பா.ஜ.க.வை பார்த்து தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு பயம் - 'தினத்தந்தி'க்கு மத்திய மந்திரி எல்.முருகன் சிறப்பு பேட்டி
பா.ஜ.க.வை பார்த்து தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு பயம் வந்துவிட்டது என்று மத்திய மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
கோவை,
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், மத்திய மந்திரியும், நீலகிரி தொகுதி பா.ஜ.க. வேட்பாளருமான எல்.முருகன் 'தினத்தந்தி'க்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு எல்.முருகன் பதில் அளித்தார்.
எல்.முருகன் 'தினத்தந்தி'க்கு அளித்த சிறப்பு பேட்டி விவரம் வருமாறு:-
கேள்வி:- நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலைக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?.
பதில்:- பச்சை தேயிலைக்கு உரிய விலை கிடைக்க தேயிலை விவசாயிகள் மற்றும் தேயிலை உற்பத்தியாளர்களை அழைத்துச்சென்று 2 முறை மத்திய மந்திரி பியூஸ்கோயலை சந்தித்து வலியுறுத்தப்பட்டது. அதன் விளைவாக அமுல் நிறுவனம் நீலகிரியில், நீலகிரிஸ் டீ என்ற பெயரில் நிறுவனத்தை தொடங்க உள்ளனர். அப்படி தொடங்கும்போது அவர்கள் உள்ளூர் தேயிலை விவசாயிகள், உற்பத்தியாளர்களிடம் இருந்து அதிக விலைக்கு பச்சைத்தேயிலையை வாங்குவார்கள்.
சர்வதேச சுற்றுலா மையம்
கேள்வி:- சுற்றுலா மையமான நீலகிரி மாவட்டத்தை மேம்படுத்த திட்டம் உள்ளதா?
பதில்:- மோடி பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் 'சூட்டிங் இந்தியா' என்ற திட்டத்தை அறிவித்து வெளிநாடு களில் இருந்து இங்கு சினிமா படங்கள் எடுக்க வருபவர்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் மினி சுவிட்சர்லாந்து போன்ற காலநிலை இருக்கிறது. எனவே இதனை சர்வதேச சுற்றுலா மையமாக மாற்ற அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். சர்வதேச சுற்றுலா மையமாக மாற்ற 'பார்க்கிங்' வசதி, அதிவேகமாக சென்று சேரக்கூடிய சாலை வசதி மற்றும் பல்வேறு கட்டமைப்பு வசதிகளை செய்ய வேண்டும். இதற்காக மலைகளை குடைந்து சுரங்கப்பாதை, பாலம் அமைக்கப்படும்.
ரூ.11 லட்சம் கோடி நிதி
கேள்வி:- பா.ஜ.க. அரசு 10 ஆண்டாக தமிழகத்துக்கு எதையுமே செய்யவில்லை என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளாரே?.
பதில்: கடந்த 10 ஆண்டாக மத்திய அரசு பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக ரூ.11 லட்சம் கோடி கொடுத்து இருக்கிறது. குறிப்பாக சென்னை-பெங்களூரு ஹைவே சாலை, மதுரவாயல்- சென்னை துறைமுக சாலை, சென்னை விமான நிலைய விரிவாக்கம், கோவை, மதுரை விமான நிலைய விரிவாக்கம், அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம், ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் குழாய் இணைப்பு, 1 கோடியே 20 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு மாதந்தோறும் 5 கிலோ அரிசி மற்றும் ஒரு கிலோ பருப்பு இலவசம், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு என்று பல்வேறு திட்டங்கள் மூலம் நிதி வழங்கப்பட்டு உள்ளது. இதை எல்லாம் தமிழ்நாடு அரசு ஸ்டிக்கர் ஒட்டி மறைத்து வருகிறது.
நான் வகித்து வரும் மீனவர் துறையில்கூட மீனவர்களின் மேம்பாட்டுக்காக ரூ.2 ஆயிரம் கோடி வழங்கப்பட்டு இருக்கிறது. காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்த ரூ.1,800 கோடி கொடுத்து உள்ளோம். குறிப்பாக ரெயில்வேக்கு மட்டும் ரூ.6 ஆயிரம் கோடி வழங்கி இருக்கிறோம். அம்ரித் திட்டத்தின் கீழ் கோவை, போத்தனூர், மேட்டுப்பாளையம், காட்பாடி, சேலம், மதுரை, கன்னியாகுமரி, ராமேசுவரம், எழும்பூர் உள்பட பல்வேறு ரெயில்நிலையங்களை சர்வதேச தரத்தில் மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. 9 புதிய ரெயில்பாதை திட்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. அதை எல்லாம் தி.மு.க. அரசு மறைத்து விட்டது.
நிவாரண நிதி வழங்குவதற்கு முன் தேர்தல் வந்துவிட்டது
கேள்வி:- சென்னை, தென் மாவட்டத்தில் ஏற்பட்ட புயல் சேதத்துக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்கவில்லை என தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க. கூறி வருகிறதே?
பதில்: சென்னை புயலுக்கு ரூ.500 கோடியும், நெல்லையில் ஏற்பட்ட புயல் சேதத்துக்கு ரூ.500 கோடியும் வழங்கப்பட்டது. சேத மதிப்பை கணக்கிட மத்திய குழுவும் வந்து பார்த்துவிட்டு சென்றுள்ளது. ஆனால் அதற்கான நிவாரண நிதி வழங்குவதற்கு முன்பு தேர்தல் வந்துவிட்டது. எனவே தேர்தல் முடிந்ததும் கண்டிப்பாக நிவாரண நிதி வழங்கப்படும்.
பா.ஜ.க.வை பார்த்து தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு பயம்
கேள்வி: சமீபத்தில் வெளிவந்த கருத்துக்கணிப்பில் தமிழகத்தில் 37 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளதே?
பதில்: இந்த தேர்தல் தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். தமிழ்நாட்டில் இந்த முறைதான் மும்முனை போட்டி நிலவுகிறது. இதற்கு முன்பு தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் பா.ஜ.க. குறித்து பேசியது கிடையாது. இந்த முறை பா.ஜ.க.வை பற்றியே பேசுகின்றனர். பா.ஜ.க.வை பார்த்து அவர்களுக்கு பயம் வந்து விட்டது.
தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெறும். இளைஞர்கள், புதிதாக வாக்களிப்பவர்கள் அனைவருமே பா.ஜ.க.வுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். தி.மு.க., அ.தி.மு.க. இடையே ரகசிய கூட்டணி உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலுக்குள் இந்த 2 கட்சிகளும் இணைந்துவிடும்.
கச்சத்தீவு
கேள்வி: கச்சத்தீவு விவகாரத்தில் தேர்தல் ஆதாயத்துக்காக பா.ஜ.க. அது பற்றி பேசி வருவதாக தி.மு.க., அ.தி.மு.க. மாறி, மாறி குற்றம் சாட்டுவது குறித்து...
பதில்: பா.ஜ.க. எப்போதுமே தேர்தலை மனதில் வைத்து அரசியல் செய்வதில்லை. கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்ததால் 2004-ல் இருந்து 2014-ம் ஆண்டு வரை 680-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளனர்.
2014-க்கு பிறகு பா.ஜ.க. ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் அந்த சம்பவம் நடக்கவில்லை. தற்போது கச்சத்தீவு குறித்து வெளி உலகத்துக்கு சொல்லி உள்ளோம். விரைவில் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.