ப்ளாஷ்பேக் 2025: தமிழ்நாட்டில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள் விரிவான அலசல்


ப்ளாஷ்பேக் 2025: தமிழ்நாட்டில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள் விரிவான அலசல்
x
தினத்தந்தி 22 Dec 2025 7:00 AM IST (Updated: 22 Dec 2025 7:00 AM IST)
t-max-icont-min-icon

2025-ம் ஆண்டு நடைபெற்ற அரசியல் உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

தமிழ்நாடு: 2025

ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமாக இருக்கும். அந்த வகையில் தமிழகத்தில் இந்த 2025ம் வருடத்தில் நடந்த பல்வேறு மறக்க முடியாத நிகழ்வுகளும், பல முக்கிய சம்பவங்களும் நடந்துள்ளது.

அந்த வகையில் (இயற்கை சீற்றங்கள், கூட்டநெரிசல் மரணம்) போன்றவை மக்கள் மனதில் நீங்காத காயத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த 2025-ம் ஆண்டு நடைபெற்ற அரசியல் உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகளை தற்போது பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் பரபரப்பாக நிகழ்ந்த சில நிகழ்வுகள்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கூடிய சட்டசபை

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் ஜனவரி 6-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற கவர்னர் ஆர்.என்.ரவி, தனது உரையை வாசிக்காமல் அவையை விட்டு வெளியே சென்றார். பின்னர் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் 4 நாட்கள் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து மார்ச் 14-ந் தேதி சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆனது. அதைத்தொடர்ந்து, மார்ச் 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை இரு பட்ஜெட்டுகள் மீதான பொது விவாதம் நடைபெற்றது.

அதன்பின்னர் மார்ச் 24-ந் தேதி முதல் ஏப்ரல் 29-ந் தேதி வரை துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. மொத்தம் 55 துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று முடிந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் சட்டசபை கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

இந்தநிலையில் 6 மாத கால இடைவெளியில் சட்டசபை மீண்டும் கூட்டப்பட வேண்டும் என்ற அவை விதியின் அடிப்படையில், தமிழக சட்ட சபை அக்டோபர் 14-ந் தேதி கூடியது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நடைபெற்ற அந்த கூட்டத்தொடரில் புதிய அறிவிப்புகள் வெளியானது.

தமிழக சட்டசபை - தேசிய கீதம் சர்ச்சை - வெளியேறிய கவர்னர்

புத்தாண்டில், தமிழக சட்டசபையின் ஆண்டு முதல் கூட்டத்தில், கவர்னர் தன் உரையை வாசிப்பது வழக்கம். அந்த வகையில் கடந்த ஜனவரி 6-ந்தேதி நடந்த சட்டசபை கூட்டத்தின்போது கவர்னர் ஆர்.என். ரவி, அவை தொடங்கிய 3 நிமிடத்திலேயே, தமிழக அரசின் உரையை வாசிக்காமல் புறப்பட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேசிய கீதத்தை அவமதித்ததாகக் கூறி, தன் உரையை முழுமையாக வாசிக்காமல், பாதியிலேயே கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேறினார். இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கவர்னர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், நாட்டின் தேசிய கீதத்தை மதிப்பது என்பது நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள முதல் அடிப்படை கடமை. அனைத்து மாநில சட்டசபைகளிலும் கவர்னர் உரையின் தொடக்கம், முடிவில் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. தமிழக சட்டசபையில் மீண்டும் நாட்டின் அரசியலமைப்பு, தேசிய கீதம் அவமதிக்கப்பட்டது.

சட்டசபைக்குள் கவர்னர் ஆர்.என்.ரவி சென்றநிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது. தேசிய கீதத்தை பாட சபாநாயகர், முதல்-அமைச்சருக்கு கவர்னர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தும் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். கவர்னர் உருக்கமான வேண்டுகோள் விடுத்தும் அதனை மறுப்பது மிகவும் கவலைக்குரிய விஷயம். அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்துக்கு அவமரியாதை ஏற்பட்டதால் அவையிலிருந்து கவர்னர் வெளியேறினார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சில நிமிடங்களில் அந்த பதிவை கவர்னர் மாளிகை நீக்கியது. அதன்பிறகு, மீண்டும் சில திருத்தங்களுடன் அந்தப் பதிவு மீண்டும் எக்ஸ் தளத்தில் போடப்பட்டது. இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டை போல, இந்த முறையும் கவர்னர் சட்டசபையில் இருந்து பாதியில் வெளியேறிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேச்சுப் பொருளானது.

டங்ஸ்டன் சுரங்க திட்டம்: கடும் எதிர்ப்பு தெரிவித்த மக்கள் - ரத்து செய்த மத்திய அரசு

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த திட்டத்தை முழுமையாக ரத்துசெய்ய வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக ரத்துசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதுதொடர்பாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் பொதுச்செயலாளர் ராம.சீனிவாசன் மற்றும் சுரங்கம் அமைய இருந்த பகுதியைச் சேர்ந்த 7 பேர் கொண்ட விவசாயிகள் குழு டெல்லியில் மத்திய சுரங்கத்துறை மந்திரி கிஷன் ரெட்டியை அவரது அமைச்சகத்தில் சந்தித்து பேசினார்கள். அப்போது, தமிழ்நாட்டில் டங்ஸ்டன் திட்டம் கைவிடப்படுவது குறித்த உத்தரவாதத்தை மந்திரி அளித்ததாக கூறப்பட்டது. இதனைத்தொடர்ந்து டங்ஸ்டன் சுரங்க திட்டம் முழுமையாக கைவிடப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. விரிவான ஆலோசனைக்குப் பிறகு, அப்பகுதியில் உள்ள பல்லுயிர் பாரம்பரிய தளத்தின் முக்கியத்துவம் மற்றும் பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசின் அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய மந்திரி கிஷன் ரெட்டி அறிவித்தார்.

முன்னதாக டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது சட்டப்பேரவையில் பேசிய முதல்-அமைச்சர், எக்காரணம் கொண்டும், தமிழ்நாட்டிற்குள் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை மாநில அரசு அனுமதிக்காது. நான் முதல்-அமைச்சராக உள்ளவரை இந்த திட்டத்தை நிறைவேற்ற விடமாட்டேன். டங்ஸ்டன் சுரங்க திட்டம் வந்தால் ராஜினாமா செய்யவும் தயார். டங்ஸ்டன் சுரங்கம் அமையும் சூழல் ஏற்பட்டால் நான் முதல்-அமைச்சர் பொறுப்பில் இருக்க மாட்டேன் என்று கூறினார்.

மத்திய அரசு கொண்டு வரும் தொகுதி மறுசீரமைப்பு.. தீர்மானங்கள் நிறைவேற்றிய தமிழ்நாடு அரசு

நாடு முழுவதும் அடுத்த ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மாநில வாரியாக மக்கள்தொகை அடிப்படையில் இந்த பணிகள் நடைபெறும் என்பதால், தமிழகம் போன்ற மக்கள்தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்திய மாநிலங்களில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்று கூறப்படுகிறது. எனவே, இதற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆரம்பம் முதல் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

குறிப்பாக தமிழ்நாட்டுக்கு இப்போது 39 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. ஒருவேளை தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டால் 8 தொகுதிகளை தமிழகம் இழக்க நேரிடக்கூடும். எனவே மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளக் கூடாது என்பதை தமிழகம் வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த மார்ச் 5-ந் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் 58 கட்சிகள் கலந்து கொண்ட அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் மாநிலங்களை ஒன்றிணைத்து ஒரு கூட்டு நடவடிக்கை குழுவை அமைப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யக்கூடாது, தமிழகத்தின் 7.18 சதவிகிதத்தை மாற்றக்கூடாது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த மார்ச் 22-ந்தேதி நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த கட்சிப் பிரதிநிதிகளுடனான முதல் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான், கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் மற்றும் பல்வேறு முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். மொத்தம் 24 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். அதில், தொகுதி மறுசீரமைப்பை அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கக் கோரி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நாட்டின் மக்கள்தொகை 121 கோடி. 2021-ல் நடைபெற்றிருக்க வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு கொரோனா பெருந்தொற்றால் ஒத்திவைக்கப்பட்டது. 1971-2011 இடைபட்ட காலத்தில் உத்தரபிரதேசத்தில் 138 சதவீதம், ராஜஸ்தானில் 166 சதவீதம் மக்கள்தொகை அதிகரித்தது. ஆனால், தமிழ்நாட்டில் 75 சதவீதம், கேரளாவில் 56 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளதை தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

தமிழகத்தை உலுக்கிய கரூர் சோகம்: விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலி

த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய், வாரம்தோறும் சனிக்கிழமையன்று பிரசார கூட்டங்களை நடத்தி வந்தார். முதல் கட்டமாக திருச்சி, அரியலூரில் பிரசாரத்தை தொடங்கிய அவர், 2-ம் கட்டமாக நாகை மற்றும் திருவாரூரில் பிரசாரம் செய்தார். அந்த வரிசையில் 3-வது கட்ட பிரசாரத்தை நாமக்கல்லில் தொடங்கினார்.

இதற்காக சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் சென்று, அங்கிருந்து நாமக்கல் சென்றார். அங்கு காலை 8.45 மணிக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் விஜய் மதியம் 2.30 மணிக்கு பிரசார இடத்தை சென்று அடைந்தார். அங்கு பிரசாரத்தை முடித்துக்கொண்டு கரூர் புறப்பட்டார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் நேற்று பகல் 12 மணியளவில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அவரை காண காலை முதலே அந்த கட்சியின் தொண்டர்கள் ஏராளமானவர்கள் திரண்டிருந்தனர்.

