அச்சுறுத்தும் புதிய ஜே.என்.1 கொரோனா.. இந்தியாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,669 ஆக உயர்வு


அச்சுறுத்தும் புதிய ஜே.என்.1 கொரோனா.. இந்தியாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,669 ஆக உயர்வு
x
தினத்தந்தி 21 Dec 2023 6:05 AM GMT (Updated: 21 Dec 2023 8:23 AM GMT)

பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் விகிதம் 98.81 சதவீதமாக உள்ளது என சுகாதார அமைச்சகத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கேரளாவில் புதிய வகை கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 358 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் கேரளாவில் கொரோனா தொற்றால் 3 பேர் உயிரிழந்த நிலையில், இறப்பு எண்ணிக்கை 5,33,327 ஆக பதிவாகியுள்ளது.

இதேபோல், கேரளா, கர்நாடகா, குஜராத், தமிழ்நாடு மற்றும் மராட்டியம் ஆகிய மாநிலங்களில் புதிய வகை கொரோனா தொற்று பதிவாகியுள்ளன. இதனை தொடர்ந்து நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,44,70,576 ஆக அதிகரித்துள்ளது மற்றும் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் விகிதம் 98.81 சதவீதமாக உள்ளது என சுகாதார அமைச்சகத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதை அடுத்து மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் முன்னேற்பாடுகள் குறித்து சுகாதார துறை மந்திரி மன்சுக் மாண்டவியா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில் புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பது அவசியம் ஆகும். ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மத்திய மற்றும் மாநில அளவில் முறையான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். மேலும் கொரோனா இன்னும் நிறைவுபெறாத நிலையில், அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள், அறிகுறிகள் மற்றும் அதன் தீவிரம் குறித்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம் ஆகும். கொரோனா பாதிப்பு தொடர்பாக மாநில அரசுகள் விழிப்புடன் இருப்பது அவசியம் ஆகும் என்று மத்திய மந்திரி மாண்டவியா தெரிவித்தார்.


Next Story