வடசென்னையில் வேட்புமனு தாக்கலின்போது தி.மு.க. - அ.தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம்


வடசென்னையில் வேட்புமனு தாக்கலின்போது தி.மு.க. - அ.தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம்
x
தினத்தந்தி 25 March 2024 9:34 AM GMT (Updated: 25 March 2024 9:38 AM GMT)

வடசென்னையில் வேட்புமனு தாக்கலின்போது தி.மு.க. - அ.தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

சென்னை,

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் களம் பரபரப்படைந்துள்ளது. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, தேர்தல் வேட்புமனு தாக்கல் 20ம் தேதி தொடங்கிய நிலையில் பல்வேறு கட்சியினர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

அந்த வகையில் வடசென்னையில் தி.மு.க. வேட்பாளராக கலாநிதி வீராசாமியும், அ.தி.மு.க. வேட்பாளராக ராயபுரம் மனோவும் களமிறங்கியுள்ளனர். நாம் தமிழர் வேட்பாளராக அமுதினியும், பா.ஜ.க. வேட்பாளராக பால் கனகராஜும் களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில், வடசென்னை தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய ராயபுரம் மண்டல அலுவலகத்தில் இன்று ஒரேநேரத்தில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. வேட்பாளர்கள் வந்தனர். முதலில் அ.தி.மு.க. வேட்பாளர் வந்துள்ளார். அ.தி.மு.க. வேட்பாளர் மனோவுடன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் வந்துள்ளனர். தி.மு.க. வேட்பாளர் கலாநிதி வீராசாமியுடன் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் வந்துள்ளனர்.

அப்போது, முதலில் யார் வேட்புமனு தாக்கல் செய்வது என்பதில் அ.தி.மு.க. - தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும், அமைச்சர் சேகர்பாபுவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். முதலில் தாங்கள்தான் வந்தோம் என்று இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மண்டல தேர்தல் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இரு கட்சியினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இறுதியில், அ.தி.மு.க. வேட்பாளர் முதலில் வேட்புமனு தாக்கல் செய்ய தேர்தல் அதிகாரி அனுமதித்தார். இதையடுத்து, அ.தி.மு.க. வேட்பாளர் மனோ வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதன்பின்னர், தி.மு.க. வேட்பாளர் கலாநிதி வீராசாமி வேட்புமனுவை தாக்கல் செய்தார். அ.தி.மு.க - தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த பா.ஜ.க. வேட்பாளர் பால் கனகராஜ் நீண்ட நேரம் அலுவலகத்திற்கு வெளியே காத்திருந்தார். இதையடுத்து, பா.ஜ.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், அ.தி.மு.க., தி.மு.க. வேப்டாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தபின்னர் பா.ஜ.க. வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த சம்பவத்தால் ராயபுரம் மண்டல அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story