இதில் பெண்கள், குழந்தைகளும் ஏராளமாக வந்திருந்தனர். அவர்கள் விஜய் பிரசாரம் செய்ய வந்த இடத்தின் அருகிலேயே காத்திருந்தனர். ஆனால் விஜய்யின் பிரசார வாகனம் நேற்று மாலை சுமார் 5.40 மணியளவிலேயே கரூரை அடைந்தது. பின்னர் வழிநெடுகிலும் ஏராளமானவர்கள் திரண்டிருந்ததால், விஜய்யின் வாகனம் ஊர்ந்தவாறு பிரசார கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்தது. கட்டுக்கடங்காத கூட்டத்தால், அந்த வாகனம் சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க சுமார் 1.5 மணி நேரம் ஆனது. இதையடுத்து அவர் இரவு 7 மணியளவிலேயே கரூரில் பிரசாரம் நடைபெற்ற இடத்தை வந்தடைந்தார்.

கூட்ட நெரிசல்

அப்போது அவரது வாகனத்தை பின்தொடர்ந்து ஏராளமானவர்கள் வந்ததாலும், ஏற்கனவே பிரசாரம் நடைபெறும் இடத்தில் ஏராளமானோர் திரண்டிருந்ததாலும் அங்கு மிகுந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி குழந்தைகள் உள்பட பலர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தனர். அவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர்களில் 41 பேர் பலியானார்கள்.

கூட்டத்துக்கு வந்தவர்களில் பலர் தங்களது உறவினர்களை காணாமல், அவர்களது புகைப்படங்களுடன் கரூர் ஆஸ்பத்திரி வளாகத்தில் பறிதவிப்புடன் அங்கும், இங்கும் ஓடிக்கொண்டு இருந்தனர். அதே நேரம் மகளை, மகனை, மனைவியை, கணவரை இழந்தவர்கள் கதறி அழுதது பார்ப்பவர்களின் கண்களை குளமாக்கியது.

ஆஸ்பத்திரி வளாகமே பதற்றத்தில் இருந்தது. அதே நேரம் இனம்புரியா சோகம் சூழ்ந்து இருந்தது. உயிரிழந்தவர்களை பார்த்து உறவினர்கள் மட்டும் அழவில்லை. அவர்களுக்கு சிகிச்சை அளித்த சில நர்சுகளும் கண்கலங்கி நின்றதை பார்க்க முடிந்தது.

கரூரில் விஜய் பிரசார கூட்டத்தில் பலியானவர்கள் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர், விசாரணை ஆணைய அறிக்கை கிடைத்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

விசாரணையை தொடங்கிய ஒருநபர் ஆணையம்

கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.

அதன்படி ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தனது விசாரணையை தொடங்கினார். கரூருக்கு சென்ற அவர், முதல்கட்டமாக 41 பேர் பலியான வேலுச்சாமிபுரத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அங்கு ஏராளமான போலீஸ் அதிகாரிகள் குவிக்கப்பட்டு இருந்தனர். அவர்களிடம் நடந்தவற்றை கேட்டறிந்தார்.

பிரசார கூட்டத்துக்கு போலீசார் விதித்த நிபந்தனைகள் என்னென்ன? எந்தெந்த நிபந்தனைகளை எல்லாம் மீறினார்கள். சம்பவ இடத்தில் எத்தனை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் என்பன உள்ளிட்டவற்றை கேட்டறிந்தார். பின்னர் அங்கிருந்து கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் நடந்தது என்ன? என்பது குறித்து கேட்டறிந்தார். மேலும், த.வெ.க. நிர்வாகிகளிடமும், சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்கள் சிலரிடமும் விசாரணை நடத்தினார்.

புஸ்சி ஆனந்த் மீது வழக்குப்பதிவு; மாவட்ட செயலாளர் கைது

கரூரில், விஜய் 4 மணிநேரம் தாமதமாக வந்ததே நெரிசல் ஏற்பட காரணம் என்று போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டார். புஸ்சி ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

‘பழிவாங்க நினைத்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்’ என விஜய் உருக்கம்

கரூரில் எங்களுக்கு தரப்பட்ட இடத்தில்தான் பேசினோம். நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. பழிவாங்க நினைத்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என்று விஜய் உருக்கமான வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

பலியானவர்களை பார்க்காமல் ஓடி விட்டார் - விஜய்க்கு, ஐகோர்ட்டு கடும் கண்டனம்

கரூர் கூட்ட நெரிசல் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் பலியானவர்களை பார்க்காமல் ஓடிய விஜய்க்கு, தலைமைப்பண்பு இல்லை என்று நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்.

கூட்ட நெரிசலை தவிர்க்க வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கரூர் சம்பவம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையில் முழு உண்மையும் வெளிவரும். கூட்ட நெரிசலை தவிர்க்க வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

கரூரில் 41 பேர் பலியான வழக்கில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை தொடக்கம்

கரூரில் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணையை தொடங்கியது. ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையிலான அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து தடயங்களை சேகரித்தனர்.

கரூர் சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரி வழக்கு: தமிழக அரசு - விஜய் தரப்பு சரமாரி குற்றச்சாட்டு

கரூர் சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் காரசார வாதம் நடந்தது. அப்போது தமிழக அரசு தரப்பும், விஜய் தரப்பும் சரமாரி குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். இந்த துயர சம்பவத்தை யாரும் அரசியலாக்க வேண்டாம் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

சிறப்பு புலனாய்வுக்குழு, ஒரு நபர் ஆணைய விசாரணைக்கு தடை - சி.பி.ஐ. விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டது.

7 மணிநேரம் தாமதமாக விஜய் வந்ததால் நெரிசல்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

கரூர் சம்பவம் தொடர்பாக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே காரசாரமான விவாதம் நடந்தது. அப்போது உரிய நடவடிக்கை எடுக்காததே துயரத்துக்கு காரணம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 7 மணிநேரம் தாமதமாக விஜய் வந்ததால் நெரிசல் ஏற்பட்டதாக முதல்-அமைச்சர் கூறினார். இந்த சம்பவத்தால் சட்டசபையில் கூச்சல்-குழப்பம் நிலவியது.

கரூர் நெரிசலில் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு விஜய் ஆறுதல் கூறி ரூ.1.85 கோடி நிதி உதவி

கரூர் நெரிசல் சம்பவத்தில் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறிய த.வெ.க. தலைவர் விஜய், அவர்களது குடும்பத்துக்கு ரூ.1.85 கோடி நிதி உதவி வழங்கினார். மேலும் உங்கள் குடும்பத்தில் நானும் ஒருவன் என்று உருக்கமாக கூறினார். மேலும் கல்வி, வேலைவாய்ப்பு அளிப்பதாக உறுதி அளித்தார்.

கட்சிக்கூட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடு

கரூர் சம்பவத்தை தொடர்ந்து அரசியல் கட்சிக்கூட்டங்களை 3 மணி நேரம் மட்டுமே நடத்த வேண்டும், 50 ஆயிரம் பேருக்கு மேல் கூடினால் ரூ.20 லட்சம் முன்பணம் செலுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் அரசின் வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டன. இதற்கு அனைத்துக்கட்சி கூட்டத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இலவச கல்வி திட்டத்தை செயல்படுத்த தமிழகத்துக்கு ரூ.538 கோடி ஒதுக்கீடு - மத்திய அரசு ஒப்புதல்

இலவச கட்டாயக் கல்வி திட்டத்தை செயல்படுத்த, 2 ஆண்டுகளுக்குப்பிறகு தமிழகத்துக்கு ரூ.538 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியது. இதன் மூலம் இந்த ஆண்டு 80 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவார்கள்.

கோவையில் புத்தொழில் மாநாடு: தமிழக அரசு ரூ.100 கோடி ஒதுக்கீடு - தொழில்முனைவோரை ஊக்கப்படுத்த நிதி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தொழில்முனைவோரை ஊக்கப்படுத்த தமிழக அரசு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்று கோவையில் நடந்த புத்தொழில் மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

ஆணவப் படுகொலையை தடுக்க தனி சட்டம் - சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ஒரு பிரிவை சேர்ந்த ஆணும், மற்றொரு பிரிவை சேர்ந்த பெண்ணும் காதலித்து திருமணம் செய்யும் நிகழ்வுகள் நாடு முழுவதும் பரவலாக நடக்கின்றன. ஆனால் இந்த திருமணத்தை அவர்களின் குடும்பத்தினரும், அவர்கள் சார்ந்த சமூகமும் ஏற்க மறுக்கும்போது பிரச்சினை ஏற்படுகிறது. இதில் திருமணம் செய்த தம்பதி, கணவர் அல்லது மனைவியை படுகொலை செய்யும் சம்பவங்களும் நடக்கின்றன.

இது சாதி, மதம், பொருளாதாரம் என பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் நடக்கின்றன. இந்த ஆணவப் படுகொலைகளை தடுப்பது நாகரிக சமூகத்துக்கு பெரும் சவாலாக இருக்கிறது.

நாடு முழுவதும் ஆங்காங்கே நடைபெறும் இந்த கொலைகளுக்கு தமிழகமும் விதிவிலக்கல்ல. இங்கும் கடந்த சில மாதங்களில் ஏராளமான ஆணவக்கொலைகள் நடந்து மனிதாபிமானம் கொண்ட அனைவரது மனசாட்சியையும் உலுக்கி வருகின்றன. எனவே ஆணவக்கொலைகளுக்கு எதிராக கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தன. இதைத்தொடர்ந்து இந்த ஆணவப் படுகொலைகளை தடுக்க மாநில அரசு நடவடிக்கையில் இறங்கியது.

இந்நிலையில் ஆணவப் படுகொலைகளை தடுக்கும் நோக்கில் தனி சட்டம் இயற்றுவதற்கு பரிந்துரைகளை வழங்குவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

வட மாவட்டங்களை மிரட்டி ஆந்திராவில் கரையை கடந்த ‘மோந்தா’ புயல்

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை பகுதி கடந்த 26-ந் தேதி புயலாக வலுப்பெற்றது. ‘மோந்தா’ என பெயரிடப்பட்டு இருந்த இந்த புயலை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கண்காணிக்க தொடங்கினர். இதனால் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சீபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது.

