஆவார்கள். 19 நபர்கள் கஞ்சா வழக்கிலும், 7 பேர் கொள்ளை, திருட்டு வழக்கிலும், 26 நபர்கள் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் ஆவார்கள்.

பிடிவாரண்ட்:

இந்த ஆண்டில் மட்டும் 2,005 பிடியாணைகள் மீது நடவடிக்கை மேற்கொண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளளர். நாங்குநேரி காவல் நிலையத்தில் 2001-ம் ஆண்டு நடத்த மோசடி வழக்கில் 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை கண்டுபிடித்து, கைது செய்து சிறையிலடைக்கப்பட்டார்.

சமூக வலைதளப் பிரிவு:

திருநெல்வேலி மாவட்டத்தில் 2025-ம் ஆண்டு சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகளை பரப்புவோர், பிற இனத்தவரை இழிவுபடுத்தும் விதமாகவும், சாதிய வன்மத்தை தூண்டும் விதமாகவும் பதிவிட்ட 126 வழக்குகளில் 133 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

CCTV:

கடந்த 2025-ம் ஆண்டில் திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், புதிதாக 2,479 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கவும், பெருமளவு குற்றங்கள் குறைவதற்கும், நடந்த குற்றங்களை கண்டுப்பிடிப்பதற்கும் ஏதுவாக உள்ளது.

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க காவல்துறை மேற்கொண்ட பல்வேறு முன் தடுப்பு நடவடிக்கைகள்:

ஜாதி ரீதியான பதற்றமான கிராமங்களுக்கு 16,328 (Foot Patrol) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாணவர்களிடையே சாதி சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்ட, 38 போக்குவரத்து வழிதடங்களில் செல்லும் பேருந்துகளுக்கு காலை, மாலை காவலர்களை அனுப்பி ரோந்து செய்யப்படுகிறது.

மாணவர்களிடையே சாதி ரீதியிலான பிரச்சினைகள் ஏற்பட வாப்புள்ள 30 பள்ளிகள் கண்டறியப்பட்டு தினமும் காலை, மாலை ரோந்து அனுப்பப்பட்டு வருகிறது.

94 மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளுக்கு ரோந்து அனுப்பி மாணவர்களிடையே பிரச்சினை எழாமல் கவனித்து வரப்படுகிறது. மேலும் மாதம் ஒருமுறை அந்தந்த பள்ளிகளில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

காவல் கண்காணிப்பாளர், பள்ளிக்கல்விதுறை, வருவாய்துறை இணைந்து பள்ளிகளில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டு, மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அந்தந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கள் சரகத்திலுள்ள கல்வி நிறுவனங்களுக்கு அடிக்கடி சென்று விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி மாணவர்கள், மாணவிகளுடன் கலந்துரையாடல் செய்து வருகின்றனர்.

மாணவிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து தகவல் தெரிவிக்க "போலீஸ் அக்கா" திட்டம் தொடங்கப்பட்டு, சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட புகாருக்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் காவல்துறையினரை எளிதில் அணுகும் வகையில் ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு காவலரை நியமித்து "கிராமத்துக் காவல்" என்ற புதிய திட்டத்தை திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கிராமத்திற்கு ஒதுக்கப்பட்ட காவலர் வாரத்தில் இரண்டு நாட்கள் அக்கிராம மக்களை நேரில் சந்தித்து பொதுமக்களிடமிருந்து தகவல்கள் பெற்று உரிய நடவடிக்கை எடுக்க உதவுகிறது. மேலும், முதியோர்கள் மற்றும் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்தும், கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை சோதனை செய்தும் வருகின்றனர். இந்த திட்டத்திற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

போக்கிரிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த 1,489 போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அவர்களில் 236 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முன் தடுப்பு நடவடிக்கையாக 902 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 384 நபர்களுக்கு நன்னடத்தை பிணையம் பெறப்பட்டுள்ளது. மேலும் கெட்ட நடத்தைக்காரர்கள் 35,230 முறை தணிக்கை செய்யப்பட்டுள்ளனர்.

2025-ம் ஆண்டில் பிரச்சினை ஏற்படுத்தக்கூடிய 318 நபர்கள் மீது பிணையம் பெறும் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளிலும் 313 ஜாதி ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது.

2,475 போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது.

கணினி வழி குற்றங்கள் சம்பந்தமாக 152 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது.

1,252 போக்சோ சட்டம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பள்ளி, கல்லூரி மற்றும் பொது இடங்களில் நடத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் உரிமை கோரப்படாத 308 வாகனங்கள் (307 இரு சக்கர வாகனம், 1 நான்கு சக்கர வாகனம்) ஏலம் விடப்பட்டு ரூ.10 லட்சத்து 10 ஆயிரத்து 844 அரசு கணக்கில் செலுத்தப்பட்டது.

2025-ம் ஆண்டில் கொடுங்குற்றங்களில் பாதிக்கப்பட்ட 16 பேருக்கு ரூ.39 லட்சம் தீருதவித் தொகை வழங்குவதற்காக கருத்துருக்கள் மாவட்ட சட்ட பணிக்குழுவிற்கு அனுப்பப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story