கடலூரில் இடி தாக்கி இறந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம்: ராமதாஸ் கோரிக்கை

கடலூரில் திடீரென இடி மின்னல் தாக்கியதில், விவசாய நிலத்திலேயே உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கிய நிலையில், கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் நேற்று மாலை திடீரென இடி மின்னல் தாக்கியது. இதில் வேப்பூர் அருகிலுள்ள அரியநாச்சி கிராமத்தில், மக்காச்சோள வயலில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அரியநாச்சியை சேர்ந்த ராஜேஸ்வரி (வயது 40), கழுதூரைச் சேர்ந்த விவசாய தொழிலாளர்களான கனிதா(35), பாரிஜாதம்(40), சின்னப்பொண்ணு(எ) ராஜேஸ்வரி(41) ஆகிய 4 பேர் திடீரென இடி மின்னல் தாக்கியதில், விவசாய நிலத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நிலையில், இறந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதி அறிவித்துள்ளது போதுமானதல்ல. மேலும் கள்ளச்சாராயம் குடித்து மரணமடைந்தவர்கள் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய், அரசியல் கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்டு இறந்தவர்களுக்கும் 10 லட்சம் ரூபாய் என நிவாரண நிதியை அரசு வழங்குகின்ற நிலையில், விவசாய பணியின் போதே இறந்த நால்வருமே நடுத்தர வயதுடைய குடும்பத் தலைவிகள் என்பதால் அவர்களை நம்பித்தான் குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் உள்ளது என்பதாலும், விவசாய தொழிலாளர்களுக்கு பெரிய அளவில் சொத்துக்களோ, நிரந்தர வருவாயோ இல்லை என்பதாலும் இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் ரூபாய் நிவாரண நிதியும், குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






