சப்-கலெக்டராக நடித்து நகை, பணம் மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது: கார் பறிமுதல்


சப்-கலெக்டராக நடித்து நகை, பணம் மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது: கார் பறிமுதல்
x

திருநெல்வேலியில் கட்டிடம் கட்டுவதற்கு அரசு ஒப்பந்தம் வாங்கி தருவதாக கூறி ஒரு வாலிபரிடம் 17 சவரன் நகை, 8.5 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு 2 பேர் மோசடியில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அருகே கட்டுமான தொழில் செய்து வருபவர் பிரவீன் (வயது 30). இவரிடம் நக்கனேரி பகுதியைச் சேர்ந்த சத்யாதேவி(34) என்ற பெண், தன்னை சப்-கலெக்டராகவும், வடக்கன்குளத்தைச் சேர்ந்த சுரேஷை(37) மண்டல அதிகாரியாகவும் அறிமுகப்படுத்தியுள்ளனர். பின்னர் அவர்கள், கட்டிடம் கட்டுவதற்கு அரசு ஒப்பந்தம் வாங்கி தருவதாக கூறி பிரவீனிடம் 17 சவரன் நகை, 8.5 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பிரவீன், திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசனிடம் புகார் அளித்தார். அந்த புகார் மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்க எஸ்.பி. உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. விஜயகுமார் மேற்பார்வையில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னலெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். அதில் பிரவீன் என்பவர், மேற்சொன்ன நபர்களிடம் நகை மற்றும் பணம் கொடுத்து ஏமாற்றப்பட்ட விவரம் உண்மை என தெரிய வந்தது. அதன் பேரில் 18.10.2025 அன்று மாவட்ட குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் குற்றவாளிகளான சத்யாதேவி 18.10.2025 அன்றும், செல்லத்துரை 22.10.2025 அன்றும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றொரு குற்றவாளியான சுரேஷை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் சுரேஷ்(37) என்பவர் இன்று (18.11.2025) மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. விஜயகுமார் தலைமையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னலெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர், தலைமை காவலர்கள் முத்துராமலிங்கம், கலையரசன் ஆகியோர் சேர்ந்து இன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த வழக்கில் மோசடி குற்றத்திற்காக பயன்படுத்தப்பட்ட கார் ஒன்று மேற்சொன்ன குற்றவாளியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மோசடி குற்றத்தில் ஈடுபட்டு ஏமாற்றி வந்த குற்றவாளிகளை, சிறப்பாக செயல்பட்டு கைது செய்த மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினரை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.

1 More update

Next Story