மேலும் சென்னை அருகே ‘மோந்தா’ புயல் கரையை கடக்கக்கூடும் என முதலில் எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே ‘மோந்தா’ புயல் நகர்ந்தது. காக்கிநாடாவில் இருந்து 200 கி.மீ தொலைவில் வங்கக்கடலில் மோந்தா புயல் நிலைகொண்டது. இதனை தொடர்ந்து அதிதீவிர புயலாக மோந்தா புயல் வலுவடைந்தது. பின்னர் காக்கிநாடா அருகே கரையை கடக்க தொடங்கியது. தொடர்ந்து ஆந்திரா, ஒடிசா மாநிலங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டது.

மணிக்கு 17 கி.மீ வேகத்தில் காக்கிநாடா, மசூலிப்பட்டினம் அருகே ‘மோந்தா’ புயல் கரையை கடக்க தொடங்கியது. புயல் கரையை கடக்க தொடங்கியதில் இருந்து ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் 110 கி.மீ வேகத்தில் சூரைக்காற்று வீசியது. மேலும் அங்கு விடிய, விடிய இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆந்திராவின் காக்கிநாடா, கிருஷ்ணா, எலுரு, கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி, அம்பேத்கர் கோனசீமா, அல்லூரி சீதாராம ராஜூ உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் தங்கியிருந்த 2 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதிகளில் தங்கவைக்கப்பட்டனர். மேலும் அந்த 7 மாவட்டங்களுக்கும் அனைத்து வாகன போக்குவரத்துக்கும் தடைவிதிக்கப்பட்டது.

முன்னெச்சரிக்கை

இதனை தொடர்ந்து கடலோர மாவட்டங்களில் பேரிடர் மீட்புத்துறையினர், போலீசார் உள்பட சுமார் 10 ஆயிரம் பேர் களம் இறக்கப்பட்டனர். அவர்கள் கடலோர பகுதியில் புயல் கரையை கடக்கும் பகுதியில் தீவிர ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அமராவதியில் உள்ள கண்காணிப்பு மையத்தில் இருந்தவாறு புயல் பாதிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு முடுக்கிவிட்டார்.

கரையை கடந்தது

காக்கிநாடா துறைமுகத்தில் 8-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மசூலிப்பட்டினம், நிசாம்பட்டினம், கிருஷ்ணாபட்டினம் துறைமுகங்களில் 5-ம் எண் எச்சரிக்கை கூண்டும், விசாகப்பட்டினம், கங்காவரம் துறைமுகங்களில் 6-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டு உள்ளது. இந்தநிலையில் நள்ளிரவில் காக்கிநாடாவின் மசூலிப்பட்டினம் மற்றும் விசாகப்பட்டினம் அருகே ‘மோந்தா’ புயல் கரையை கடந்தது.

புயல் காரணமாக மசூலிப்பட்டினம், கிருஷ்ணா ஆகிய கடலோர பகுதிகளில் மின் கம்பங்கள், ராட்சத மரங்கள் ஆகியவை வேரோடு சாய்ந்தன. மேலும் இடி, மின்னலுடன் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது.

விமான சேவை ரத்து

புயல் காரணமாக ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வர இருந்த 6 விமானங்களும், சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு செல்ல இருந்த 3 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. ஆந்திராவில் கனமழை பெய்து வருவதால் 75 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

புயல் காரணமாக ஆந்திராவில் 3,778 கிராமங்கள் பாதிக்கப்பட்டதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். மேலும் மோந்தா புயல் காரணமாக 1.76 லட்சம் ஹெக்டர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு அழிந்ததாக அவர் தெரிவித்தார்.

தேவர் சிலைக்கு தலைவர்கள் மரியாதை - ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஒரே காரில் வந்ததால் பரபரப்பு

முத்துராமலிங்க தேவரின் 118-வது ஜெயந்தியையொட்டி, பசும்பொன்னில் அவரது சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு ஓ.பன்னீர்செல்வமும், செங்கோட்டையனும் ஒரே காரில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அ.தி.மு.க.வில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் - எடப்பாடி பழனிசாமி அதிரடி

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைத்து பலப்படுத்த வேண்டும் என்று கூறியதோடு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு காலக்கெடுவும் நிர்ணயித்தார். இதனால் அவரது கட்சிப்பதவிகள் அதிரடியாக பறிக்கப்பட்டன. இருப்பினும் கட்சி உறுப்பினராக நீடித்து வந்தார்.

இதற்கிடையே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 118-வது ஜெயந்தி விழா மற்றும் குரு பூஜை ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற்றது. இதில் பங்கேற்க செங்கோட்டையன் மதுரையில் இருந்து முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் பசும்பொன் சென்றார். அங்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து, தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்க வந்த சசிகலாவை சந்தித்து பேசினர்.

செங்கோட்டையன், ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் சென்றது, சசிகலாவை சந்தித்த விவகாரங்கள் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் சேலத்தில் உள்ள வீட்டில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, துணை பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் சந்தித்து திடீரென ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் போது, செங்கோட்டையனை அ.தி.மு.க.வில் இருந்து நீக்க எடப்பாடி பழனிசாமி முடிவு எடுத்தார். இது தொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியானது.

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிட்ட பிரதமர் மோடி

அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் வளாகத்தில், மத்திய கலாச்சாரத் துறை சார்பில் ராஜேந்திர சோழனின் பிறந்த நட்சத்திரமான ஆடி திருவாதிரை விழா, கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா என முப்பெரும் விழா கடந்த ஜூலை மாதம் 23-ந்தேதி தொடங்கியது.

விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் (ஜூலை மாதம் 27-ந்தேதி) பங்கேற்பதற்காக பிரதமர் மோடி திருச்சியிலிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் கங்கைகொண்ட சோழபுரம் வந்தார். அவர், தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை, துண்டு அணிந்து வந்தார். அங்கிருந்து கோவிலுக்கு வந்த பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, கலாச்சாரத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியையும், சிற்பங்களையும் பார்வையிட்டார்.

பின்னர், காசியிலிருந்து பிரதமர் மோடி கொண்டு வந்திருந்த கங்கை நீரைக் கொண்டு பெருவுடையாருக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதில் பங்கேற்று, பிரதமர் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து விழா மேடைக்கு வந்த பிரதமருக்கு, கவர்னர் ஆர்.என்.ரவி தஞ்சாவூர் கோவில் ஓவியத்தையும், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வீணை ஓவியத்தையும் பரிசாக வழங்கினர்.

விழாவில் ஓதுவார்கள் தேவாரப் பாடல்கள் பாடினர். தொடர்ந்து, இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இளையராஜா இசைத்த `ஓம் சிவோஹம்' பாடலை பிரதமர் மோடி ரசித்து மகிழ்ந்தார். பின்னர், ராஜேந்திர சோழன் உருவம் பொறித்த நினைவு நாணயம், திருவாசக தொகுப்பு நூலை பிரதமர் வெளியிட்டார்.

சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் அறிவிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி

சட்டசபை தேர்தல் நடைபெறும் பீகார் மாநிலத்தில், முதல் முறையாக சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நடைபெற்று, அதன் மூலம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதேபோல் நாடு முழுவதும் எஸ்.ஐ.ஆர். எனப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெறும் என்று இந்திய தேர்தல் கமிஷன் தெரிவித்து இருந்தது.

குறிப்பாக வருகிற 2026-ம் ஆண்டு ஏப்ரல் மாதவாக்கில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்காளம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் இந்த பணி நடைபெற்று வருகிறது.

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி: தி.மு.க. உள்ளிட்ட 49 கட்சிகள் பங்கேற்ற கூட்டத்தில் முக்கிய தீர்மானம்

இந்தியாவில் சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு முதல்கட்டமாக பீகாரில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இந்த பணி 2-ம் கட்டமாக அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்குவங்காளம் உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.

இதற்கான அட்டவணையை தேர்தல் கமிஷன் ஏற்கனவே வெளியிட்டது. அதன்படி, இந்த பணியை 4 கட்டமாக பிரித்து கொள்ளலாம். முதல் கட்டமாக, நவம்பர் 4-ந் தேதி முதல் டிசம்பர் 4-ந் தேதி வரை கணக்கெடுப்பு படிவம் கொடுக்கப்பட்டது. 2-ம் கட்டமாக டிசம்பர் 9-ந் தேதி வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. 3-ம் கட்டமாக ஆட்சேபனைகள், கோரிக்கைகள் டிசம்பர் 9-ந்தேதி முதல் ஜனவரி 8-ந் தேதி வரை பெறப்படுகிறது. 4-ம் கட்டமாக பெறப்பட்ட கோரிக்கைகள், ஆட்சேபனைகள் ஆகியவை மீது விசாரணை செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி மாதம் 7-ந் தேதி வெளியிடப்படுகிறது.

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணி: அனைவரும் விழிப்புடன் செயல்பட முதல்-அமைச்சர் வேண்டுகோள்

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த படிவத்தில் குழப்பம் நீடிக்கிறது. இதன் மூலம் தமிழக மக்களின் வாக்குரிமைக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க அனைவரும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

விஜய் வீடியோ மூலம் வலியுறுத்திய விஜய்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரத்தில், அனைவரும் உஷாராக இருந்தால் ஓட்டு பறிபோவதை தடுக்க முடியும் என்று விஜய் வீடியோ மூலம் வலியுறுத்தினார்.

