கவர்னரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி; திமுகவில் பெயர் வாங்க அரங்கேற்றும் நாடகம் - அண்ணாமலை விமர்சனம்


கவர்னரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி; திமுகவில் பெயர் வாங்க அரங்கேற்றும் நாடகம் - அண்ணாமலை விமர்சனம்
x

ஆராய்ச்சி மாணவி திமுக துணைச்செயலாளரின் மனைவி என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்

சென்னை

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாநில கவர்னரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி 650 மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார். அப்போது, நாகர்கோவிலை சேர்ந்த ஆராய்ச்சி மாணவி ஜீன் ஜோசப் கவர்னர் ஆர்.என்.ரவியிடமிருந்து பட்டத்தை பெறாமல் துணை வேந்தர் சந்திரசேகரிடமிருந்து பட்டத்தை பெற்றார். இதனால் விழா மேடையில் இருந்த அனைவரையும் அதிர்ச்சியடைந்தனர்.

கவனர் ஆர்.என்.ரவியிடமிருந்து பட்டம் பெறுவதை மறுத்த ஆராய்ச்சி மாணவி ஜீன் ஜோசப், கவர்னர். ஆர்.என்.ரவி தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கு எதிராக செயல்படுவதால் அவரிடமிருந்து பட்டம் பெற விரும்பவில்லை என்றார்.

இந்நிலையில், கவர்னர் கையால் பட்டம் பெற மறுத்த ஆராய்ச்சி மாணவி திமுக துணைச்செயலாளரின் மனைவி என்றும், திமுகவில் பெயர் வாங்க அவர் அரங்கேற்றும் நாடகம் என்றும் பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், நாகர்கோவில் மாநகர திமுக துணைச்செயலாளர் ராஜன் என்ற நபரின் மனைவி ஜீன் ஜோசப் என்பவர், கவர்னர் கையால் பட்டம் பெற மாட்டேன் எனக் கூறியிருக்கிறார்.

காலகாலமாக, கட்சியில் பெயர் வாங்க, திமுகவினர் அரங்கேற்றி வரும் தரங்கெட்ட நாடகங்களுக்கு, கல்வி நிலையங்களையும் பயன்படுத்தி வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

திமுகவின் கீழ்த்தரமான அரசியலை எல்லாம், கல்வி நிலையங்களில் வைத்துக் கொள்ளக் கூடாது என, தனது கட்சியினருக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்த வேண்டும். திமுகவை பிடிக்காத மக்களே தமிழகத்தில் அதிகம். அவர்களும் இதே போன்று நடந்து கொண்டால், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தனது முகத்தை எங்கே கொண்டு வைத்துக் கொள்வார்?

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story