கோவையில் தி.மு.க.-பா.ஜ.க. இடையே மோதல் - தி.மு.க. வேட்பாளர் விளக்கம்


கோவையில் தி.மு.க.-பா.ஜ.க. இடையே மோதல் - தி.மு.க. வேட்பாளர் விளக்கம்
x
தினத்தந்தி 12 April 2024 5:44 AM GMT (Updated: 12 April 2024 10:11 AM GMT)

தேர்தல் பிரசாரத்தின்போது தி.மு.க. - பா.ஜ.க. இடையே மோதல் ஏற்பட்டது.

கோவை,

கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று இரவு அவருக்கு ஆதரவாக ஆவாரம்பாளையத்தில் பா.ஜ.க.வினர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். தேர்தல் விதியை மீறி 10 மணிக்கு மேல் பா.ஜ.க.வினர் பிரசாரம் செய்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்ததும் அந்த பகுதிக்கு தி.மு.க.வை சேர்ந்தவர்கள் சென்றனர். அங்கு பா.ஜ.கவினரிடம் 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்யக்கூடாது என்று தி.மு.க.வினர் கூறினர். அப்போது தி.மு.க.வினருக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டு கைகலப்பானது.

இந்த மோதலில் தி.மு.க.வை சேர்ந்த 7 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை அங்கு இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பீளமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், இந்த மோதல் விவகாரம் குறித்து தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

இரவு 10.40 மணிக்கு பிரசாரம் செய்துள்ளனர்; இது நியாயமா?. அண்ணாமலையுடன் வந்த ரவுடிகள் பின்னால் இருந்து தி.மு.க.வினரை தாக்கியுள்ளனர். எங்கள் புகாரின் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. சட்ட விதிகளை மீறி செயல்பட்ட பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். தேர்தல் ஆணையம் ஒருதலை பட்சமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

தோல்வி பயத்தில் வன்முறையை தூண்டுகிறது பா.ஜ.க.. வெளி மாநிலங்களில் இருந்து ஆட்களை அழைத்து வந்து, பிரசாரம் செய்கின்றோம் என்ற பெயரில் ஊடுருவ வைத்திருக்கிறார்கள். கோவையில் எந்த நேரத்திலும் கலவரத்தை உண்டாக்கிவிடுவார்களோ என்ற ஐயம் எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது

பள்ளி, கல்லூரி மாணவர்களை பிரசாரத்தில் ஈடுபடுத்துகிறார்கள். இதற்கான ஆதாரம் இருக்கின்றது.தோல்வி பயத்தினால் வேறு ஏதேனும் இடையூறு செய்ய திட்டமிட்டுள்ளார்களா என்று கேள்வி எழுந்திருக்கிறது. கோவை அமைதி விரும்பும் நகரம். சத்தமாக பேசினால்கூட மக்களுக்கு பிடிக்காது. ரவுடிசம் இங்கு எடுபடாது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story