தமிழக வாக்காளர் பட்டியலில் இருந்து 97.37 லட்சம் பேர் நீக்கம்

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும், புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களிலும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி (எஸ்.ஐ.ஆர்.) நடந்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கடந்த 2002-ம் ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் இந்த பணி நடக்கிறது. 1.1.2026 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, இறந்த வாக்காளர்களின் பெயர்கள், இரட்டை பதிவில் உள்ளவர்களை நீக்கவும் தேர்தல் கமிஷன் முயற்சி களை மேற்கொண்டுள்ளது.

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். களப்பணிகள் கடந்த நவம்பர் 4-ந் தேதி தொடங்கின. இந்த பணியின்போது வீடுவீடாக சென்று கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வழங்கி வருகின்றனர். அந்த படிவங்களை பூர்த்தி செய்ததும் அவற்றை வாங்கி இணையதளத்தில் பதிவேற்றம் செய்கின்றனர்.

இந்தப்பணிகள் கடந்த 4-ந் தேதி முடிவடைவதாக முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர் அந்த தேதியை 11-ந் தேதி வரை நீட்டித்து தேர்தல் கமிஷன் அறிவித்து இருந்தது. இந்தநிலையில் கணக்கீட்டு படிவங்களை வழங்கி பதிவேற்றம் செய்யும் பணிக்கான கால அளவை 2-ம் முறையாக மேலும் நீட்டித்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.

இந்த சூழலில் தமிழகத்தில் தீவிர திருத்தப்பணிக்கு பின்னர் வரைவு வாக்காளர் பட்டியல் டிச. 19-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். இதன்படி தற்போது பட்டியலில் 5.43 கோடி வாக்காளர்களே உள்ளனர். இதன் மூலம் தமிழகம் 14 ஆண்டுகளுக்கு முந்தைய நிலைக்கு வந்துள்ளது.

கோவை நகரில் பயங்கர சம்பவம்: கல்லூரி மாணவியை கடத்தி பலாத்காரம் - 3 பேர் கும்பல் சுட்டுப்பிடிப்பு

கோவை நகரில் காதலனை அரிவாளால் வெட்டிவிட்டு, கல்லூரி மாணவியை கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதில் தொடர்புடைய 3 பேர் கும்பலை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் போராட்டம்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம், திரு.வி.க.நகர் ஆகிய மண்டலங்களின் தூய்மைப்பணி தனியாருக்கு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து தூய்மைப் பணியாளர்கள் கடந்த ஆகஸ்டு 1-ந்தேதி முதல் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு திரண்டனர். தொடர்ந்து மாநகராட்சி கட்டிடத்தின் நுழைவுவாயிலில் அமர்ந்து போராட்டம் செய்தார்கள். பின்னர், ஆகஸ்டு 13-ந்தேதி இரவு கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, தொடர்ச்சியாக சென்னையின் பல்வேறு இடங்களில் அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளிலும் தூய்மை பணியாளர்களுக்கு இலவச உணவு

அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளிலும் உள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு டிசம்பர் 6-ந் தேதி முதல் 3 வேளையும் இலவச உணவு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு

மத்திய அரசும், மாநில அரசுகளும் தங்கள் ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை ஆண்டுக்கு 2 முறை வழங்கி வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை ஆகிய 6 மாத இடைவெளியில் இந்த அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும். மத்திய அரசின் புள்ளியியல்துறை அதிகாரிகள், நாடு முழுவதும் உள்ள நுகர்வு பொருட்களின் விலைவாசியை கணக்கில் கொண்டு ஒவ்வொரு மாதமும் விலைக்குறியீட்டு எண்ணை கணக்கிடுவர். அதன் அடிப்படையில் இந்த அகவிலைப்படி உயர்வு நிர்ணயிக்கப்படுகிறது.

கடந்த ஜனவரியில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் 55 சதவீத அகவிலைப்படியை பெற்று வந்தனர். இந்தநிலையில் கடந்த செப்டம்பர் மாத இறுதியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய மந்திரி சபை கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, 55 சதவீதத்தில் இருந்து 58 சதவீதமாக அறிவிக்கப்பட்ட உயர்வு, கடந்த ஜூலை 1-ந்தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்பட்டு வருகிறது. அதை பின்பற்றி தற்போது தமிழ்நாடு அரசும் தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி உள்ளது.

காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட தடை கோரி வழக்கு: தமிழக அரசின் மனு தள்ளுபடி

கர்நாடகம் - தமிழ்நாடு இடையே காவிரி நதி நீரை பங்கீட்டு கொள்வது தொடர்பாக நீண்ட காலமாக பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் கர்நாடக அரசு மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிதாக அணை கட்ட திட்டமிட்டு உள்ளது. இந்த அணையை கட்ட ரூ.14 ஆயிரம் கோடியில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், மத்திய நீர்வளத்துறை மற்றும் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்திற்கு உபரி நீர் கிடைக்காது என கூறி இந்த அணை திட்டத்தை தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட தடை விதிக்க கோரி தமிழக அரசு தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது..

புதிய பாம்பன் ரெயில் பாலத்தை நாட்டுக்கு அர்பணித்தார் பிரதமர் மோடி

பழைய பாம்பன் பாலம் 1914-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்தப் பாலத்தின் வழியே நடைபெற்ற போக்குவரத்தின் வாயிலாக ராமேசுவரம் வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்தது. கடலுக்கு நடுவில் இருந்த பழைய பாலத்தில் 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில்கள் இயக்கப்பட்டது. இதற்கிடையே, பாம்பன் ரெயில் பாலம் 110 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், கடல் அரிப்பின் காரணமாக பாலத்தின் பல இடங்களில் உறுதித்தன்மை குறைந்தது.

கப்பல் போக்குவரத்துக்காக பயன்படும் 'தூக்கு பாலத்தில்' அவ்வப்போது பழுதும் ஏற்பட்டது. இதனால் பாம்பன் ரெயில் பாலத்தில் ரெயில்கள் இயக்குவது நிறுத்தப்பட்டது.ராமேசுவரம் செல்லும் ரெயில்கள் அனைத்தும் மண்டபம் வரை மட்டுமே இயக்கப்பட்டது. அங்கிருந்து பயணிகள் கடல் மீது அமைந்துள்ள சாலை பாலம் வழியாகவே ராமேசுவரம் சென்று வந்தனர்.

இதனிடையே, பாம்பன் கடலில் ரூ.550 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 17 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்ட இந்த பாலத்தின் நடுவில் 650 டன் எடை கொண்ட தூக்குப் பாலமும் அமைக்கப்பட்டது. கப்பல்கள் செல்லும்போது இந்த செங்குத்து பாலம் செங்குத்து வடிவில் திறக்கும். இரட்டை தண்டவாளங்களுடன் அமைந்துள்ள இந்த பால வேலை கடந்த ஆண்டு இறுதியில் நிறைவடைந்தது.

அதன் பின்பு பல கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டு ரெயில் போக்குவரத்தை தொடங்க அனுமதி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி பிரதமர் மோடி இந்த பாலத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும் ராமேசுவரம் - தாம்பரம் இடையேயான புதிய ரெயில் சேவையையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதன் மூலம், இந்தியாவின் மிக நீளமான கடல் பாலங்களில் ஒன்றான பாம்பன் புதிய ரெயில் பாலம், தமிழ்நாட்டின் பெருமைமிகு வரலாற்றுப் பாரம்பரியத்தை நவீன தொழில்நுட்பத்துடன் இணைத்துள்ளது. 111 ஆண்டுகள் பழமையான பாம்பன் ரெயில் பாலத்தின் வாரிசாக, புதிய தலைமுறையினருக்கு தமிழ்நாட்டின் பொறியியல் திறமையை எடுத்துக்காட்டும் வகையில் இப்புதிய பாலம் அமைந்துள்ளது.

பரபரப்பான அரசியல் களம்: கூட்டணி அமைக்க விஜய்யுடன் ராகுல்காந்தி பேசினாரா?

தமிழக சட்டமன்றத்தேர்தல் அடுத்த ஆண்டு (2026) நடைபெறவுள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. சட்டசபை தேர்தலை சந்திக்க பிரதான கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய கட்சிகளுடன் நடிகர் விஜய்யின் த.வெ.க. மற்றும் நாம் தமிழர் கட்சியும் களம் இறங்க தயாராகி வருகின்றன.

தற்போது ஆளும் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச்சிறுத்தைகள், 2 கம்யூனிஸ்டுகள், ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளும், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகளும் இடம் பெற்று உள்ளன. இந்த இரு கூட்டணியிலும் மேலும் சில கட்சிகள் சேர வாய்ப்பு உள்ளது.

சமீபத்தில் நடந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் 243 தொகுதிகளில் 202 தொகுதிகளை பா.ஜனதா - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வாரி சுருட்டியது. லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம் - காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. காங்கிரஸ் கட்சி வெறும் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் அந்தக்கட்சியினர் உற்சாகம் இழந்து காணப்படுகிறார்கள்.

இதற்கிடையே அடுத்த ஆண்டு தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பீகாரில் இழந்த வெற்றியை, இந்த 5 மாநில தேர்தல்களில் பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளது. தமிழ்நாட்டில் இந்த முறை தங்களுக்கு கூடுதல் தொகுதி வேண்டும் என்றும் ஆட்சியில் பங்கு வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியின் சில தலைவர்கள் கோரிக்கையை முன்வைத்து வருகிறார்கள்.

அதே நேரம் த.வெ.க.வின் முதலாமாண்டு மாநில மாநாட்டில் பேசிய விஜய், தனது தலைமையில் ஆட்சி அமைந்தால் கூட்டணி கட்சிகளுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார். எனவே விஜய் கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒரு சிலர் டெல்லி தலைமையிடம் கருத்து தெரிவித்து வந்தனர்.

