இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம்: தற்போதைய நிகழ்வுகள் கவலை அளிக்கிறது - சீனா
இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் குறித்து, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் கூறியதாவது:-
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான தற்போதைய நிலைமை குறித்து நேற்று சீனாவின் நிலைப்பாட்டை நாங்கள் பகிர்ந்து கொண்டோம். தற்போதைய நிகழ்வுகள் குறித்து சீனா கவலை கொண்டுள்ளது. இந்தியாவும், பாகிஸ்தானும் எப்போதும் ஒருவருக்கொருவர் அண்டை நாடுகளாகவே இருக்கும். அவர்கள் இருவரும் சீனாவின் அண்டை நாடுகளும் கூட.
சீனா அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் எதிர்க்கிறது. அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையின் பரந்த நலனுக்காக செயல்படவும், ஐ.நா. சாசனம் உட்பட சர்வதேச சட்டத்தைக் கடைப்பிடிக்கவும், அமைதியாக இருக்கவும், நிதானத்தைக் கடைப்பிடிக்கவும், நிலைமையை மேலும் சிக்கலாக்கும் நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர்க்கவும் இரு தரப்பினரும் கேட்டுக்கொள்கிறோம்.
தற்போதைய பதட்டங்களைத் தணிப்பதில் ஆக்கபூர்வமான பங்கை வகிக்க சர்வதேச சமூகத்தின் மற்ற நாடுகளுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்
பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்த இந்தியா.. S-400 வான் பாதுகாப்பு அமைப்பின் வல்லமை
ஜம்முவில் நேற்று இரவு (மே 8ம் தேதி) பாகிஸ்தான் ராணுவத்தினர் டிரோன் தாக்குதல் நடத்தியநிலையில், இந்திய ராணுவத்தினர் இதனை 'S-400 சுதர்சன் சக்ரா' என்ற ஏவுகணை மூலம் தடுத்து நிறுத்தினர். ஆசியா கண்டத்தில் இந்தியாவிடம் மட்டுமே S-400 வான் பாதுகாப்பு அமைப்பு உள்ளது.
ஜம்முவில் இருந்து டெல்லிக்கு சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே முடிவு
ஜம்மு காஷ்மீரிலும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு பாகிஸ்தான் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயராக உள்ளனர்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
பாகிஸ்தான் அத்துமீறலால் தற்போது ஸ்ரீநகர் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதற்கிடையே, ஜம்முவில் இருந்து டெல்லிக்கு சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
காஷ்மீரில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் - அரசு தகவல்
ஜம்மு காஷ்மீரில் பதற்றம் நிலவி வரும் சூழலில், கல்வி பயில காஷ்மீருக்கு சென்றுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதன்படி தமிழ்நாட்டை சேர்ந்த 41 மாணவர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் அதிகாரிகள் அவர்களுடன் தொடர்பில் இருக்கின்றனர் என்றும், மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லை பகுதியில் பதற்றம்.. சம்பாவில் 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்
ஜம்முவின் சம்பா மாவட்டத்தில், சர்வதேச எல்லையில் ஒரு பெரிய ஊடுருவல் முயற்சியை எல்லைப் பாதுகாப்புப் படையினர் (BSF) முறியடித்துள்ளனர். இதன்படி சம்பா பகுதியில் ஊடுருவல் முயற்சியை முறியடித்தபோது ஏழு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் கொன்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாக். - ராஜஸ்தான் எல்லையில் பதற்றம்: ரெயில் சேவையில் மாற்றம்
ராஜஸ்தானின் பகத் கி கோத்தி -பார்மர், பார்மர் - முனாபாவ் ரெயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. மேலும் ஜோத்பூர் -தாதர், ஜோத்பூர் - வாரணாசி எக்ஸ்பிரஸ் ஜோத்பூரில் இருந்து காலை 8.25 மணிக்குப் பதிலாக காலை 11.25 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் 3 மணி நேரம் தாமதமாக இயக்கப்படுகிறது.
போர் பதற்றம் எதிரொலி.. பாதுகாப்பு வளையத்திற்குள் தலைநகர் டெல்லி
போர் பதற்றம் எதிரொலியாக, தலைநகர் டெல்லி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி டெல்லி நகரின் வரலாற்று நினைவுச்சின்னங்களை சுற்றி போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.
செங்கோட்டை மற்றும் குதுப் மினார் போன்ற அடையாளச் சின்னங்களுக்கு அருகில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்தப் பகுதிகளில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் பாதுகாப்பு மேம்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சண்டிகரில் எச்சரிக்கை ஒலி: மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தல்
எல்லையோர மாநிலங்களில் இன்று உச்ச கட்ட அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது சண்டிகரில் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டுள்ளது. சண்டிகரில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து இந்த எச்சரிக்கை ஒலி விடுக்கபட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்குள் இருக்க வேண்டும் என்றும் பால்கனியில் நிற்க கூடாது என்றும் விமானப்படை மையம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எல்லையில் பதற்றம்.. ராஜஸ்தான் முழுவதும் தனியார் டிரோன்கள் பறக்கத்தடை
எல்லையில் பதற்றம் எழுந்துள்ளநிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாரில் உள்ள ஒரு ஓட்டல் வளாகத்தில், தாக்குதலுக்குள்ளான பாகிஸ்தானிய டிரோன் குப்பைகள் கண்டெடுக்கப்பட்டன
இதனைத்தொடர்ந்து ராஜஸ்தான் முழுவதும் எந்தவொரு தனியார் டிரோன்களையும் பறக்கவிடுவதற்கு முழுமையான தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.