சட்டசபை தேர்தலில் தனி சின்னத்தில் த.மா.கா. போட்டியிடும் - ஜி.கே.வாசன் அறிவிப்பு


சட்டசபை தேர்தலில் தனி சின்னத்தில் த.மா.கா. போட்டியிடும் - ஜி.கே.வாசன் அறிவிப்பு
x

அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் இணைந்தது.

சென்னை,

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில் அதிமுக - பாஜக கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த கூட்டணியில் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக நேற்று இணைந்தது. அதேவேளை, அதிமுக - பாஜக கூட்டணியில் பாமக (அன்புமணி ராமதாஸ் தரப்பு) இடம்பெற்றது.

இந்நிலையில், மத்திய மந்திரியும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயலை , தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று சந்தித்தார். சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நடந்த இந்த சந்திப்பின் மூலம் அதிமுக - பாஜக தேசிய ஜனநாயக கூட்டணியில் த.மா.கா. இடம்பெற்றிருப்பது உறுதியானது.

பியூஷ் கோயல் உடனான சந்திப்புக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், “வரும் சட்டசபை தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் தனிச் சின்னத்தில் போட்டியிடும். திமுகவை எதிர்க்கும் சக்திகள் ஒரே அணியில் திரள வேண்டும்” என்று கூறினார்.

முன்னதாக பியூஷ் கோயல் உடனான இந்த சந்திப்பின்போது, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகமும் உடனிருந்தார்.

இதுதொடர்பாக பியூஸ்கோயல் தனது எக்ஸ் வலைதளத்தில், “தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் மற்றும் புதிய நீதிக்கட்சி நிறுவனர் மற்றும் தலைவர் ஏ.சி.சண்முகம் அவர்களை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. தமிழக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய, ஊழல் மலிந்த தி.மு.க. அரசை தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) தொடர்ந்து அம்பலப்படுத்தும்.

தமிழர் பண்பாடு மற்றும் பெருமையை சிதைக்க முயலும் திமுகவின் முயற்சிகளைத் தடுப்பதில் எங்களது கூட்டணி ஒற்றுமையாகவும், உறுதியாகவும் உள்ளது. தமிழகத்தில் தூய்மையான, பொறுப்புமிக்க மற்றும் மக்கள் நலனை மையமாகக் கொண்ட ஆட்சியை வழங்க எங்களது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினோம்” என்று பதிவிட்டிருந்தார்.


1 More update

Next Story