விஜய்க்கு தமிழ்நாடு மட்டும் அல்லாமல் கேரளா, கர்நாடகா, புதுச்சேரியிலும் அதிக அளவிலான ரசிகர்கள் உள்ளனர். எனவே, த.வெ.க. வுடன் கூட்டணி வைத்தால் நமக்கு சாதகமாக இருக்கும் என்றும் அவர்கள் கூறிவந்தனர். இந்த கருத்தை காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைவர்கள் சிலரும் ஆமோதித்துள்ளதாக கூறப்பட்டது.

ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும் என்பதால் பெரும்பாலான காங்கிரசார், த.வெ.க. கூட்டணியை எதிர்பார்ப்பதாகவும் கூறப்பட்டது. விஜய்யுடன் கூட்டணி வைத்தால் கேரளா, புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பதற்கு பிரகாசமான வாய்ப்பு இருப்பதாக அக்கட்சியினர் நம்புகின்றனர்.

இந்தநிலையில், ராகுல்காந்தியுடன் நெருக்கமாக இருக்கும் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பனையூர் வந்து விஜயை சந்தித்து பேசிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதேபோன்று ராகுல்காந்தியும் நடிகர் விஜய்யுடன் 2 முறை தொலைபேசியில் பேசியதாக நெருங்கிய வட்டாரங்களில் தெரிவித்தன. இந்த தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு அனுமதி மறுத்த மத்திய அரசு

சென்னையில் 2 வழித்தடங்களில் 55 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவை அளிக்கப்பட்டு வருகிறது. தினசரி 3 லட்சம் பயணிகள் கையாளப்பட்டு வருகின்றனர். இதனைத்தொடர்ந்து மேலும் 116 கிலோ மீட்டர் தூரத்திற்கு 3 வழித்தடங்களில் ரூ.63 ஆயிரத்து 246 கோடி செலவில் பணிகள் நடந்து வருகிறது.

கோவை

இதனைத்தொடர்ந்து, ஜவுளி மற்றும் தொழில்துறை மையமாக திகழும் ‘தென்னிந்தியாவின் மான்செஸ்டர்' என்று அழைக்கப்படும் கோவை மற்றும் மல்லிகை மாநகராக திகழும் மதுரை மாநகரிலும் மெட்ரோ ரெயில் திட்டம் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்தது. குறிப்பாக, கோவை மெட்ரோ, அவினாசி மற்றும் சத்தியமங்கலம் சாலைகளில் 39 கி.மீ. தூரத்திற்கு ரூ.10 ஆயிரத்து 740 கோடி செலவில் மெட்ரோ ரெயில் சேவைக்கான கட்டமைப்புகள் அமைக்க திட்டமிடப்பட்டது.

குறிப்பாக அவிநாசி சாலையில் கருமத்தம்பட்டி வரையிலும், உக்கடத்தில் இருந்து வலியம்பாளையம் பிரிவு வரையிலும், மெட்ரோ ரெயில் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதில் நிலம் கையகப்படுத்த ரூ.1,082.67 கோடி, மறுவாழ்வு செலவுகளுக்கு ரூ.40.34 கோடி இதனை கழித்த பிறகு, மீதமுள்ள செலவு ரூ.9,617 கோடி ஆகும். சமீபத்திய மெட்ரோ ஒப்புதல்களின்படி, மத்திய அரசின் பங்களிப்பு சுமார் ரூ.1,443 கோடி ஆகும். அதாவது பங்கு 11 சதவீதமும், துணைக்கடன் 4 சதவீதமும் என பிரிக்கப்பட்டது.

மதுரை

இதேபோல் மதுரையில் திருமங்கலம் மற்றும் ஒத்தக்கடை இடையே 31.93 கி.மீ, தூரத்திற்கு ரூ.11 ஆயிரத்து 368 கோடியில் மெட்ரோ ரெயில் திட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதில் மத்திய அரசின் பங்கு ரூ.1,563 கோடி என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு நிதியுதவி செய்ய விருப்பம் தெரிவித்துள்ள ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் அதிகாரிகளும், மதுரை மற்றும் கோவையில் ஆய்வு செய்தனர். ஆனால் இந்த 2 நகரங்களுக்கும் மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு மத்திய அரசு இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை.

இதனால், அடுத்தக்கட்ட பணிகளை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்தநிலையில் மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரெயில் திட்டங்களை மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் நிராகரித்தது.

இந்நிலையில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை புறக்கணிப்பது அழகல்ல என்றும், யார் முடக்க நினைத்தாலும் கோவை, மதுரைக்கு மெட்ரோ ரெயிலை கொண்டு வருவோம் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.

காஞ்சீபுரம் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் விஜய் அளித்த 12 வாக்குறுதிகள்

தமிழக சட்டமன்றத்தேர்தல் அடுத்த ஆண்டு (2026) நடைபெறவுள்ள நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை தீவிரமாக மேற்கொண்டு வந்தார். கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி நடந்த பிரசாரத்தில் கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பின்னர் விஜய் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தார்.

இருப்பினும் கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை மாமல்லபுரத்திற்கு நேரில் வரவழைத்து ஆறுதல் கூறினார். பின்னர் விஜய் தலைமையில் நடைபெற்ற த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன்படி 2026 சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. தலைமையில்தான் கூட்டணி அமைக்கப்படும் என்றும், முதல்-அமைச்சர் வேட்பாளர் விஜய் என்றும் சிறப்பு பொதுக்குழுவில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

இருப்பினும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தாமல் இருந்தார். இதற்கிடையே கூட்ட நெரிசலை தவிர்க்க மக்கள் பாதுகாப்பு படை என்ற தொண்டர் படையை புதிதாக உருவாக்கினார். இவர்களுக்கு கூட்டநெரிசலை கட்டுப்படுத்த பயிற்சி அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சேலத்தில் மக்கள் சந்திப்பு நடத்த த.வெ.க. சார்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது.

இந்த சூழலில் காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி வளாக அரங்கத்தில் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அதில் பேசிய விஜய், நல்ல வருமானம் கிடைக்கும் வகையில் வேலைவாய்ப்பு, கல்வியில் சீர்திருத்தம், பெண்கள் - குழந்தைகள் பாதுகாப்பு, அனைவருக்கும் வீடு, மோட்டார் சைக்கிள் என்பதே லட்சியம் என்பது உள்பட 12 வாக்குறுதிகளை அளித்தார்.


கூட்டணியில் இருந்தாலும் புதுச்சேரியை மத்திய அரசு புறக்கணிக்கிறது - விஜய்

புதுச்சேரி, தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள விஜய் தலைமையிலான த.வெ.க. தீவிரமாக தயாராகி வருகிறது. கரூரில் கடந்த செப்டம்பர் 27-ந்தேதி நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு மீண்டும் மக்கள் சந்திப்பை விஜய் தொடங்கவில்லை. இந்த சூழலில் காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரி வளாக உள்அரங்கத்தில் விஜய் மக்கள் சந்திப்பில் பங்கேற்று பேசினார்.

இந்நிலையில் கரூர் சம்பவத்தை அடுத்து 72 நாட்களுக்குப் பின் பொதுவெளியில் புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் த.வெ.க. பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் விஜய் பங்கேற்பதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. 5 ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொள்ள போலீசார் அனுமதி அளித்தனர். அவர்களுக்கு கியூ.ஆர். கோடுடன் கூடிய பாஸ் வழங்கப்பட்டு இருந்தது. தொண்டர்கள் காலை 6 மணி முதல் அங்கு குவியத் தொடங்கினர். அவர்கள் மைதான நுழைவாயிலில் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர்.

பொதுக்கூட்டத்தில் விஜய் பேசுவதற்கு வசதியாக பிரசார வாகனம் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு கட்சியின் தலைவர் விஜய் காலை 10.20 மணிக்கு காரில் வந்தார். பின்னர் அவர் அங்கு தயாராக இருந்த பிரசார வாகனத்தின் உள்ளே ஏறி அமர்ந்திருந்தார். சிறிது நேரத்திற்கு பிறகு வாகனத்தின் மேல் ஏறி விஜய் பேசினார். அப்போது கூட்டணியில் இருந்தாலும் புதுச்சேரியை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்று குற்றம் சாட்டினார். மேலும் திமுகவையும் அவர் கடுமையாக விமர்சனம் செய்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையன்

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டைன் த.வெ.க.வில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. இதை உறுதிப்படுத்தும் வகையில் செங்கோட்டையன் தலைமை செயலகம் வந்து சபாநாயகரிடம் தனது ராஜினாமா கடிதம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். தொடர்ந்து த.வெ.க. தலைவர் விஜய்யை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த சூழலில், மறுநாள் த.வெ.க.வில் இணைவதற்காக பனையூரில் உள்ள த.வெ.க. கட்சி அலுவலகத்திற்கு செங்கோட்டையன் சென்றார். அவரை வாசலில் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார், கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர்.

கட்சி அலுவலகம் வந்த செங்கோட்டையனை விஜய் சால்வை அணிவித்து வரவேற்றார். செங்கோட்டையனுடன், முன்னாள் எம்.பி. சத்யபாமா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், வெங்கடாசலம், முத்துக்கிருஷ்ணன், புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வி.சாமிநாதன், அசனா ஆகியோர் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களும் த.வெ.க.வில் இணைந்தனர். அவர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டைகளை விஜய் வழங்கினார்

புதிதாக 17 லட்சம் பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

கடந்த 2021-ம் ஆண்டு சட்ட சபை தேர்தலின்போது தமிழகத்தில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தி.மு.க. அறிவித்தது. அதன்படி ஆட்சிக்கு வந்தபின், இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைமுறைப்படுத்தினார். இந்த திட்டத்திற்காக கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் 24-ந்தேதி முதல் ஆகஸ்டு மாதம் 14-ந் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. சுமார் 1.63 கோடி பெண்கள் விண்ணப்பம் செய்திருந்தனர்.

