கோவை பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை மீது போலீசார் வழக்குப்பதிவு - காரணம் என்ன?


கோவை பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை மீது போலீசார் வழக்குப்பதிவு - காரணம் என்ன?
x
தினத்தந்தி 12 April 2024 8:17 AM GMT (Updated: 12 April 2024 8:19 AM GMT)

கோவையில் நேற்று அண்ணாமலை பிரசாரத்தின் போது தி.மு.க. - பா.ஜ.க. இடையே மோதல் ஏற்பட்டது.

கோவை,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று இரவு கோவை ஆவாரம்பாளையத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தேர்தல் விதியை மீறி 10 மணிக்கு மேல் அண்ணாமலை பிரசாரம் செய்ததாக கூறப்படுகிறது. இதையறிந்து அந்த பகுதிக்கு தி.மு.க.வை சேர்ந்தவர்கள் சென்றனர். அங்கு பா.ஜ.கவினரிடம் 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்யக்கூடாது என்று தி.மு.க.வினர் கூறினர். அப்போது தி.மு.க.வினருக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டு கைகலப்பானது.

இந்த மோதலில் தி.மு.க.வை சேர்ந்த 7 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை அங்கு இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேர்தல் நடத்தை விதியை மீறி அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டது மற்றும் தாக்குதலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், பா.ஜ.க. மாநில தலைவரும், கோவை தொகுதி வேட்பாளரான அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறிய புகாரின் அடிப்படையில் அவர் மீது பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் விவகாரத்தில் ஏற்கனவே பா.ஜ.க.வினர் 4 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது அண்ணாமலை மீது விதிமீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story