ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது - சென்னை ஐகோர்ட்டு


ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது -    சென்னை ஐகோர்ட்டு
x
தினத்தந்தி 27 March 2024 10:16 AM GMT (Updated: 27 March 2024 10:26 AM GMT)

ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறது. திருச்சி தொகுதி ம.தி.மு.க. வேட்பாளராக துரைவைகோ களமிறங்கியுள்ளார்.

இதனிடையே, தனக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கக்கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ விண்ணப்பித்தார். ஆனால், பம்பரம் சின்னம் ஒதுக்கும்படி ம.தி.மு.க. வேட்பாளர் விண்ணப்பித்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் பரிசீலிக்கவில்லை.

இதையடுத்து, தங்களுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி ம.தி.மு.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதனிடையே, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால், பம்பரம் சின்னத்தை ஒதுக்கமுடியாது என்று ம.தி.மு.க.வுக்கு மின்னஞ்சல் மூலம் தேர்தல் ஆணையம் இன்று பதில் அளித்துள்ளது. மேலும், ஒரு கட்சிக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட சின்னத்தை ஒரு தொகுதிக்காக பொதுசின்னமாக அறிவிப்பது தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இந்நிலையில், பம்பரம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்க உத்தரவிடக்கோரி ம.தி.மு.க. தாக்கல் செய்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, குறைந்தது 2 தொகுதியில் போட்டியிடாததால் பம்பர சின்னத்தை ம.தி.மு.க.வுக்கு ஒதுக்க முடியாது என இந்திய தேர்தல் ஆணையம் கூறியதை ஏற்கிறோம் என சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்தது.

மேலும், நாடாளுமன்ற தேர்தலில் ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடமுடியாது என்று கூறிய சென்னை ஐகோர்ட்டு ம.தி.மு.க. தொடர்ந்த வழக்கையும் தள்ளுபடி செய்தது.


Next Story