அதில் தகுதியின் அடிப்படையில் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் தகுதியானவர்கள் என முதல் கட்டமாகத் தேர்வு செய்யப்பட்டனர். இந்த திட்டத்திற்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை என்று தமிழக அரசு பெயர் சூட்டியது. பின்னர் இந்த திட்டத்தில் விடுப்பட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது, அதன்படி சிலர் இந்த திட்டத்தின் கீழ் புதிதாக சேர்க்கப்பட்டனர்.

ரூ.30 ஆயிரத்து 838 கோடி

தமிழக அரசின் கணக்கீட்டின்படி, சுமார் 1 கோடியே 13 லட்சத்து 75 ஆயிரத்து 492 பெண்களுக்கு ரூ.1,000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகையானது, ஒவ்வொரு மாதமும் 15-ந்தேதி நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. கடந்த 2022-23-ம் நிதியாண்டில், இந்த திட்டத்திற்காக ரூ.7 ஆயிரத்து 926 கோடியே 35 லட்சமும், 2024-25-ம் நிதியாண்டில் ரூ.13 ஆயிரத்து 790 கோடியே 61 லட்சமும் செலவிடப்பட்டது. இந்த நிதியாண்டில் கடந்த நவம்பர் மாதம் வரை ரூ.9 ஆயிரத்து 121 கோடியே 49 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது. ஆக மொத்தம் இந்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்காக ரூ.30 ஆயிரத்து 838 கோடியே 45 லட்சம் செலவிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும் என தெரிவித்தார். அதன்படி மாநிலம் முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த ‘உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற பெண்கள் ஆர்வத்துடன் விண்ணப்பம் செய்து இருந்தனர்.

இந்த உரிமைத்தொகை பெற ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்குக் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள், 5 ஏக்கருக்குக் குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்குக் குறைவாகப் புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள், ஆண்டிற்கு வீட்டு உபயோகத்திற்கு 3,600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள் என ஏற்கனவே வகுக்கப்பட்ட தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டன.

இந்த திட்டத்தில் முன்பு நான்கு சக்கர வாகனம், அதாவது கார் இருந்தால் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற முடியாத நிலை இருந்தது. ஆனால் இப்போது அதில் தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளன. அதன்படி கார் இருப்பவர் அதனை டாக்சி பயன்பாட்டிற்கு பயன்படுத்தினால் அவர்கள் மகளிர் உரிமைத்தொகை பெற்று கொள்ளலாம்.

‘உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் மொத்தம் 28 லட்சம் பெண்கள், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பம் செய்திருந்தனர். அதில் தற்போது 17 லட்சம் பெண்கள் தகுதியானவர்கள் என தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு நேரு விளையாட்டரங்களில் நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதன் மூலம் தமிழகத்தில் கலைஞர் உரிமைத்தொகை பெறுபவர்களின் எண்ணிக்கை 1.34 கோடி ஆகியுள்ளது.

‘மகளிர் உரிமைத்தொகை நிச்சயம் உயரும்’ - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் உரிமைத்தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்தம் 1.34 கோடி பேர் பயன் பெறுவார்கள். இந்த தொகை நிச்சயம் உயர்த்தப்படும் என்று சென்னையில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

புவிசார் குறியீடு பெற்ற முக்கிய பொருட்கள்

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை தமிழ்நாட்டில் இருந்து உற்பத்தி ஆகி வரும் 69 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு இருந்தது. இதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டின் மொத்த புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் எண்ணிக்கை 74-ஐ எட்டி உள்ளது.

இதன்படி இந்த ஆண்டில் புவிசார் குறியீடு பெற்ற சில முக்கிய பொருட்கள்:

பண்ருட்டி பலாப்பழம், கும்பகோண வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலை, செட்டிகுளம் சின்ன வெங்காயம், ராமநாதபுரம் சித்திரைகார் அரிசி, புளியங்குடி எலுமிச்சை, விருதுநகர் சம்பா வற்றல் மிளகாய், உறையூர் பருத்தி சேலைகள், தூயமல்லி அரிசி போன்ற பல பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவானது ‘டிட்வா’ புயல்: தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியதா..?

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வந்தது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வந்தது. இதற்கிடையே தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக வலுவடைந்து இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த புயலுக்கு ‘டிட்வா' என பெயரிடப்பட்டது. ஏமன் நாடு இந்த பெயரை பரிந்துரைத்து செய்திருந்தது.

டிட்வா புயல் இலங்கை மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு போன்ற பேரிடர்களை ஏற்படுத்தியது. இலங்கையில் கடந்த நவம்பர் 16-ந்தேதி முதல் கோர தாண்டவமாடிய டிட்வா புயலுக்கு 600-க்கும் மேற்பட்ட்டோர் பலியாகினர். மேலும், புயல், கனமழை, நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடர்களில் சிக்கி 18 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர். 53 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. டிட்வா பேரிடர் காரணமாக இலங்கைக்கு சுமார் 700 கோடி வரை பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டது.

புயலின் தாக்கத்தால் ஆயிரக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டநிலையில், இலங்கை மக்களுக்கு நிவாரண பொருட்கள் இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன. அந்தவகையில் தமிழ்நாட்டில் இருந்தும் நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். அதன்படி, இலங்கை மக்களுக்கு தமிழ்நாட்டு மக்களின் சார்பில் சென்னை துறைமுகத்தில் இருந்து 650 டன்னும், தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 300 டன்னும் என மொத்தம் 950 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டன.

இலங்கையில் 'டிட்வா புயல் நல்ல மழையை கொட்டிவிட்டு, அடுத்ததாக தமிழக கடலோரப்பகுதிகளில் 28-ந்தேதி பயணத்தை தொடங்கியது. ராமேசுவரம், ராமநாதபுரம் மற்றும் அதனையொட்டிய பகுதிகள், காவிரி டெல்டா பகுதிகளிலும் அதிகனமழை வரையும், தென்மாவட்டங்களில் கன முதல் மிககனமழையும் பெய்தது.

'டிட்வா' புயல் டெல்டா மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் வட தமிழக மாவட்டங்களில் மழைப்பொழிவை ஏற்படுத்தியது. இதனால் சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. நாகையில் வீடுகளில் புகுந்த மழை வெள்ளம் சில மாவட்டங்களில் கனமழை, வேறு சில மாவட்டங்களில் அதிகனமழை என கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டது.

டெல்டா உள்ளிட்ட சில மாவட்டங்களில் பெய்த கனமழையால் பயிர்கள் சேதம் அடைந்தன. பல இடங்களில் நெற்பயிர் உள்ளிட்ட பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கின. தோட்டக்கலை பயிர்களும் கடும் சேதத்துக்கு உள்ளாகின. டிட்வா புயல் காரணமாக நவம்பர் இறுதியில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் (சென்னை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை உட்பட) கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சம்: சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டியது

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் 2-வது முறையாக பொறுப்பேற்ற பின்னர் இந்தியாவின் மீது தொடுத்த வர்த்தக போரால் அந்நாட்டு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

இதேபோல அமெரிக்க மத்திய பெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைத்ததால், முதலீட்டாளர்கள் அரசு பத்திரங்கள், சேமிப்புகளில் முதலீடு செய்வதை கணிசமாக குறைத்துவிட்டு, தங்கத்தின் மீது தங்கள் கவனத்தை திசை திருப்ப தொடங்கி உள்ளனர்.

பெரும்பாலானோர் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வதை தவிர்த்துவிட்டு, எதிர்கால நலன்களை கருத்தில் கொண்டு மதிப்புமிக்க மஞ்சள் உலோகமான தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர். இது தங்கத்துக்கான தேவையை உலக அளவில் கணிசமாக அதிகரிக்க செய்துள்ளது. தேவை அதிகமாக இருப்பதால் தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு முன்பு தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் சென்றது.

இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகைக்கு முன்னர் சவரன் ரூ.1 லட்சத்தை தொட்டுவிடும் என்று எதிர்பார்த்த நிலையில், ரூ.96 ஆயிரம் வரை சென்றது. அதன்பிறகு விலை சற்று தணிய தொடங்கியது. அதாவது, ‘முழம் ஏறி சாண்' சறுக்கியது. இந்தநிலையில், கடந்த சில மாதங்களாக சீரான இடைவெளியில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை தங்கம் விலை அவ்வப்போது தொட்டு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுத்து வருகிறது. இதனால் தங்கத்தின் விலையில் நிலையற்றத்தன்மை காணப்பட்டது.

தொடர்ந்து உச்சத்துக்கு சென்று கொண்டிருப்பதால் தங்கம் ஏழை-எளிய மக்களுக்கு எட்டாத கனியாகவே மாறிவிட்டது. குறுகிய காலத்தில் தங்களது சேமிப்பை அதிகரிக்கும் எண்ணத்தில் சிலர் வங்கிகள், நிதி நிறுவனங்களில் கடன் வாங்கியும் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கி இருக்கிறார்கள்.

இந்நிலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டியது. தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்திருப்பது இல்லத்தரசிகள் இடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜி.எஸ்.டி., செய்கூலி உள்ளிட்டவற்றை சேர்த்தால் தங்கம் நகையாக உருவெடுக்கும்போது இன்னும் கூடுதல் தொகையை செலவிடவேண்டியது இருக்கும். தற்போதைய சூழலில் கைகளில் இருக்கும் தங்கத்தை பாதுகாத்து வைத்தாலே லட்சாதிபதியாக தொடரலாம் என்பதே பெரும்பாலான நடுத்தர மக்களின் எண்ணமாக இருக்கிறது.

