பாஜக, திமுகவை தாண்டி அதிமுகவையும் விமர்சிக்கும் விஜய் - காரணம் என்ன?


பாஜக, திமுகவை தாண்டி அதிமுகவையும் விமர்சிக்கும் விஜய் - காரணம் என்ன?
x
தினத்தந்தி 27 Sept 2025 5:57 PM IST (Updated: 27 Sept 2025 6:09 PM IST)
t-max-icont-min-icon

தமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களையும் சந்தித்து வருகிறார்.

சென்னை,

தமிழக அரசியல் களத்தில் திரைத்துறையினர் கால் பதிப்பது ஒன்றும் புதிதல்ல. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, சிவாஜிகணேசன், கமல்ஹாசன், டி.ராஜேந்தர், சீமான் என்று எத்தனையோ பேர் வந்திருக்கிறார்கள். மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கும் திரைத்துறையுடன் தொடர்பு உண்டு. இப்போது, அந்த வரிசையில் நடிகர் விஜய்யும் அரசியலில் நுழைந்துள்ளார்.

மற்ற நடிகர்கள் எல்லாம் திரைத்துறையில் மார்க்கெட் சரியத் தொடங்கியபோது அரசியலில் நுழைந்தார்கள். ஆனால், நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கும் போதே தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை தொடங்கி அரசியலில் நுழைந்துள்ளார்.

அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் முதன்முறையாக தமிழக வெற்றிக் கழகம் களம் காண உள்ள நிலையில், தற்போது அக்கட்சியின் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களையும் சந்தித்து வருகிறார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், விக்கிரவாண்டியில் நடத்திய கட்சியின் முதல் மாநாட்டிலேயே, எங்களுடன் கூட்டணி அமைப்பவர்களுக்கு ஆட்சியில் பங்குதரப்படும் என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இது ஆளும் கட்சிக்கும் (திமுக), ஆண்ட கட்சிக்கும் (அதிமுக) பயத்தை ஏற்படுத்தியது.

தற்போது, தமிழகத்தில் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கியுள்ள விஜய், மத்தியில் ஆளும் பாஜகவையும், மாநிலத்தில் ஆளும் திமுகவையும் கடுமையாக எதிர்த்து கருத்து தெரிவித்து வருகிறார். பிரதமர் நரேந்திர மோடியையும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக வசைபாடி வருகிறார். என்றாலும், அவரை விமர்சிக்க திமுகவில் அமைச்சர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

காரணம், விஜய்க்கு எதிராக அமைச்சர்கள் கருத்து தெரிவிக்கும்போது வெவ்வேறு காரணங்களை கூறிவருகின்றனர். இதனால், அதிருப்தி அடைந்த திமுக தலைமை அமைச்சர்கள் யாரையும் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று கூறிவிட்டு, அப்படி ஏதாவது பதில் சொல்ல வேண்டி வந்தால், கட்சி தலைமையில் இருந்து கருத்து தெரிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி வெளியேறி, விஜய்யுடன் கூட்டணி அமைக்க இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. அதை நிரூபிக்கும் வகையில் விஜய்யின் பேச்சிலும் மாற்றத்தை காண முடிகிறது.

ஆரம்பத்தில், பாஜக, திமுகவை விமர்சனம் செய்து வந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இன்றை நாமக்கல் கூட்டத்தில் அதிமுகவையும் கடுமையாக விமர்சித்துள்ளார். அதிமுக - பாஜகவை பொருந்தாத கூட்டணி என்று கூறிய அவர் எம்.ஜி.ஆரின் தொண்டர்கள் இதை ஏற்க மாட்டார்கள் என்றும் கூறினார். அதற்கும் மேலாக, திமுகவும், பாஜகவும் வெளியே சண்டை போடுவது போல் காட்டிக் கொண்டாலும், இரு கட்சிகளுக்கும் இடையே ரகசிய கூட்டணி இருப்பதாக தெரிவித்தார்.

1 More update

Next Story