திருநெல்வேலி: 4 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த கொலை வழக்கு குற்றவாளி கைது


திருநெல்வேலி: 4 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த கொலை வழக்கு குற்றவாளி கைது
x

திருநெல்வேலி மாவட்டத்தில் நிலுவையில் இருந்து வரும் பிடிவாரண்டுகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவிட்டுள்ளார்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து காவல் நிலைய சரகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு முன் விரோதத்தில், அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த காளிமுத்து மகன் கணேசமூர்த்தி (வயது 32) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை செய்யப்பட்ட காலகட்டத்தில் இருந்து, அவர் தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்த நிலையில் வழக்கின் புலன் விசாரணை முடிக்கப்பட்டு, கணேசமூர்த்தி தலைமறைவாக இருந்த நிலையில் இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. நீதிமன்ற விசாரணையின் போது கணேசமூர்த்திக்கு நீதிமன்றத்தால் 10.12.2021 அன்று பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அவர் தொடர்ந்து 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் நிலுவையில் இருந்து வரும் பிடிவாரண்டுகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவிட்டு, மாவட்டம் முழுவதும் நீதிமன்றத்தால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட நபர்களின் மீது தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கணேசமூர்த்தியை கைது செய்வதற்கு பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் நேற்று, தலைமறைவு குற்றவாளியான கணேசமூர்த்தியை மதுரையில் வைத்து திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட கணேசமூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு உத்தரவுபடி பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த கணேசமூர்த்தி என்பவரை கைது செய்து பிடியாணையை நிறைவேற்றிய காவல்துறையினரை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story