ஒரே ஆண்டில் ரூ.43 ஆயிரம் உயர்வு

கடந்த ஆண்டு (2024) மார்ச் மாதம் 28-ந்தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.50 ஆயிரத்துக்கு விற் பனையானது. இதுவே அந்த ஆண்டின் கடைசி நாளான (அதாவது டிசம்பர் மாதம் 31-ந்தேதி) சவரன் ரூ.56 ஆயிரத்து 880-க்கு விற்பனையானது. அதில் இருந்து கணக்கிடும்போது ஒரே ஆண்டில் ரூ.43 ஆயிரத்துக்கு மேல் உயர்ந்து ரூ.1 லட்சத்தை கடந்திருப்பது நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

கவலை

தங்கம் விலையை போன்றே வெள்ளி விலையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தங்கம்-வெள்ளி விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்வது பொதுமக்களை கவலையில் உறைய வைத்துள்ளது. இதனால் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை வைத்திருப்பவர்களுக்கு தங்கம் விலை உயர்வு தீராத தலைவலியை கொடுத்திருக்கிறது.

நாடாளுமன்றத்தில் எதிரொலித்த திருப்பரங்குன்றம் மலை தீபத்தூண் விவகாரம்

மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த 1-ந் தேதி மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். ஆனால் கார்த்திகை தீப திருநாள் அன்று (3-ந் தேதி) தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. இதனால் அதிகாரிகள் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது அதே நீதிபதி், இந்த வழக்கை தாக்கல் செய்த ராம ரவிக்குமார் மற்றும் அவரது தரப்பினர், திருப்பரங்குன்றம் மலைக்கு சென்று தீபம் ஏற்ற வேண்டும் என்றும், அவர்களுக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். ஆனால் திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், ராம ரவிக்குமார் தரப்பினரை மலை ஏற அனுமதிக்கவில்லை. மலையில் சிக்கந்தர் தர்காவும், தீபத்தூணும் அருகருகே இருப்பதாகவும், அங்கு சென்றால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என அனுமதி மறுத்தனர்.

எனவே மலைக்கு செல்ல தங்களை அனுமதிக்கவில்லை என்று கூறி மறுநாள் (4-ந் தேதி) ராம ரவிக்குமார் தரப்பினர் நீதிபதியிடம் தெரிவித்தனர். இதையடுத்து அன்றைய தினமே ராம ரவிக்குமார் தரப்பினர் மீண்டும் மலைக்குச் சென்று தீபம் ஏற்ற வேண்டும். அதற்கு மாநகர போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவும் நிறைவேற்றப்படவில்லை.

இந்த 2 உத்தரவுகளையும் நிறைவேற்றாதது குறித்து விசாரிப்பதற்காக தமிழக தலைமை செயலாளர், கூடுதல் டி.ஜி.பி. ஆகியோர் 17-ந் தேதி வீடியோ கான்பரன்சிங் (காணொலி) முறையிலும், மதுரை மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரிலும் ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். அதன்படி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது தலைமை செயலாளர் முருகானந்தம், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் காணொலி முறையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு ஆஜரானார்கள். அதேபோல மதுரை மாவட்ட கலெக்டர் பிரவீன் குமார், மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன், துணை போலீஸ் கமிஷனர் இனிகோ திவ்யன், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் செயல் அலுவலர் யக்ஞ நாராயணன் ஆகியோர் நேரில் ஆஜராகி இருந்தார்கள். அவர்களிடம் விசாரணை நடைபெற்றது.

இதன்படி இந்த மனுக்கள் மீதான விரிவான விசாரணை டிச., 12ம் தேதி தொடங்கி 18-ம் தேதிவரை தொடர்ந்து நடந்தது. இந்தநிலையில், திருப்பரங்குன்றம் வழக்கில் இரு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வில் நடந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை நிறைவு பெற்றது. தனி நீதிபதி விசாரிக்கும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு எதிரான மேல்முறையீடு உள்ளிட்ட இது தொடர்பான அனைத்து வழக்குகளும் வரும் ஜனவரி 7ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். எழுத்துப்பூர்வமான வாதங்களை டிச. 19-ம் தேதிக்குள் வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டு தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தனர்.

நாடாளுமன்றத்தில் எதிரொலித்த...

மக்களவையில் திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான கோஷங்கள் எழுப்பப்பட்டன.

திமுக எம்பி டி.ஆர்.பாலு பேசுகையில், "தமிழ்நாட்டில் நடைபெற்ற ஒரு சம்பவத்தால் சட்டத்தைப் பின்பற்றும் அனைத்து குடிமக்களும் கவலையில் உள்ளனர். திருப்பரங்குன்றம் மலையில் யார் தீபத்தை ஏற்றுவது என்பதுதான் பிரச்னை. அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் ஏற்றுவதா அல்லது பிரச்னை ஏற்படுத்த வேண்டும் என்கிற ஒருவர் ஏற்றுவதா என்பதுதான்" என்றார்.

இதனைத் தொடர்த்து மத்திய இணை மந்திரி எல்.முருகன் இந்த விவகாரம் பற்றி பேசினார், "மதுரையில் திமுக அரசு மக்கள் வழிபடுவதை தடுத்துள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தாமல் அங்கு சென்றவர்களை கைது செய்து அராஜகப் போக்கில் திமுக அரசும், காவல்துறையும் மக்களின் வழிபடும் உரிமைமை தடுத்து வருகிறது. அங்கு சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்துள்ளது. காவல்துறை சட்டம் ஒழுங்கை காப்பாற்றாமல் வழிபட செய்பவர்களை கைது செய்து வருகிறது. திமுக அரசு அரசியலுக்காக இவ்வாறு செய்து வருகிறது." என்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறுகையில், “திருப்பரங்குன்றம் மக்கள் பல நூற்றாண்டுகளாக மத நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வருகிறார்கள். அதைச் சீர்குலைக்கும் வகையில் பாஜக செயல்படுகிறது” என்று தெரிவித்தார். மேலும் எல்.முருகன் நாடாளுமன்றத்தில் திருப்பரங்குன்றம் தொடர்பாக பொய் பிரச்சாரத்தை முன்வைத்துள்ளதாகக் கூறிய கனிமொழி, "திமுக ஆளும் தமிழ்நாட்டில் பொது அமைதியும், சமூக நல்லிணக்கமும் நிலவுகிறது. பாஜக ஆளும் ஏதேனும் மாநிலத்தில் அத்தகைய நிலை உள்ளதா? தமிழ்நாட்டில் மதக் கலவரத்தை உருவாக்கி, திமுக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம் என்று கூறினார்.

இதனிடையே வளர்ச்சி அரசியலா? அல்லது *** அரசியலா? எது தேவை என்பதை மதுரை மக்களே முடிவு செய்வார்கள் என்று திருப்பரங்குன்றம் கோவில் விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார்.

பாமகவில் தொடரும் குழப்பம்: கட்சி யாருக்கு. ? மகன் - தந்தை இடையே முற்றிய மோதல்

பாமகவில் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் உச்சத்தை எட்டி உள்ளது. கட்சியில் இருவரும் தனித்தனியாக செயல்பட்டு, நிர்வாகிகள் நீக்கம், சேர்ப்பு என புதிய, புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வந்தனர்.

பா.ம.க.வில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற பொதுக்குழுவில் தந்தை- மகனுக்கும் ஏற்பட்ட கருத்து மோதல் முதலில் பரபரப்பை ஏற்படுத்தினாலும் நாளடைவில் சரியாகிவிடும் என்றுதான் பலரும் நினைத்தார்கள். ஆனால், அந்த மோதலோ ஓராண்டாக நீடித்து வருகிறது. ராமதாஸின் மகள் வழி பேரனான முகுந்தனை பா.ம.க. இளைஞரணி செயலாளராக நியமிப்பதில் தொடங்கிய அதிகாரப் போட்டி தற்போது கட்சி யாருக்கு சொந்தமானது? என்று வரை சென்றுள்ளது.

மேலும் அன்புமணி ஆதரவாளர்களை ராமதாஸ் நீக்குவதும், ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணி நீக்குவதும் என போட்டாபோட்டியாக தொடங்கி தைலாபுரம், பனையூர் என மாற்றி மாற்றி அறிக்கைகள் வந்தன. இதனிடையே, இருதரப்பினரும் போட்டிபோட்டு பொதுக்குழுவை கூட்டினார்கள். கட்சி நிர்வாகிகள் நியமனம், வேட்பாளர் தேர்வு, கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் போன்ற முக்கிய முடிவுகளில் இருவரின் அதிகாரப் போட்டியே இந்த மோதலின் அடிப்படை என்று கூறப்பட்டது.

ஆனால் அன்புமணியோ, ராமதாசை சிலர் ஆட்டிவைப்பதாகவும் துரோகிகள் சிலர் உடன் இருப்பதாகவும் குற்றம்சாட்டினார். மறுபுறம் தன்னை வேவு பார்க்க டெலிபோனில் ஓட்டுகேட்பு கருவி வைக்கப்பட்டது என்றும் அது அன்புமணியின் வேலை தான் என்றும் ராமதாஸ் குற்றம்சாட்டினார். தந்தை, மகனுக்கான மோதலால் கட்சி நிர்வாகிகள் மட்டுமில்லாமல், பாஜக, அதிமுக போன்ற கூட்டணிக் கட்சிகள் பாமகவுடன் கூட்டணி அமைப்பதில் கடும் குழப்பத்தில் உள்ளன. யாரை அணுகுவது எனத் தெரியாமல் தவிக்கின்றன.

தொடரும் இந்த மோதல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு முன்பாக தீர்க்கப்படாவிட்டால், கட்சியின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் என அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

தலைவர் பொறுப்பில் இருந்து விலகிய அண்ணாமலை - அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பாஜக..!

