அவசரகால கொள்முதல் விதிகளை செயல்படுத்த அனைத்து மாநிலங்களுக்கும் உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது. பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் செய்ய வேண்டிய கொள்முதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி பெற அவசியம் இல்லை. மருந்துகள், உணவு தானியங்கள் உள்ளிட்ட அனைத்து கொள்முதல்களும் இதில் அடங்கும் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவ பலத்தை அதிகரிக்க ராணுவ தளபதிக்கு கூடுதல் அதிகாரம் அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ராணுவத்துக்கு பணியாளர்களை சேர்க்கவும், நிதி ஒதுக்கீடு செய்வதற்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் பிற பகுதிகளில் உள்ள வீரர்களை எல்லையோர பகுதிக்கு அழைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
போர் பதற்றம் உள்ள நிலையில் மருத்துவ கையிருப்புகள் குறித்து மத்திய மந்திரி ஜெ.பி. நட்டா மருத்துவ கட்டமைப்புகள் தயார் நிலையில் உள்ளனவா என அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
பாகிஸ்தானுக்கு எதிரான சண்டையில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம்
நேற்று பாகிஸ்தான் நடத்திய தாக்குதலின்போது, ஆந்திர பிரதேச மாநிலம் சத்யசாய் மாவட்டத்தை சேர்ந்த எல்லை பாதுகாப்புப்படை வீரர் முரளி நாயக் என்பவர் வீர மரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் நேற்று நடந்திருக்கலாம் என்றும், அவரின் உடல் நாளை அவரது சொந்த கிராமத்திற்கு எடுத்து செல்லப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
பாதுகாப்புப் படையின் நடவடிக்கைகளை நேரலையாக தெரிவிக்க வேண்டாம் - பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தல்
இந்தியா - பாக். இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் பாதுகாப்புப் படையின் நடவடிக்கைகளை நேரலையாக தெரிவிக்க வேண்டாம் என்று ஊடகங்கள், டிஜிட்டல் தளங்கள் மற்றும் தனிநபர்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
போர் பதற்றம்.. பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் எதிர்கொள்ள தயாராகும் டெல்லி
போர் பதற்றம் ஏற்பட்டுள்ளநிலையில், பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் எதிர்கொள்ள தலைநகர் டெல்லி தயாராகி வருகிறது.
இதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) பகல் 3 மணிக்கு டெல்லி பொதுப்பணித்துறை அலுவலகங்களில் அபாய ஒலி எழுப்பி ஒத்திகை நடைபெற உள்ளது.
முப்படை தளபதிகளுடனான ராஜ்நாத் சிங்கின் சந்திப்பு 2 மணி நேரத்திற்குப் பிறகு தற்போது முடிவடைந்துள்ளது.
இந்த கூட்டத்தில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்குடன் பாதுகாப்புத் துறைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான், ராணுவத் தலைமைத் தலைவர் ஜெனரல் உபேந்திர திவேதி, கடற்படைத் தலைமை தலைவர் அட்மிரல் தினேஷ் திரிபாதி, விமானப் படைத் தலைவர் ஏர் சீப் மார்ஷல் அமர் ப்ரீத் சிங், பாதுகாப்புச் செயலாளர் ஆர்.கே. சிங் உள்ளிட்ட ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம்; ஐ.பி.எல். நடப்பு சீசன் நிறுத்திவைப்பு
போர் பதற்றம் நிலவி வருவதால் ஐ.பி.எல். தொடரை தொடர்ந்து நடத்தலாமா? வேண்டாமா? என்பது குறித்து முடிவு செய்ய பி.சி.சி.ஐ இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், இது தொடர்பான கூட்டம் தற்போது நடைபெற்றதாகவும், அந்த கூட்டத்தில் ஐ.பி.எல். நடப்பு சீசனை நிறுத்தி வைக்க முடிவு எடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இருக்காது - இந்தியன் ஆயில் நிறுவனம்
போர் பதற்றம் எழுந்துள்ளநிலையில், நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இருக்காது என்று இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி போதுமான விநியோகம் உள்ளதால் நாடு முழுவதும் போதிய அளவுக்கு எரிபொருள் கையிருப்பு உள்ளது என்றும், பீதியில் பெட்ரோல், டீசலை தேவைக்கு அதிகமாக வாங்கி இருப்பு வைக்க வேண்டாம் என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் ஏவுகணை தாக்குதல்.. ராணுவ நடவடிக்கைகளை இரவு முழுவதும் கண்காணித்த பிரதமர் மோடி
பாகிஸ்தானின் டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை இரவு முழுவதும் பிரதமர் மோடி உன்னிப்பாகக் கண்காணித்தார்.
ஒவ்வொரு முன்னேற்றம் குறித்தும் அவருக்குத் தொடர்ந்து தகவல் கொடுக்கப்பட்டது.
பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் பாதுகாப்புப் படைத் தலைவர் (CDS) அனில் சவுகான் ஆகியோர் நிலைமை குறித்து அவருக்கு விளக்கினர். பின்னர் பிரதமர் மோடி அதற்கு தேவையான உத்தரவுகளை பிறப்பித்தார்.