கர்நாடகாவில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் அண்ணாமலை. இவர் பா.ஜ.க. மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக அக்கட்சியில் இணைந்து பணியாற்றி வந்தார். இதனால் பா.ஜ.க. தமிழக மாநில துணைத்தலைவராக 2020-ம் ஆண்டு பதவியேற்றார். அதனை தொடர்ந்து 2021-ம் ஆண்டு தலைவராக பதவியேற்றார்.

இதன் பிறகு தமிழக பா.ஜ.க. அரசியல் களத்தில் மும்முரமாக செயல்பட்டு வந்தது. இருப்பினும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கும், அண்ணாமலைக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இதனை தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டது. அந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தோல்வியை சந்தித்தது.

இதற்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. இடம்பெறாததே காரணம். அதற்கு அண்ணாமலையே காரணம் என ஒரு சாரார் குற்றம்சாட்டினர். நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு பல திடுக்கிடும் சம்பவங்களை செய்து அண்ணாமலை பேசும்பொருளானார். அதில் ஒன்று, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும் கூறி, தமிழக அரசை கண்டித்து அண்ணாமலை ஒரு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

கோவையில் உள்ள தனது இல்லத்தின் முன்பு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தனக்குத்தானே சாட்டையால் அடித்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த போராட்டம், தமிழக அரசியல் களத்தில் முதல்முறை எனக் கூறப்படும் ஒரு நூதன முறையாக இருந்ததுடன், பெரும் பரபரப்பைக் கிளப்பியது. மேலும், தி.மு.க. ஆட்சியில் இருந்து அகற்றப்படும் வரை காலணி அணியாமல் வெறும் காலுடன் நடப்பேன் என்று சபதம் எடுத்த அண்ணாமலை சில மாதங்கள் செருப்பு அணியாமல் நடந்து வந்தார். இதன்பின் ஏப்ரல் 12-ந்தேதி அன்று தனது சபதத்தை முடித்துக்கொண்டு மீண்டும் காலணி அணியத் தொடங்கினார்.

இதனிடையே, நாடாளுமன்ற தேர்தலில் அடைந்த தோல்வியை போல் சட்டமன்ற தேர்தலிலும் தோல்வி ஏற்படக்கூடாது என்று கருதிய டெல்லி மேலிடம் அ.தி.மு.க.வை அணுகியது. அதற்கு அ.தி.மு.க. தரப்பில் தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை நீடிக்கும் வரை கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாக கூறியதாக தகவல்கள் வெளியாகின. இதனை தொடர்ந்து, ஏப்ரல் மாதம் தனது பா.ஜ.க. மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை விலகினார். அண்ணாமலைக்கு பிறகு நயினார் நாகேந்திரன் பா.ஜ.க. மாநில தலைவராக பணியாற்றி வருகிறார்.

முன்னதாக, அண்ணாமலை பா.ஜ.க. மாநில தலைவராக பதவி வகித்த போது ஆளும் கட்சிக்கு எதிரான கண்டனங்களையும், போராட்டங்களையும் தீவிரமாக முன்னெடுத்து வந்தார். மேலும், பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து விலகிய பின்னர் புதிய பா.ஜ.க. தலைவரான நயினார் நாகேந்திரனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனால் சில மாதங்கள் ஆக்டிவாக இல்லாமல் இருந்த அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குவார் என கூறப்பட்டது. ஆனால் தற்போது வரை அண்ணாமலை பா.ஜ.க.வில் தான் நீடிக்கிறார்.

சீமான் அறிவித்த விதவிதமான மாநாடு

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பல்வேறு கருப்பொருள்களை மையமாக வைத்து விதவிதமான மாநாடுகளை நடத்தி வருகிறார், சமீபத்தில் அரசு ஊழியர் கோரிக்கை மாநாடு (கடலூர் விருத்தாச்சலம், டிச 2025), தண்ணீர் மாநாடு (பூதலூர், நவ 2025), கடலம்மா மாநாடு, கள் விடுதலை மாநாடு போன்றவற்றை நடத்தியுள்ளார், மேலும் சட்டமன்ற தேர்தலை ஒட்டி மரம், மலை போன்ற தலைப்புகளில் புதிய மாநாடுகளையும் திட்டமிட்டு வருகிறார்.

நாம் தமிழர் இயக்கமாக செயல்பட்டு வந்ததை, கடந்த 2010-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியாக மாற்றி, தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் சீமான் செயல்பட்டு வருகிறார். நாம் தமிழர் கட்சி தொடங்கியதில் இருந்து நடைபெற்ற தேர்தல்களில் தனித்தே போட்டியிட்டு வருகிறது. இதனிடையே அங்கீகரிக்கப்படாத கட்சியாக இருந்து வந்தது.

இதனை தொடர்ந்து கடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 6.58 சதவீத வாக்குகளை பெற்றும் அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால், அக்கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் பறிபோனது. அதனை தொடர்ந்து கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 8.22 சதவீத வாக்குகளை பெற்றதால், மாநில கட்சி அங்கீகாரம் கிடைத்தது.

இதையடுத்து அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலை நோக்கி சீமான் விறுவிறுப்பாக பணியாற்றி வருகிறார். மற்ற அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி வரும் நிலையில், சீமான் 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவித்து வருகிறார். இந்த தேர்தலிலும் தனித்தே போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

சீமான் மீது பல்வேறு வழக்குகள், அவதூறு வழக்குகள் மற்றும் விமர்சனங்கள் உள்ள நிலையில், தனது அரசியலை நோக்கி பயணித்து வருகிறார். அவர் அறிவிக்கும் போராட்டங்கள் விமர்சனங்களை பெற்றாலும் பல்வேறு கருப்பொருள் சார்ந்த மாநாடுகளை நடத்தினார். அந்தவகையில், ஆகஸ்ட் மாதம் திருத்தணியில் மரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக 'மரங்களின் மாநாடு' மற்றும் மீனவர் நலன் மற்றும் கடல் சார்ந்த பிரச்சனைகளுக்காக கடந்த மாதம் "கடலம்மா மாநாடு", ஆடு-மாடு, மற்றும் மலைகளின் மாநாடு போன்றவற்றை நடத்தினார்.

இந்த மாநாடுகள் இயற்கை சார்ந்த பாதுகாப்பை கோரிக்கையாக முன்வைத்து நடத்தப்பட்டது. மேலும் மாற்றத்தை விரும்புபவர்களுக்கான ஒரு மாநாட்டையும் திருச்சியில் நடத்த திட்டமிட்டுள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார்.

ஜூலை மாதம் மதுரையில் 'மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை!' என்ற முழக்கத்துடன் நூற்றுக்கணக்கான ஆடு, மாடுகளை திரட்டி மாநாட்டினை சீமான் நடத்தினார். இந்த மாநாட்டில் நூற்றுக்கணக்கான ஆடு,மாடுகள் முன்பு சீமான் உரையாற்றியது இணையத்தில் பேசுபொருளானது. மேலும் ஆகஸ்ட் மாதம் மாடு மேய்ப்பதற்கான தடையை நீக்கக் கோரி மலை ஏறி மாடு மேய்க்கும் போராட்டமாக மலைகளின் மாநாடு நடத்தப்பட்டது.

மனிதர்கள் இல்லாது மரங்கள் வாழும், ஆனால் மரங்கள் இல்லாது மனிதர்கள் உட்பட எந்த உயிரினமும் வாழ முடியாது என்ற கருத்தை வலியுறுத்தி, மரங்களை வளர்ப்பதன் அவசியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்துப் பேசுவதாகும். இம்மாநாட்டில் சீமான் கலந்துகொண்டு, அப்துல்கலாம், நம்மாழ்வார், நடிகர் விவேக் போன்றோரின் பெயரில் மரக்கன்றுகள் நட்டு, மரங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசினார்.

ஆதி நீயே, ஆழித்தாயே (கடலே நீயே, கடலன்னையே நீயே) என்ற முழக்கத்துடன் கடலையும் கடல்வாழ் உயிரினங்களையும் பாதுகாத்தல், கடல்சார்ந்த வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தலை வலியுறுத்தி கடலுக்குள் சென்று மாநாடு நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து ஆறுகளுக்கும் மாநாடுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாடுகள், விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போன்ற பல்வேறு தரப்பினரின் பிரச்சனைகளை வெளிக்கொண்டு வரவும், மாற்றத்தை விரும்பும் மக்களை ஒன்றிணைக்கவும் உதவுவதாக கூறுகின்றனர். சீமான் அறிவித்த மாநாடுகள் விமர்சனங்களை ஏற்படுத்தினாலும் அனைவராலும் சிந்திக்கப்பட வேண்டிய விஷயமாக கூறப்படுகிறது.

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்: பேச்சுப் பொருளான “யார் அந்த சார்?”

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைதான ஞானசேகரன் சம்பவத்தன்று 'சார்' என்று குறிப்பிட்டு பேசியதாக தகவல் வெளியானது. இதையடுத்து யார் அந்த சார்?' என்ற கேள்வி தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

யார் அந்த சார்? என்று தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி வந்தார். இதற்கு பதில் அளித்த தி.மு.க. அமைச்சர்கள், அப்படி யாரும் இல்லை, மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்வதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த ஆண்டின் சட்டசபையின் முதல் கூட்டத்திற்கு வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் யார் அந்த சார்? என அச்சிடப்பட்ட பேட்ஜ் அணிந்து வந்தனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, 'யார் அந்த சார்?' என்று கேள்வி எழுப்பி, அமைச்சர்கள் யாரையோ காப்பாற்றப் பேசுவதாக குற்றஞ்சாட்டினார். 'யார் அந்த சார்?' என்ற கேள்வியுடன் தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க. சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அ.தி.மு.க. சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் யார் அந்த சார் (SIR)? #SaveOurDaughters என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

“யார் அந்த சார்?” என்ற வாசகம் சமூக வலைதளங்களில் கடும் விவாதத்திற்குள்ளானது.

1 More update

Next Story